சிறப்புக் கட்டுரைகள்

இரு அறிஞர்களும் இந்தியப் பொருளாதாரமும்!

பூஜா மெஹ்ரா

இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரான அர்விந்த் சுப்ரமணியன் பொருளாதார வளர்ச்சி குறித்து 2015-ல் மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார். இனி, மிகுந்த ஏமாற்றத்துடன் பேச்சை நிறைவுசெய்வார்! பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துவருகிறது; நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் ஜி.டி.பி. வளர்ச்சி 7.2%, கடந்த ஆண்டு இதே காலத்தின் தொடக்கத்தில் இருந்த 7.5%-ஐவிடக் குறைவு. குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இனியும் வளர்ச்சி சிறப்பாக இருக்காது என்று சுப்ரமணியனே தெரிவிக்கிறார். நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கைகளைச் சிறிது காலத்துக்கு தாமதப்படுத்துமாறு அவர் கூறுவதை, ஏற்பவர் யாரும் அரசில் இல்லை.

ஆலோசகராகப் பொறுப்பேற்ற ஒரு மாதத்துக்கெல்லாம், நாட்டின் ஜி.டி.பி. 8.1% முதல் 8.5% வரை இருக்கும் என்றார். ‘மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் இல்லாவிட்டாலும்’ வளர்ச்சி அதிகரிக்கும் என்றார். (சீர்திருத்த நடவடிக்கை வராது என்று மட்டும் சரியாக ஊகித்து விட்டார்!). மானியங்களில் சீர்திருத்தம், நேரடிப் பணப் பயன், ஏழைகளுக்கும் வங்கிகளில் கணக்கு தொடங்குவது போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று கருதிவிட்டார் போலும்.

ஏற்றுமதியில் பின்தங்குவோம் என்று மதிப்பிடத் தவறிவிட்டார். தனியார் முதலீட்டை ஊக்குவிக்க பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.70,000 கோடி அடித்தளக் கட்டமைப்புக்கும் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும் உதவும் என்று கருதிவிட்டார். அவர் விரும்பிய வகையில்தான் அரசும் ஊக்குவிப்புகளை வழங்கியது. ஆனால், வளர்ச்சியை வேகப்படுத்த அது போதவேயில்லை. 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் நிலவிய தேக்க நிலையும், ஊழல் புகார்களும் பொருளாதார வளர்ச்சியை முடக்கிப்போட்டன.

தொழில்துறை வளர்ச்சி

இப்போதிருக்கும் நிலவரப்படி தொழில்துறை வளர்ச்சி 5%-ஐத் தாண்டாது. தொழில்துறைக்கு வங்கிகள் தரும் கடன், கடந்த 20 ஆண்டுகளில் இருந்திராத வகையில் மிகவும் குறைவாகவே நீடிக்கிறது. இந்தியத் தொழில்நிறுவனங்களின் வரவு-செலவு அறிக்கைகளில் கடன் சுமைதான் மலைபோலக் காணப்படுகிறது. 1952-53 காலத்துக்குப் பிறகு, மிகவும் மோசமான அளவுக்கு ஏற்றுமதிகள் வீழ்ச்சி அடைவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

தொழில்துறைக்கு ஆதரவான அரசு, இந்த அறிகுறிகளை முன்னதாகவே அடையாளம் கண்டு பரிகார நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். 2015-ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, சீனாவை மிஞ்சிவிடும் என்று சில சர்வதேச முகமைகள் கூறியதில் புளகாங்கிதம் அடைந்து பூரித்தபடியே இருந்துவிட்டனர். (சீனப் பொருளாதாரம் இந்தியாவைப் போல 5 மடங்கு பெரியது என்பதால், வளர்ச்சி வீதம் குறைந்தாலும் அதன் பங்களிப்பு கணிசமாகவே இருக்கும்.) இந்தியா பொருளாதார வளர்ச்சியில் மிஞ்சியது, காரணம் சீனத்தின் பொருளாதார வளர்ச்சி கணிசமாகக் குறைந்தது! இரு நாடுகளையும் ஒப்பிடுவதே அபத்தமானது. ஆனால், ஆட்சியிலும் அரசிலும் இருந்த பலருக்கு இது உறைக்கவே இல்லை.

வளர்ச்சி ஏன் மந்தப்படுகிறது?

ஐ.மு.கூ. ஆட்சியின்போது ‘4 இயந்திரங்களின் சக்தி’ பொருளாதாரத்தை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. அவற்றில் 2 மட்டுமே இப்போது இயங்குகின்றன. அவை அரசு முதலீடு, தனியாரின் நுகர்வு. ஏற்றுமதிகள், தனியார் முதலீடு என்ற 2 இப்போது செயலிழந்து நிற்கின்றன. அந்த ஆட்சியின்போது முதலீடு பெருகியது.

வட்டி வீதம் குறைந்தால் மீண்டும் முதலீடு செய்ய ஊக்குவிப்பு ஏற்படும். ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அரசும் ரிசர்வ் வங்கியும் ஓராண்டுக்கு முன்னால் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி பணவீக்க விகிதத்தை (விலைவாசி உயர்வு) கட்டுப்படுத்துவதே பணக் கொள்கையின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி இதை எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. அதற்காக நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் இலக்குகளை நிர்ணயிக்கிறது. ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டிக் குறைப்பை அரசுடைமை வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அப்படியே வழங்காமல் தாமதப்படுத்துகின்றன. தங்களுடைய லாபத்தை அதிகப்படுத்திக்கொள்ள இப்படிச் செய்கின்றன.

பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ந்துவிடும் என்று சுப்பிரமணியன் கூறிய அதே நேரத்திலேயே, பணவீக்க விகிதத்தை 6%-க்கு மேல் அனுமதித்துவிடக் கூடாது என்ற இலக்கை ரகுராம் ராஜன் நிர்ணயித்தார். சுப்பிரமணியனும் ரகுராம் ராஜனும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) அமைப்பில் முன்னர் இணைந்து பணியாற்றியவர்கள். நிதியாண்டுத் துவக்கத்தில் பொருளாதார ரீதியாக உடைந்துவிடக்கூடிய 5 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் அடையாளம் காணப்பட்டது.

பணப் புழக்கத்திலும் நடப்புக்கணக்குப் பற்றாக்குறையிலும் கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்தாலும் அதிக சேதம் இல்லாமல் பிற 4 நாடுகளைவிட மீண்டது இந்தியாதான். அதுமட்டுமல்ல, நிதியமைச்சக அதிகாரிகளும் ரிசர்வ் வங்கியும்கூட செலவுகளை இழுத்துப்பிடித்து பற்றாக்குறை கட்டுமீறிப் போகாமலிருக்க உதவினர். பேரியல் பொருளாதார அடையாளங்களில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுவிடாமலிருக்க உதவிய ரகுராம் ராஜன் பாராட்டுக்குரியவர். உலக அரங்கில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்துவருகிறது, சரக்குகளின் மீதான விலையும் அப்படியே. அப்படியிருந்தும் வளர்ச்சியை அதிகப்படுத்த அரசு தவறிவிட்டது.

வளர்ச்சி எப்படி இருக்கும் என்று கணிப்பதில் ராஜன் சிறப்பாகச் செயல்பட்டார். ஜி.டி.பி. வளர்ச்சிவீதம் அதிகமாக இருக்காது என்று ஒரு முறை அல்ல இரு முறை கணக்கிட்டு, உத்தேச அளவைக் குறைத்தார். ஜூலை மாதத்தில்கூட அர்விந்த் சுப்ரமணியன் வளர்ச்சி 8.1% முதல் 8.5% ஆக இருக்கும் என்றார். ராஜனோ 7.4% தான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். நவம்பர் இறுதி வரையில் நிதித் துறை அதிகாரிகள் மிதப்பில்தான் இருந்தனர். புதிய தரவுகள் வெளிவரத் தொடங்கியதும்தான் அவர்களுக்கு உண்மை புரிந்தது. வேறு வழியில்லாமல் அரசும் பொருளாதார வளர்ச்சிவீதம் 7.5% என்று அறிவிக்க நேர்ந்தது. அரசின் தரவுகளைப் புரிந்துகொள்வதும் எதிர்காலம் குறித்துக் கூறுவதும் கடினம் என்று கூறிய சுப்பிரமணியம், ‘நான்கூட அப்போதே சொன்னேன்’ என்று பிறகு பேச ஆரம்பித்தார்.

குறைந்த வட்டிவீதத்துக்கான சூழல்

இதுவரை கட்டிக்காத்த நிதிநிர்வாக நடவடிக்கைகளைக் கைவிட்டால் அது பேரியல் பொருளாதார நிலைத்தன்மையைச் சீர்குலைத்துவிடும். உதவுவதற்குப் பதிலாக வளர்ச்சிக்கு ஊறு விளைவித்துவிடும். அரசும் ரிசர்வ் வங்கியும் எதிரெதிராக நின்று செயல்படுவதைப் போலாகிவிடும். முதலீடு, வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக அரசு செலவை அதிகப்படுத்தினால் அதற்கான நிதிக்காகக் கடன் வாங்க நேரும். கடன் அதிகரித்தால் வட்டி வீதமும் அதிகரிக்கும். அதனால், அரசிடம் குறைந்த வட்டியில் கடன் பெற விரும்பும் முதலீட்டாளர்கள் அம்முடிவைக் கைவிடுவார்கள். அது வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குப் பதில் வீழ்ச்சி அடைய வைக்கும்.

பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் வட்டிவீதம் தனியார் முதலீட்டுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் அளவுக்கு உதவ முடியாமல் அதிகமாகவே இருக்கிறது. அரசு தன்னுடைய முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பது நியாயமே ஆனாலும், தனியாரும் வங்கிகளிடம் கடன் பெறும் வகையில் வட்டிவீதம் குறைவாக இருப்பது அவசியம்.

பட்ஜெட் பற்றாக்குறையைத் தள்ளிவைக்காமலேயே பொது முதலீட்டை அதிகப்படுத்த முடியும். இப்போதைய மத்திய அரசின் செலவுகளில் ஆக்கபூர்வமான ஒரு மாற்றம் இருக்கிறது. மூலதனச் செலவுகளைத்தான் இந்த அரசு அதிகம் செய்கிறது. அதன் நீண்டகாலப் பயன் நாட்டுக்கும் அரசுக்கும்தான் கிடைக்கும். அரசின் தேவையற்ற பல செலவுகளைக் குறைப்பதன் மூலமே முதலீட்டுக்கு அதிக நிதியை விடுவிக்க முடியும். முக்கியமான துறைகளில் அரசின் பங்குகளை விற்க அரசியல்ரீதியான களத்துக்கு அரசு செல்ல வேண்டும்.

வரவைவிட செலவு அதிகமாக இருந்துவிடக் கூடாது என்று கவனமாகப் பார்த்துக்கொள்வதால் பொருளாதார வளர்ச்சி வேகம் பெறவில்லை என்று கூறக்கூடும். ஆனால், மிச்சப்படும் பணம் மீண்டும் நாட்டின் துறைகளிலேயே முதலீடு செய்யப்பட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம், ஓய்வூதியம் போன்றவற்றை அதிகரித்து வழங்குவதால் அந்தத் தொகை மீண்டும் பொருளாதாரத்துக்கே வந்து சேரும். பண்டங்கள், சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும். பணப் புழக்கத்தையும் சுழற்சியையும் அது வேகப்படுத்தும். இதைப் போல அரசு எந்த வகையில் அல்லது இனத்தில் செலவை மேற்கொண்டாலும் அது நாட்டின் பொருளாதாரத்துக்கே நல்லது.

அர்விந்த் சுப்பிரமணியன் தன்னுடைய பொருளாதார ஆரூடத்தைச் சிறிது காலத்துக்கு முன்னதாகவே திருத்தியிருந்தால் வளர்ச்சியும் வளர்ச்சி பற்றிய நம்முடைய கண்ணோட்டமும் களையிழந்து போயிருக்காது. வளர்ச்சி அதிகமாகத்தான் இருக்கும் என்று ரகுராம் ராஜனுடன் பொது இடத்தில் பந்தயம் கட்டுவதைப் போலக் கூறினார் சுப்பிரமணியன். அதில் அவர் தோற்கப்போவதைப் போலத் தெரிகிறது.

தமிழில்: சாரி © ‘தி இந்து’ ஆங்கிலம்

SCROLL FOR NEXT