சிறப்புக் கட்டுரைகள்

வாராக் கடனுக்குப் பின்னுள்ள அரக்கர்கள் யார்?

சி.பி.கிருஷ்ணன்

பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்று வங்கிகளின் வாராக் கடன். பொதுத்துறை வங்கியோ, தனியார் வங்கியோ பொதுவாக வங்கிகள் எதிர்கொள்ளும் பெரும் சவால் வாராக் கடன் பிரச்சினை. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயத்தை நோக்கித் தள்ளக் கையாளும் உத்திகளில் ஒன்றாகவும் ‘வாராக் கடன் பிரச்சாரம்’ கையாளப்படுகிறது. உண்மையில், வாராக் கடன் பிரச்சினைக்குப் பின்னுள்ள அரசியல் என்ன?

வாராக் கடனுக்கு அதற்கு முன்பிருந்த பெயர் ‘மோசமான கடன்’ (Bad Loan). 1991-களிலிருந்து பயன்படுத்தப்படும் பெயர், ‘செயல்படாத சொத்து’(Non Performing Asset - NPA). இப்போது புரியுமே, இதன் பின்னுள்ள சூத்திரதாரிகள் யார் என்று!

2015 மார்ச் இறுதியில் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.2,79,000 கோடி. இதில் ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளின் வாராக் கடன் ரூ.74,000 கோடி. மற்ற பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.2,05,000 கோடி. மொத்த வாராக் கடனில் 73% வாராக் கடன் ஒரு கோடி ரூபாயும் அதற்கு மேலும் கடன் வாங்கி திருப்பிக் கட்டாதவர்களால் உருவாக்கப்பட்டது என்பதை ஆய்வுகள் சொல்கின்றன.

2012 - 2015 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள்

ரூ.1.14 லட்சம் கோடி வாராக் கடனைத் தள்ளுபடி செய்தன. 2012-13-ல் ரூ.27,231 கோடியும், 2013-14-ல் ரூ.34,409 கோடியும், 2014-15-ல் ரூ.52,542 கோடியும் பொதுத்துறை வங்கிகளால் தள்ளுபடிசெய்யப்பட்டன. சரி, இப்படித் தள்ளுபடியான கடன்களின் உரிமைதாரர்கள் யார்? அந்த விவரத்தைப் பொதுத்துறை வங்கிகள் மக்கள் பார்வைக்கு வெளியிட அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் கடனை வசூல் செய்ய வாய்ப்பிருந்தும் திருப்பிக் கட்டாத பெருநிறுவனங்களின் கடன் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரம் தெரியவரும்.

வாராக் கடன் ரூ. 4 லட்சம் கோடி

வீரப்ப மொய்லி தலைமையிலான நிதித் துறை நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையைச் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் 2016 ஏப்ரல் மாதம் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.4 லட்சம் கோடியை எட்டும் என்று கணித்துள்ளது.

“எல்லா கடன்களையும், குறிப்பாக வசதி இருந்தும் வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத கடனாளிகளின் கடனைத் தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆய்வறிக்கை 6 மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கி எல்லா பெரிய கடன்களையும் கண்காணிக்க அதிகாரம் படைத்த குழுக்களை நியமிக்க வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் கம்பெனிகளை வங்கிகள் கையிலெடுக்க வேண்டும். வேண்டுமென்றே திருப்பிக் கட்டாத கம்பெனிகளின் நிர்வாகத்தைக் கட்டாயமாக மாற்ற வேண்டும்.

அதிக அளவில் கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிக் கட்டாத முதல் 30 (பெரிய) கடனாளிகளின் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்களின் பெயர்களை இனியும் ரகசியமாக வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. இதற்கு தகுந்தாற்போல் ரிசர்வ் வங்கி தங்களுடைய வழிகாட்டும் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும்...” போன்ற பல பரிந்துரைகளை இந்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

பெருநிறுவனங்களால் ஏற்படும் வாராக் கடனை வசூலிக்க வலுவான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வங்கி ஊழியர் இயக்கம் நீண்ட காலமாகப் போராடிவருகிறது. வங்கிகள் பலவீனப்படுவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

- சி.பி. கிருஷ்ணன், பொதுச் செயலாளர்,
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு.
தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com

SCROLL FOR NEXT