இந்தியாவில் நிலக்கரியை அகழ்ந்து எடுத்து விற்பனை செய்ய உரிமையுள்ள ‘கோல் இந்தியா லிமிடெட்’(சி.ஐ.எல்.) என்ற இந்திய நிலக்கரி நிறுவனம் ஏகபோக நிறுவனம் மட்டுமல்ல, அரசுக்கு லாபம் சம்பாதித்துத் தருவதுமாகும். இந்தியாவில் அகழ்ந்து எடுக்கப்படும் நிலக்கரியில் 80% இந்நிறுவனம் மூலமே பெறப்படுகிறது. 2020-ல் 100 கோடி டன் நிலக்கரி வெட்டியெடுக்க இது இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
கோல் இந்தியா நிறுவனத்தில் 3,40,000 நிரந்தர ஊழியர்களும் 20,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். 2014-15-ல் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,726.70 கோடி.
நிலக்கரி வெட்டியெடுப்பது அதிகரித்துள்ளதால், இறக்குமதியாகும் நிலக்கரி நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் மட்டும் 15% குறைந்து 1,323 லட்சம் டன்கள் ஆனது. இறக்குமதி குறைப்பின் மதிப்பு மட்டும் ரூ.18,000 கோடி என்கிறார் நிலக்கரித் துறைச் செயலாளர் அனில் ஸ்வரூப். ஓராண்டுக்கு முன் இறக்குமதி அளவு 1,554 லட்சம் டன்னாக இருந்தது.
1993 தொடங்கி 2011 வரையில் நிலக்கரி வெட்டியெடுப்பதற்கான உரிமங்கள் எந்தவித வரைமுறையும் இல்லாமல் வழங்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதியது. அப்படி வழங்கப்பட்ட 218 உரிமங்களில் 214-ஐ அது 2014 செப்டம்பரில் ரத்து செய்தது.
2015 மார்ச்சில் புதிய நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) மசோதா நிறைவேறியது. அதன் பிறகு 31 சுரங்கங்கள் 3 கட்டங்களில் ஏலம் விடப்பட்டன. அதன் மூலம் மாநிலங்களுக்கு ரூ.3.44 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான உரிமம் அது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் அதிகமான மூலதன மதிப்பீடு உள்ளது கோல் இந்தியா லிமிடெட். 2015 டிசம்பர் 31-ன்படி அதன் மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் ரூ.2,07,619 கோடி, தேசிய பங்குச் சந்தையில் ரூ.2,08,314 கோடி.
ஆனால், கோல் இந்தியா பங்குகளும் அரசின் பார்வையிலிருந்து தப்பவில்லை. 2010-11-ல் முதல் முறையாக அதன் 10% பங்குகள் விற்கப்பட்டன; ரூ.15,199 கோடி அரசுக்குக் கிடைத்தது. 2015 ஜனவரியில் மேலும் பங்குகள் விற்கப்பட்டு, ரூ.22,557.63 கோடியை அரசு பெற்றது. 2015 நவம்பரில் மேலும் 10% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ரூ.20,000 கோடி கிடைக்கும் என்று சொல்கிறது. எல்லாமே மக்களின் சொத்துகள்தான்!
© ஃபிரண்ட்லைன்