சிறப்புக் கட்டுரைகள்

இணையவழி மிரட்டலைத் தடுப்போம்!

செய்திப்பிரிவு

கல்லூரியில் மாணவர்கள் கேலி செய்யப்படுவதைத் தவிர்க்க இயலாது என்னும் புரிதல் 1990-களில் தமிழ்நாட்டில் இருந்தது. மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை செய்யப்பட்ட பிறகு, 1997-ல் தமிழ்நாட்டு அரசு கொண்டுவந்த ராகிங்குக்கு எதிரான சட்டம், இக்கொடும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கல்லூரிகளில் ‘ராகிங் இல்லா வளாகம்’ அமையவும், கேலிக்குள்ளாகிறவர்கள் புகார் தெரிவிப்பதற்கான அமைப்பு கல்லூரிகளில் ஏற்படவும் இச்சட்டம் வழிவகை செய்தது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து, இணையம் போன்றவற்றின் வழியாக மிரட்டப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், இச்சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

தகவல்தொடர்புச் சாதனங்களால் மிரட்டப்படு வதை, “நவீனத் தொடர்புச்சாதன வலைதளங்களான செல்பேசி, இணையதளம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அடுத்தவரின் உடல் அமைப்பு, அறிவுத் திறன், குடும்பப் பின்னணி, ஆடைத் தேர்வு, தாய்மொழி, பிறந்த இடம், அணுகுமுறை, இனம், சாதி, வர்க்கம், பெயர் போன்றவற்றைப் பழிப்பது, கேலி செய்வது, இழிவுபடுத்துவதன் வழியாக வசைகூறுவது / சீண்டுவது” என இந்தியக் குற்றவியல் நிபுணர் ஜெய்சங்கர் வரையறுத்துள்ளார்.

நேருக்கு நேர் மிரட்டப்படுவதற்கும், தகவல்தொடர்புச் சாதனங்கள் வழியாக மிரட்டப்படுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்னது கல்வி நிலையங்கள், பணித்தளங்கள், விளையாட்டு மைதானங்கள் என அத்தோடு முடிந்துவிடுகின்றன. ஆனால், பின்னது, நீங்கள் பள்ளியில் இருந்தாலும், வேலை செய்தாலும், பாதுகாப்பான இடங்களில் இருந்தாலும் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் உங்களைத் துரத்தும். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், மின்னஞ்சல் போன்ற சமூக வலைதளங்களிலிருந்து நீங்கள் வெளியேறலாம், தொல்லை தரும் சமூக வலைதளக் கணக்குகளைத் தடுக்கலாம், திறன்பேசி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, சாதாரண செல்பேசி வாங்கலாம், என்ன செய்தாலும் உங்களால் தப்பிக்க இயலாது. ஏனென்றால், மிரட்டுகிறவர்களின் முகங்களோ முகவரிகளோ பெரும்பாலும் பாதிக்கப்படுகிறவருக்குத் தெரிவதில்லை. போலியான கணக்கில் இருந்தே அவர்கள் மிரட்டுகிறார்கள்.

பாதிப்புக்குள்ளாகும் பதின்பருவத்தினர்

உலக மக்கள்தொகையில் 60% பேர் இணையம் வழியாக அச்சுறுத்தப்படுதல், வசைகூறப்படுதல், துன்புறுத்தல் போன்றவற்றுக்கு உள்ளாகியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், பதின்பருவச் சிறார்கள், அதிலும் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 18 வயதுக்கு உட்பட்ட சென்னை மாணவர்களிடம் 2018-ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 50% மாணவர்கள் தகவல்தொடர்புச் சாதன மிரட்டலுக்கு உள்ளானதாகவும், தங்கள் நண்பர்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக 57% மாணவர்கள் சொன்னதாகவும் தெரியவந்துள்ளது.

மனித வளர்ச்சியில் பதின்பருவம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொருவரும் தனக்கான அடையாளத்தைத் தேடும் இப்பருவத்தில், குடும்பத்தின் பிடியிலிருந்து விலகிப் புதிய உறவுகளை ஏற்படுத்தச் சிறுவர்கள் முனை கிறார்கள். நண்பர்களையும் ஒத்த ரசனை உள்ளவர்களையும் தேடுகிறார்கள். அவர்களிடம் தயக்கமின்றித் தங்கள் கருத்துகள், உணர்வுகள், பொழுதுபோக்கு அனைத்தையும் பகிர்ந்து மகிழ்கிறார்கள். திறமையை வெளிப்படுத்திப் பாராட்டுப் பெறுகிறார்கள். இச்சிறுவர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளைச் சமூக வலைதளங்கள் கொடுக்கின்றன. கட்டுப்பாடு இல்லாத இணைய உலகம் அளிக்கும் மகிழ்வில் திளைத்து, ரகசியமாக வைத்திருக்க வேண்டிய கடவுச்சொற்களில் தொடங்கி, தங்களைப் பற்றிய இதர தகவல்களையும், நிழற்படங்கள், காணொளிகளையும் விளையாட்டாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மாணவர்களின் இத்தகைய அதீத ஆர்வமும் சுதந்திரமுமே அவர்களுக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது. அவர்கள் பகிர்ந்த படங்களையும் தகவல்களையும் பலருக்கும் பகிர்வது, பொதுத்தளத்தில் பதிவுசெய்வது, ‘பதிவுசெய்துவிடுவேன்’ என மிரட்டுவது போன்றவற்றைப் பதின்பருவத்தினர் அதிகம் எதிர்கொள்கின்றனர். போலிக் கணக்குகளை உண்மையென நம்பி ஏமாந்துபோகின்றனர். உதாரணமாக, மும்பையைச் சேர்ந்த 16 வயது அட்னன் பத்ரவாலாவை, முன்பின் தெரியாத ஐந்து பேர் 2007-ல் ஆர்குட் வழியாகப் பின்தொடர்ந்து நண்பர்களானார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களைப் பார்க்க அட்னன் சென்றான். அட்னனைக் கடத்தி இரண்டு கோடி ரூபாய் கேட்ட ‘நண்பர்கள்’ மறுநாளே அவனைக் கொன்றுவிட்டார்கள்.

பதின்பருவத்துக் கல்லூரி மாணவி ஒருவர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழு முறை என் செல்பேசி எண்ணை மாற்றிவிட்டேன். தெரியாதவர்களிடம் இருந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் அடிக்கடி வந்ததால், எத்தனையோ இரவுகள் தூங்க முடியாமல் தவித்துள்ளேன். இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடாமலேயே இருந்துள்ளேன். வீட்டில் சொல்லவும் பயம். எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்கிற குழப்பம். இதிலிருந்து விடுபட வேறு வழி தெரியாதபோது வீட்டில் சொன்னேன். ‘உன் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பயப்படாமல் தைரியமாக இரு’ என அண்ணனும் அப்பாவும் சொன்னார்கள். அதன் பிறகுதான் உயிர் வந்தது. கல்லூரிப் பாடங்கள் வாட்ஸ்அப் வழியாகப் பகிரப்படுவதால் வேறு வழியில்லாமல் திறன்பேசி பயன்படுத்துகிறேன்” என்றார். இவருக்குக் கிடைத்தது போன்று, மகனையும் மகளையும் புரிந்துகொள்கிற குடும்பம் எல்லோருக்கும் அமைவதில்லை.

தனிச் சட்டம் காலத்தின் அவசியம்

தகவல்தொடர்புச் சாதனம் வழியாக மிரட்டப்படுகிறவர்கள் தங்கள் உடல் முழுவதும் அச்சம் படர்வதை உணர்வார்கள். யாரை நம்புவது, யாரிடம் சொல்வது எனப் புரியாமல் தவிப்பார்கள். தன்னையே குற்றவாளிபோலக் கருதி நடந்துகொள்வார்கள். சமூகம், குடும்பம், நண்பர்களிடமிருந்து பிரிந்து, தனிமையில் உழல்வார்கள். செல்பேசியில் எந்த அழைப்பு வந்தாலும் பதற்றப்படுவார்கள். சுய மதிப்பு குறைந்து, பசி, தூக்கம் இல்லாமல் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். தற்கொலை செய்துகொண்டவர்களும் உண்டு.

தகவல்தொடர்புச் சாதன மிரட்டலிலிருந்து ஒவ்வொருவரையும், குறிப்பாகப் பதின்பருவத்தினரைக் காப்பாற்றும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தங்களிடம் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவைப் பயன்படுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளும் போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளன. மாற்றுக் கருத்தாளர்களையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, குடும்பம் உள்ளிட்டவற்றையும் குறித்து வதந்திகளைப் பரப்புவதும், தகாத வார்த்தைகளால் சாடுவதும், எதிராளிகளின் செல்பேசி எண்களைப் பொதுவெளியில் பகிர்ந்து பலரையும் வசைபாடச் செய்வதும் அவர்களது பணிகளுள் இடம்பெற்றிருக்கின்றன. கட்சிகள் தங்களைச் சுயபரிசோதனை செய்வதன் வழியாக இச்சமூகத்தைப் பெருமளவில் சீர்திருத்த முடியும்.

ஏற்கெனவே, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், எந்தெந்த வழிகளிலெல்லாம் தகவல்தொடர்புச் சாதனத்தைப் பயன்படுத்தி மிரட்டுகிறார்கள் என்பதை வரையறுத்து, முழுமையான தனிச் சட்டம் உருவாக்குவது அவசியம். இது அளப்பரிய மாற்றத்தை உருவாக்கும்!

- சூ.ம.ஜெயசீலன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

SCROLL FOR NEXT