விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகத்தில் அவரைப் பார்க்கலாம். உதவி கேட்டு வருபவர்களுக்கு அவரே வழிகாட்டி. பல நேரங்களில் கட்சித் தலைவர் திருமாவளவனின் நிழல்போல இருப்பார்.
“மதுரை மாவட்டம் பாப்பாபட்டி பஞ்சாயத்துல கரையாம்பட்டிதான் என்னோட ஊரு. பாப்பாபட்டி பொதுத் தொகுதியா இருந்தப்பவே பஞ்சாயத்துத் தேர்தல்ல போட்டி போட முயற்சி செஞ்சேன். அப்ப எனக்கு அரசியல் உணர்வு ஒண்ணும் கிடையாது. ஜனநாயக நாட்டுல நான் நிக்கத்தான் செய்வேன் என்ற உணர்வுதான். ஆனா, என்னால வேட்புமனு தாக்கல் செய்யக்கூட முடியல. பரம்பரையா வாழ்ந்த ஊருக்குள்ளே இருக்க முடியல.
அப்போதான் திருமாவளவன் வந்தார். என்னை அவரோடவே வெச்சுக்கிட்டார். 20 வருசமா கட்சி வேலையிலயே முழுகிட்டேன். கல்யாணமே பண்ணிக்கல. 3, 4 வருஷத்துக்கு ஒரு முறை சும்மா ஊரைப் போய் எட்டிப் பார்ப்பேன்.
எங்க தலைவர் “அதிகாரம் கிடைச்சா அதை வெச்சு மக்களுக்கு நல்லது செய்வோம். கிடைக்கலன்னாலும் எப்போதும் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வோம்னு” சொல்வாரு. அதுதான் எனக்கும். இங்க வந்துதான் அம்பேத்கர், பெரியாரின் கருத்துகளை தெரிந்துகிட்டேன். உண்மையான கருத்துகளுக்கு எப்போதும் தோல்வியில்லை.
வெற்றியோ தோல்வியோ அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனா, நிச்சயம் எங்களுக்கும் ஒரு நேரம் வரும்.
என்னை இங்கிருந்து போயிருன்னு சொன்னாலும் நான் போக மாட்டேன். என் வாழ்க்கையோட அர்த்தம் எல்லாமே இங்கதான்.