சிறப்புக் கட்டுரைகள்

மாண்புமிகு பயணிகள்!

செய்திப்பிரிவு

இந்திய ரயில்வே தினமும் 2.3 கோடி பயணிகளைச் சுமக்கிறது. 2014-15-ல், 839.70 கோடிப் பேர் பயணித்துள்ளனர். இவர்கள் மொத்தமாகப் பயணித்த தூரம் பூமியை 2.9 கோடி தடவை சுற்றி வருவதற்குச் சமம். இவர்கள் ரயில்வே துறைக்கு அளித்திருப்பது ரூ. 37,000 கோடி. ரயில்வேயின் மொத்த வருமானத்தில் இது ஏறத்தாழ கால் பங்கு!

ரயில்வேக்குத் தனி பட்ஜெட் தேவையா?- அரசன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ரயில் பாதைகளைச் சீரமைப்பதற்காக வில்லியம் அக்வொர்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு 1920-ல் அமைக்கப்பட்டது. அது ரயில்வே துறைக்கெனத் தனி வரவு-செலவு அறிக்கை தேவை என்று பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்தே 1924 முதல் ரயில்வே பட்ஜெட் தனியாகப் பிரிக்கப்பட்டது. இன்றைக்கும் அதன் தொடர்ச்சியாகவே பட்ஜெட்டைக் கடைப்பிடிக்கிறோம். ஆனால், இப்போது இது தொடர்பாக ஒரு விவாதம் எழுந்திருக்கிறது.

1. ரயில்வே துறைபோல வெவ்வேறு துறைகளுக்குத் தனித்தனியே பட்ஜெட் சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக, விவசாயம்.

2. நாட்டின் இன்றைய வரவு-செலவுக்கு முன் சின்ன துறையாகிவிட்ட ரயில்வே துறைக்கு என்று மட்டும் தனி பட்ஜெட் தேவையா?

விவாதங்கள் ரயில்போல ஓடிக்கொண்டிருக்கின்றன.

கூலிகளும் சகாயகர்களும்!- ஆர்.வி.ராஜன்

எனது ரயிலுக்காக பிளாட்ஃபாரத்தில் காத்திருந்தபோது ஒரு போர்ட்டரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் எனது இரண்டு பெட்டிகளை வைத்துக்கொண்டிருந்தார். அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நான் அவரைக் கேட்டேன். சோகக் கதைகளைக் கொட்டினார்.

“முன்னல்லாம் நான் ஒரு நாளைக்கி 600, 700 கூடச் சம்பாதிப்போம் சார். இழுத்துக்கிட்டு போற மாதிரி வந்துட்ட ட்ராலிகள் எங்க பொழப்பைக் கெடுத்துடுச்சு. இப்போல்லாம் 300, 400 சம்பாதிச்சாலே அது பெரிய அதிர்ஷ்டம்” என்பது அவர் சொன்ன கதைகளில் முக்கியமானது.

அதன் பிறகு, என்னால் தூக்கிச் செல்லக்கூடிய கைப்பை களைத் தூக்கக்கூட நான் எப்போதும் ஒரு தொழிலாளரை அமர்த்திக்கொள்வேன். அதேசமயம், அவர்களுடன் பேரம் பேச ஒரு வழியை நான் கையாள்வேன். அதிகமாக அவர்கள் பணம் கேட்டால் அவர்களைப் புறக்கணித்துவிட்டு நடப்பேன். கொஞ்ச தூரத்திலேயே நியாயமான கூலி பேரத்தில் முடியும். கடைசியில், அவர் கேட்டதைவிடவும் அதிகமான பணத்தைத் தருவேன். அவர் எதிர்பார்க்காத பணம் அவருக்குக் கிடைக்கும்போது அவர் முகத்தில் தெரிகிற சந்தோஷம் எனக்குப் போதும். அந்த நாள் முழுவதும் சந்தோஷமே.

வெளிநாடுகளுக்கு நீங்கள் போனால் இந்தக் கூலி முறையே இல்லை என்பதை நீங்கள் உணரலாம். நீங்கள்தான் உங்கள் சுமையைச் சுமக்க வேண்டும். பல ரயில் நிலையங்கள் நிலத்துக்கு அடியில் இருப்பதால் பெட்டிகளைத் தூக்குவது பெரும் சவாலாக இருக்கும். ஜெர்மனியில் ஒரு முறை நான் எனது ரயில் வராத வேறொரு நடைமேடைக்குப் போய்விட்டேன். கடைசி நேரத்தில்தான் அதை உணர்ந்தேன். பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு ஓடிய ஓட்டம் இருக்கிறதே, கடவுளுக்குத்தான் நான் பட்ட துயரம் தெரியும்.

நம் நாட்டில் கூலித் தொழிலாளர்கள் உண்மையில் பெரிய சேவை செய்கிறார்கள். அதிலும், முதியவர்கள் - உடல்நிலை குன்றியவர்களுக்கு ரயில் நிலையத்தில் இப்படியான உதவி கிடைப்பது பெரும் பேறு. ஆனால், நாம் அவர்களைப் பணத்தைக் கொண்டு அளவிடுகிறோம்.

இந்த ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் அந்தத் தொழிலா ளர்களின் பெயரைக் கூலி என்பதற்குப் பதிலாக சகாயக் என்று மாற்றியது உண்மையாகவே எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால், இது போதாது. அவர்களுக்கு என்று நலத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT