பன்னிரண்டாவது ஒலிம்பிக் பந்தயத்துக்காக ஃபின்லாந்தின் தலைநகரம் ஹெலின்ஸ்கி 1940-ம் ஆண்டு தயாராகிக்கொண்டிருந்தது. அத்துடன் ஐரோப்பா இரண்டாம் உலகப் போருக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில், இந்தியாவில் தலைமைத் துணைக் கணக்காளராக இருந்த நாகேந்திர நாத் சென்னுக்கு, காலனிய அரசு நிர்வாக வலைப்பின்னல் வழியாக ஒரு செய்தி வந்து சேர்ந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல அவரது 15 வயது மகள் இலா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தகவல்தான் அது.
நாகேந்திர நாத் சென்னுக்கு அது முற்றிலும் எதிர்பாராத செய்தி ஒன்றும் அல்ல. கல்கத்தாவைச் சேர்ந்த ஆங்கில, வங்க செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கங்களில் தடகள வீராங்கனை இலா பெற்ற வெற்றிகள் தொடர்ந்து இடம்பிடித்திருந்த நேரம் அது. தனது ஆறு குழந்தைகளில் மூத்தவரான இலாவின் விளையாட்டு வாழ்க்கையில் நாகேந்திர சென் தனிப்பட்ட வகையில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார். வங்கத்தைச் சேர்ந்த ஜாதிய ஜுபா சங்கா என்ற விளையாட்டு கிளப் சார்பில் 1937, 1938 எனத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட பெண்களுக்கான ஜூனியர் சாம்பியன்ஷிப் டைட்டில்களையும் வென்றார். உள்ளூர் செய்தித்தாள்கள், இதழ்கள் பலவும் ஒலிம்பிக் அழைப்பைப் பெற்ற முதல் வங்கப் பெண் என்று விவரித்தபோது, வங்க வீடுகளிலும் அவர் பெயர் பிரபலமானது. ஆனால், அதிகாரபூர்வமான அரசுக் கடிதம் எதுவும் அதற்குச் சான்றாக இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டாம் உலகப் போரை முன்னிட்டு, காலனிய நிர்வாகம் ஒலிம்பிக் விளையாட்டு ரத்துசெய்யப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருக்கக்கூடும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள பெண் தடகள வீராங்கனைகள் குறித்து எனது ஆய்வைத் தொடங்கியபோதுதான், இலாவின் பெயரை முதல் முறையாகக் கேள்விப்பட்டேன். இந்தக் கோடையில் கரோனாவின் இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்புக்குப் பின்னர் அவர் பெயர் என் மனத்தில் மீண்டும் தலைதூக்கியது. திரும்ப இணையத்துக்குச் சென்று எனது தேடலைத் தொடங்கினேன். மந்திரம்போல அவரது குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. அவரது மகன் கல்கத்தாவிலும் அவரது பேரன் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது.
வங்கத்தைப் பொறுத்தவரை 1940-கள் மிகவும் சேதாரத்தை ஏற்படுத்திய தசாப்தமாகும். வங்கப் பஞ்சத்தில் 30 லட்சம் பேர் மரணமடைந்தனர். இது அரசுக் கணக்கு. இலாவின் வாழ்க்கையையும் அரசியலையும் வங்கப் பஞ்சம்தான் வடிவமைத்தது. 1942-ல் பெத்தூன் பள்ளியில் இன்டர்மீடியட் பரீட்சையில் முதல் வகுப்பில் இலா தேறிப் பட்டம் பெற்றார். பெத்தூன் கல்லூரியில் சேர்ந்து வங்க மொழியில் இளங்கலையில் சேர்ந்தார்.
“பெத்தூன் கல்லூரியில் சேர்ந்தபோது, நான் மாணவிகள் கமிட்டியில் சேர்ந்து மார்க்சியம் குறித்து விவாதிக்கத் தொடங்கினேன். இதை முதலில் ரகசியமாகச் செய்தோம். படிப்படியாக எனது நிவாரண சேவைப் பணியின் வழியாகக் கட்சி ஊழியராக மாறினேன்’’ என்று கவிதா பஞ்சாபி என்ற ஆய்வாளர் எழுதியுள்ள நூலில் இலா பகிர்ந்துள்ளார்.
1944-ல் இலாவின் தந்தை, தன் மகளுக்கு ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த ராமேந்திரநாத் மித்ரா என்ற மாப்பிள்ளையைப் பார்த்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காக வேலை பார்த்த அவர், வேறு வேலைகளில் ஈடுபடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இலா தன்னை ஒரு பெண்ணியராக அடையாளம் கண்டுகொண்டதால், தனக்குப் பார்த்த மாப்பிள்ளையின் அரசியல் ஈடுபாட்டைத் தெரிந்துகொண்டு திருமணத்துக்குச் சம்மதித்தார். தேசப் பிரிவினையின்போது இலாவின் மாமியார் தனது சொத்துகளை முன்னிட்டு, கிழக்கு வங்கத்திலேயே (அப்போதைய பாகிஸ்தானில் இருந்த பகுதி) தங்க முடிவுசெய்தார்.
அதுவரை சந்தால் குடியானவர்கள் அறுவடையில் பாதியை நில உரிமையாளர்களுக்குக் கொடுத்துவந்தனர். ஆனால், மூன்றில் ஒரு பங்கை மட்டுமே நிலஉரிமையாளர்கள் பெற வேண்டுமென்று இலாவும் அவரது கணவரும் போராடினார்கள். தேபகா (மூன்றில் இரண்டு பங்கு) என்று சொல்லப்படும் இயக்கத்தின் மையக் கோரிக்கை இதுதான். பஞ்சத்தின் நினைவு தொடர்ந்த காலத்தில் வறுமையையும் பசியையும் எதிர்த்துப் போராடுவதற்கு இந்தக் கூலி உயர்வு உதவும். இலாவும் ராமேந்திர நாத்தும் குடியானவர்களோடு வாழத் தொடங்கினர். 1950-ல் ஜனவரி மாதம் 5-ம் தேதி நச்சோலில் நடந்த போலீஸ் தேடலில் நான்கு காவல் துறையினர் இறக்க நேரிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பழிவாங்கும் வகையில் குடியானவர்களுடன் நச்சோல் ரயில் நிலையத்திலிருந்து இலா தப்பிக்க முயன்றபோது கைதுசெய்யப்பட்டார்.
நச்சோல் தானாவில் இலா நிர்வாணமாகத் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு, உணவும் நீரும் கொடுக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தார். இரவில் வந்த துணை ஆய்வாளரும் பிற போலீஸ்காரர்களும் அவரது சிறை அறைக்குள் நுழைந்து ரைபிள்களைக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கினார்கள். அந்த நள்ளிரவில் துணை ஆய்வாளரின் குடியிருப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது இரண்டு கால்களும் நொறுக்கப்பட்டன.
இதுபோன்ற பெருங்கொடுமைகள் நான்கு நாட்களாகத் தொடர்ந்தன. கடைசியில் கடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், நவாப்கஞ்ச் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சிறை வார்டனாக இருந்த ஓ.சி.ரஹ்மான், இலாவுடன் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்தவர். பஞ்ச கால நிவாரணப் பணிகளில் சந்தித்தவர். அவர் ஒரு மருத்துவரை இலாவுக்குச் சிகிச்சை செய்வதற்காக ஏற்பாடுசெய்தார். கொடும் காவல் சித்ரவதையைத் தாண்டி சிறையிலிருந்து வெளியே வந்து, 1956-ல் தன்னால் மீண்டும் நடக்க முடிந்ததற்குக் காரணம் தனது தடகளப் பயிற்சிதான் என்று கூறியிருக்கிறார். அவர் சிறையில் அடைந்த சித்ரவதையின் தடம், அவரை நிரந்தரமாகக் கெந்திக் கெந்தி நடக்க வைத்தது.
1951-ல் இலா, ராஜ்சாஹி நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை அளித்தார். தனக்கு நடந்த பாலியல் வல்லுறவை ஒரு பெண் பகிரங்கமாக விவரித்த துணைக் கண்டத்தின் முதல் சம்பவமாக இருக்கலாம். இலாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பேகம், இந்த வல்லுறவு சம்பவத்தை வெளியிடுவதற்கு இலாவுக்குச் சங்கடம் இருந்ததாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் அவரை தைரியப்படுத்தி, அந்த வாக்குமூலத்தை கிழக்கு வங்கம் முழுக்கப் பிரசுரமாக விநியோகித்ததாகவும் கூறுகிறார்.
சாட்சியங்கள் இல்லாத நிலையில், இலாவின் மேல் கொலைக்குற்றம் நிரூபணம் ஆகவில்லை. ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். அவரது வாக்குமூலம் காரணமாக நீதிபதியும் சிறை அதிகாரிகளும் அவருக்குக் கருணை காட்டியிருக்க வேண்டும்.
1956-ல் மருத்துவமனையிலிருந்து நேரடியாக விடுதலையான இலா, தனது முயற்சியின் காரணமாக முதுகலைப் பட்டப் படிப்பை முடித்து, ஐந்து ஆண்டுகளுக்கு விரிவுரையாளராக சிவநாத் சாஸ்திரி கல்லூரியில் பணியை ஏற்றார். மாணிக்டாலா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக ஆனார். அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1977 வரை இருந்தார். பொது விநியோகத்தில் உணவுகளை வழங்கும் காத்யா அந்தோலன் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். துரதிர்ஷ்டவசமாக வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பிறகு, இவருக்கு போட்டியிட வாய்ப்பே வழங்கப்படவில்லை.
நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நிறுவனரான பியர்ரி டி கோபர்டின் கூறியதுபோல, வாழ்க்கையைப் போலவே ஒலிம்பிக்கில் பங்குபெறுவது தான் முக்கியமானது; வெற்றிபெறுவது அல்ல. அவர் சொல்லியதுபோலவே ஒலிம்பிக் போட்டியைத் தவறவிட்ட இலா, வாழ்க்கையைத் தீவிரமாக வாழ்ந்தவர். வங்க மக்களின் மனித கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகப் பணிசெய்தவர் அவர்.1996 வரை வங்கதேசத்துக்குத் திரும்பாமல் இருந்த இலா, புதிய தேசத்தின் 25-வது ஆண்டு கொண்டாட்டத்துக்கு அரசு விருந்தினராக வந்து பங்கேற்றார்.
- சோஹினி சட்டோபாத்தியாய,
‘தி இந்து’, தமிழில்: ஷங்கர்