*
சீனாவில் 1985-ல் நடைபெற்ற, 17 வயதுக்குட்பட்டோ ருக்கான இளையோர் கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற நைஜீரியாவின் ‘வேர்ல்டு கோல்டன் ஈக்ளெட்ஸ்’ அணியினருக்கு, 30 ஆண்டுகள் கழித்து கடந்த வாரம் பணப் பரிசை அளித்து கவுரவித்திருக் கிறார் அதிபர் முகம்மது புஹாரி. கடந்த ஆண்டு சிலேயில் நடைபெற்ற யூ-17 சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற கால்பந்து வீரர்களுடன் சேர்த்து பழைய வீரர்களுக்குப் பணப் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டில் வென்ற அணியின் உறுப்பினர்களுக்கு 1.2 மில்லியன் நைரா (நைஜீரிய கரன்ஸி!) வழங்கப்பட்டது. அணியின் பயிற்சியாளருக்கு 9,00,000 நைரா கிடைத்தது. 1985-ல் வென்ற வீரர்களுக்கும், பழைய அணியின் பயிற்சியாளருக்கும் முறையே 2 மில்லியன் நைரா மற்றும் 1.5 மில்லியன் நைரா வழங்கப்பட்டது.
அப்போது ராணுவத் தலைவராக இருந்த முகம்மது புகாரி, வெற்றி பெற்ற அணிக்குப் பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருந்தார். ‘வேர்ல்டு கோல்டன் ஈக்ளெட்ஸ்’ என்ற பெயரை அந்த அணிக்குச் சூட்டியதும் அவர்தான். எனினும், 1985 ஆகஸ்ட் 27-ல் ஜெனரல் இப்ராஹிம் பபாங்கிடா தலைமையில் நடந்த ஆயுதக் கிளர்ச்சியால் எல்லாமே நின்றுபோனது.
அதன் பிறகு, ஜெனரல் பபாங்கிடா முதல் குட்லக் ஜொனாதன் வரையிலான பலரது ஆட்சியிலும் இந்த வீரர்களுக்கு உரிய மரியாதை செய்யப்படவில்லை. இப்போது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, அதிபர் புஹாரியே தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார். தாமதமாகச் செய்யப்பட்ட மரியாதை என்றாலும் இதை நாம் பாராட்டுவதற்கு இதுதான் காரணம். அணியின் முன்னாள் வீரரான கிங்ஸ்லி ஐகியோன்பாரே சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்டார்.
ஒரு கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளரை விட, அதன் வீரர்களுக்கு அதிகத் தொகை வழங்கப்பட்டிருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதன்முறையாக இருக்க வேண்டும். எனினும், பாராட்டுக்குரிய, முன்னுதாரணமற்ற இந்த நிகழ்வின் பின்னணியை அலசிப் பார்க்க வேண்டிய தருணம் இதுவல்ல.
அதேசமயம், நமது நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் விளையாட்டு நாயகர்கள் உரிய நேரத்தில் கவுரவிக்கப்பட வேண்டும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். கிட்டத்தட்ட தங்கள் ஆயுட்காலம் வரை நமது அணியினர் காத்திருக்க வேண்டியிருந்த சூழல், கசப்பான ஒன்று. உலகக் கோப்பைப் போட்டியில் வென்றதன் மூலம், உலக விளையாட்டு வரலாற்றில் நமக்கென்று ஒரு மரியாதையைத் தேடித் தந்திருக்கிறார்கள் அந்த வீரர்கள்.
இந்நிலையில், தேசிய ஒற்றுமை போன்ற விஷயங்களில் தலைவர்கள் தங்கள் அரசியல் கொள்கை வேறுபாடுகளைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். கலை, விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் நமது தேசத்துக்குப் பெருமை தரும் வகையில் பரிமளிப்பவர்களை உரிய நேரத்தில், உரிய முறையில் கவுரவிக்க வேண்டியது அவசியம். நமது பெருமைக்குரிய விளையாட்டு வீரர்கள் கவுரவிக்கப்படாமல் காலமாவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
தமிழில்: வெ. சந்திரமோகன்