இன்றைய இளைஞர்களில் கணிசமானோர் கொண்டாட்டமோ துக்கமோ எதுவென்றாலும் மது விருந்து உண்டா என்று கேட்பது மிகவும் சாதாரண விஷயமாகிவிட்டது. அவ்வப்போது தன்னை மறக்கவும் பொழுதுபோக்காகவும் தொடங்கும் இந்த மதுப் பழக்கம், படிப்படியாகத் தன்னைத் தொட்ட மனிதனை அடிமைப்படுத்திடவே செய்கிறது. சமூக, பொருளாதார, பொதுநலப் பிரச்சினைகளை உருவாக்குவதில் குடிப்பழக்கம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கானவர்களின் மரணத்துக்கு மது அருந்துவதன் பாதிப்புகள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. உண்மையில், ஓர் ஆண்டின் உற்பத்தித் திறன் இழப்பும், மது அடிமை தொடர்பான உடல்நலச் செலவும் பல ஆயிரம் கோடிகளை விஞ்சிவிடுகிறது.
நீதிமன்றங்கள் அறிவுறுத்தியும்கூட சாலையோர மதுக் கடைகளின் கதவுகள் முழுமையாக மூடப்படவில்லை என்பது கவலைக்குரியது. அரசே மதுக் கடைகளை மூடினாலும் கள்ளச்சாராயமும் அதனைத் தொடர்ந்து, போலி மதுபானமும் பெருகிவிடும் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. குடி என்பது ஒரு நோய் என்பதை அறியாமல், போதைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களிடம் “குடிக்க வேண்டாம்” என மருத்துவர்கள் கூறும் அறிவுரை அவர்களின் காதுகளில் கேட்பதில்லை.
குடிப் பழக்கத்துக்கு அடிமையாவதால், தனிமனிதனாகத் தன்னைச் சுற்றி சமூகத்தில் என்ன நடக்கிறது என்று உணராத விழிப்புணர்வு அற்ற நிலையில், தன்னையே அழித்துக்கொள்ளும் நிலை உருவாகிறது. மதுவால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றித் தெரியாமல், உற்சாகம் தரும் பொருளாக மட்டுமே அதனைக் கருதுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 7 இந்தியர்களில் ஒருவர் குடிகாரர் எனத் தெரிவித்துள்ளது. இந்திய மக்கள்தொகையில் சுமார் 15% பேர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். மதுப் பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருபவர்களில் உத்தர பிரதேசம், ஆந்திரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
சாதாரணமாக ஒருவர் குடிக்கும் மதுவில் எத்தனால் (எத்தில் ஆல்கஹால்) என்ற பொருள் அடங்கியிருக்கிறது. கலப்படம் இல்லாத எத்தனால் எரிச்சலூட்டும் ஒருவித சுவையைக் கொண்டிருக்கும். சர்க்கரை அடங்கிய பார்லி போன்ற தானியங்களையும் திராட்சை போன்ற பழங்களையும் புளிக்க வைப்பதன் மூலம் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. மது அருந்தும்போது அது மனிதனின் நரம்புகளைத் தளர்ச்சியடையச் செய்து, அதன்மூலம் மைய நரம்புமண்டலத்தையும் தளர்வுறச் செய்கிறது.
ஆரம்பத்தில் குடிப்பழக்கம் சிலரிடம் ஒருவித மனத் தூண்டுதலை ஏற்படுத்தும். ஆனால், தொடர்ந்து குடிப்பதால் மந்த நிலைதான் உண்டாகும். எந்த அளவுக்கு நிறையக் குடிக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு மூளை மந்தம் ஏற்படும். மது முதலில் எண்ணங்கள், உணர்வெழுச்சி மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்றவற்றைப் பாதிக்கிறது. பின்பு கல்லீரல், கணையம், இதய நாள மண்டலம் போன்றவற்றையும் பாதிக்கிறது.
தொடக்கத்தில் அளவாகத் திறக்கப்பட்ட மது பாட்டில்கள் வாழ்க்கை முடியும் வரை தொடர்கின்றன. சிலருக்குக் காலை எழுந்தவுடன் ஆரம்பித்து இரவு வரை அடுத்தடுத்துத் தொடர்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தெரு ஓரத்தில் தவளைகளைப் போல் விழுந்து கிடக்கும் மது அடிமைகளின் எண்ணிக்கை பெருகுவது கவலையளிக்கிறது. குடிப் பழக்கத்தால் குடும்பங்கள் சிதைந்து, ஆதரவற்ற குழந்தைகளும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் அதிகரிப்பது வேதனையானது. அடுத்த வேளை மதுவுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் மனம், அப்பழக்கத்துக்கு அடிமையானவரை நாளடைவில் ஒரு குற்றவாளியாக உருமாற்றுகிறது. இன்று நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கும் மது ஒரு காரணமாகவே இருக்கிறது.
இன்றைய இளம் தலைமுறையினரில் ஒருசிலர் தாய்மொழிப் பற்று, வாழ்க்கைமுறைக் கல்வி, குடும்ப உறவு, அரசியல் மாற்றம் மற்றும் பண்பாடு குறித்த எந்தவிதமான எண்ணங்களும் சிந்தனையும் இல்லாத தட்டையான மனநிலையிலும் நம்பிக்கையின்மை, நாடோடித்தனம், பதற்றம், சலிப்பு போன்றவை கலந்து வாழும் சூழலில் இருக்கின்றனர். இவர்களின் எதிர்காலம் பற்றிய கனவுகள் கவலையளிப்பதாக உள்ளன. இளைஞர்களின் இந்த நிலைக்கு மதுவும் போதையுமே காரணமாக இருக்கின்றன.
மதுவுக்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். உரையாடல்களையும் பொறுப்பு களையும் நினைவில் கொள்ளாமை, பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் குறைதல், மது கிடைக்காவிட்டால் அதிக எரிச்சல் அடைதல், வீட்டிலோ அலுவலகத்திலோ காரிலோ அல்லது மறைவான இடங்களிலோ மதுவைப் பதுக்கிவைத்தல், இயல்பான நிலை அல்லது நல்ல உணர்வைப் பெறுவதாக நினைத்து மீண்டும் மீண்டும் குடித்தல் போன்ற அறிகுறிகளை வைத்து எளிதில் அவர்களைக் கண்டறியலாம்.
இளைஞர்களிடம் குடிப் பழக்கம் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. வேலைகளிலும் பொழுதுபோக்கிலும் ஆர்வமின்மை, எப்போதும் பதற்றம், சிடுசிடுப்புடன் காணப்படுதல், நட்புறவுகளில் மாற்றம், பழைய நண்பர்கள் மாறிப் புதிய நண்பர்கள் வருதல், கல்வியில் தரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றனவா எனப் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக மதுவை மறந்தவர்களாக அல்லது விரும்பாதவர்களாக இருக்க வேண்டும். மதுப் பழக்கத்தின் விளைவுகளைப் பற்றி அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
- துரை.நீலகண்டன், மருத்துவர். தொடர்புக்கு: dharshana.ortho@gmail.com