சிறப்புக் கட்டுரைகள்

இப்படிக்கு இவர்கள்: அரசு எங்கள் துயரைத் துடைக்க வேண்டும்!

செய்திப்பிரிவு

நான் சென்னையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறேன். 27.08.21 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் முகம்மது ரியாஸ் எழுதிய ‘தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர்களின் துயரக் கதை’ என்ற கட்டுரை, கடந்த 15 மாதங்களாகத் துயரில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பொதுச் சமூகத்துக்கு நாங்கள் படும் துயரம் தெரியவில்லை. எங்களுக்கு ஆதரவாக எந்தக் கட்சியும், எந்த அமைப்பும் இதுவரை ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை. நாங்கள் அமைப்பாகத் திரள இயலாத குரலற்றவர்கள். எங்களுக்காக உங்கள் பத்திரிகையின் கட்டுரை கண்ணீர் சிந்தியுள்ளது. மிக்க நன்றி. உயர் கல்வித் துறை சார்ந்து எங்களிடம் சில கோரிக்கைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 150 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுவந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் 2013-ல் மட்டும்தான் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 2019-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிட்டாலும் அதன் பிறகு, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னைப் போன்ற பலர், பல ஆண்டுகளாக அரசுப் பணிக்காகக் காத்திருக்கிறோம். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் எனப்படும் தற்காலிக ஆசிரியர்களைக் குறைந்த சம்பளத்தில் வைத்துக்கொண்டு அரசு காலம் தாழ்த்திவருகிறது.

அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிவரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரப்படுத்தவிருப்பதாகக் கடந்த அதிமுக அரசு அறிவித்தது. கடந்த அதிமுக ஆட்சியில் எவ்வித வெளிப்படையான பத்திரிகை அறிவிப்பும் இன்றி அமைச்சர்கள், கல்லூரி முதல்வர்களின் சிபாரிசின் பேரில் இடஒதுக்கீடு எதுவும் பின்பற்றாமல் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு கௌரவ விரிவுரையாளர்களுக்குத் தற்காலிகப் பணிவாய்ப்பு வழங்கப்பட்டதாக நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கௌரவ விரிவுரையாளர்களை மட்டுமே பணி நிரந்தரப்படுத்த முனைவது முறைகேடுகளுக்கும் ஊழலுக்குமே வழிவகுக்கும். அனைவருக்கும் பொதுவான தெரிவு முறையே சரியாக இருக்கும்.

அரசு இந்தக் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து கௌரவ விரிவுரையாளர்கள், தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் ஆகியோரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.

- பெயர் தெரிவிக்க விரும்பாத உதவிப் பேராசிரியர், சென்னை.

SCROLL FOR NEXT