சிறப்புக் கட்டுரைகள்

ஜே.என்.யு. மீதான அரசின் வன்முறை!

செள.குணசேகரன்

விவாதங்களுக்கான களமாக விளங்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் மீது தேச விரோத முத்திரை விழுந்திருக்கிறது

கடந்த சில தினங்களாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு.) எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் பல்வேறு தளங்களில் விவாதத்தை எழுப்பியிருக்கின்றன. இதுதொடர்பான விவாதங்களுக்குப் போகும் முன்னர், இப்பல்கலைகழகத்தைப் பற்றிய சில அடிப்படைப் புரிதலை உள்வாங்கிக்கொள்ளுதல் அவசியம். நாட்டின் ஏனைய கல்வி நிறுவனங்களிருந்து ஜே.என்.யு.வின் மதிப்புகளும் அதன் வளாகக் கலாச்சாரமும் வெகுவாக வேறுபடுகின்றன. பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பட்டங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளாக மாறிவிட்ட நிலையில், இன்றளவும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதில் முன்னோடியாக இருக்கிறது ஜே.என்.யு. வகுப்பறைக் கல்வியை வெறும் ஏட்டுக் கல்வியாக மாற்றிவிடாமல், அதன் பயன்பாட்டைச் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் வெளிப்படுத்துவதற்கான பயிற்சி பட்டறையாகவும் இயங்கிவரும் பல்கலைக்கழகம் இது.

விவாதக் களம்

இருநூறு ரூபாய்க்கும் குறைவான பருவக் கட்டணத்தில் உலகத் தரமான கல்வியைச் சமுகத்தின் பல்வேறு நிலைகளையும், நாட்டின் பலவேறு பகுதிகளையும் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதோடு அல்லாமல் ஒவ்வொருவரும் தன் கருத்தை, தன்னைச் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கான ஒரு பேச்சுத் தளத்தையும் உருவாக்கிவைத்துள்ளது. காஷ்மீர் பிரச்சினை தொடங்கி தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் மாணவிகள் தற்கொலை வரை, அவற்றைச் சார்ந்த அரசியல் உடனடியாக இங்கு விவாதத்துக்கு வரும். பல்கலைக்கழகத்தில் 24 மணிநேரமும் இயங்குகிற, ஒன்பது அடுக்கு கொண்ட நூலகம் ஆண், பெண் என எப்பொழுதும் கூட்டமாகவே காணப்படும்.

இருபால் மாணவர்களையும் ஒரே விடுதியில் தங்கவைத்து பால் சார்ந்த கற்பிதங்களை உடைத் தெறிவதுடன், எத்தகைய பாலியல் வன்முறைகளையும் ஒடுக்குவதற்கான ஒரு முன்னோடி ஒழுங்கமைப்பையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. குறிப்பாக, இதன் பலம்வாய்ந்த மாணவர் அமைப்பும், அதன் அடிப்படையான அரசியல் அமைப்பும், அதற்கான தேர்தலும் ஒரு வலுவான ஜனநாயக ஆட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவை. இத்தகைய கட்டமைப்பு ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பல்லாண்டு கூட்டு முயற்சியின் வெளிப்பாடு. இங்கு பயிலும் பெரும்பாலான மணவர்களுக்கு, பல்கலைக்கழகத்துக்கு வெளியில் இத்தகைய ஒரு சமூகச் சூழலை எவ்வாறு வென்றெடுப்பது என்பதே கனவாக இருக்கும்.

தேச விரோத முத்திரை

இத்தகைய பல்கலைக்கழகம்தான் ஆளும் மத்திய அரசின் இந்துத்வா அரசியலுக்கு இடம் கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தேசவிரோதப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டு, அரசால் ஏவிவிடப்பட்ட காவல்துறையின் அடக்கு முறையை, கடந்த சில தினங்களாக எதிர்கொண்டு வருகிறது. இங்கு தற்பொழுது காணக் கூடிய நிகழ்வுகள் 1975-77-ல் இந்திராகாந்தி அரசு நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியபோது இப்பல்கலைக் கழகம் எதிர்கொண்ட சம்பவங்களை நினைவு படுத்துவதாக இவற்றை நேரில் கண்டோர் உறுதிப்படுத்துகிறார்கள். பல்கலைக்கழத்தின் நுழைவாயில்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான சீருடை அணிந்த காவலர்களும், வளாகத்துக்குள் சுற்றித்திரியும் சீருடை அணியாத காவலர்களும் அனைத்துத் தரப்பினரிடையே வெகுவான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். பல்வேறு இடதுசாரி மாணவ அமைப்புகளின் தலைவர்களையும் களப்பணியாளர்களையும் குறிவைத்து விடுதி விடுதியாகத் தேடுதல் வேட்டை நடத்திய டெல்லி காவல்துறை, பிப்ரவரி 12-ல் பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவர் கன்னையா குமாரைத் தேசத் துரோக குற்றத்துக்காகக் கைதுசெய்து வழக்குப் பதிவுசெய்தது.

இவற்றையெல்லாம்விட கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில் டெல்லி காவல்துறையுடன் நரேந்திர மோடி அரசு காட்டிய தீவிர ஆர்வமும், ஒட்டுமொத்தப் பல்கலைக்கழகச் சமூகத்தையும் தேசத்துரோகிகளாக வகைப்படுத்தியதும் அரசியல் சாராத மாணவர்களையும் ஆசிரியர்களையும் கூட போராட்ட களத்துக்குக் கொண்டுவந்தன எனலாம். பல்லாயிரக்கணக்கான மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள். பல்கலைக்கழகத்துக்கு வெளியிலும் ஆதரவுப் போராட்டங்கள் பெருகிவருகின்றன. ஏதாவது நிகழாதா என்று பல மாதங்களாகக் காத்துக்கொண்டிருந்த அரசுக்கு, பிப்ரவரி-9 சம்பவம் பல்கலைக்கழகத்தில் நுழைந்து மாணவ அமைப்புகளையும் கருத்து சுதந்திரத்தையும் ஒடுக்குவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

தொடக்கப் புள்ளி

மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களும் கருத்துக்களும் இங்கு தொடர்ந்து வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை கொடுக்கப் பட்டோருக்கு எதிரான கருத்தைத் தலைநகரில் முன்வைப்பதில் இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இதுபோன்ற எதிர் மரபின் தொடர்ச்சியாகவே, நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் கைதாகி மரண தண்டனை பெற்ற அப்சல்குருவின் நினைவைக் குறிக்கும் வகையில், பிப்ரவரி 9-ல் பாடல், கவிதை வாசிப்பு, மற்றும் சித்திரங்கள் மூலமாக மரண தண்டனைக்கு எதிர்ப்பான ஒரு கலை நிகழ்வு சில தனிப்பட்ட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. தொடக்கத்தில் இதற்கு அனுமதி கொடுத்த பல்கலைக்கழகம், பிறகு இதைத் திரும்பப் பெற்றுக்கொண்டபோதிலும், ஏற்பாட்டாளர்களும் மற்ற மாணவர்களும் குறிப்பிட்ட இடத்தில் கூடினர். இது, பாஜகவின் மாணவ அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) உடனான சச்சரவைக் கொண்டுவந்தது. பின்னர், கூட்டத்தினர் தேச விரோத கோஷங்களை முழங்கினர் என்றும் அதில் ஜே.என்.யு. மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமாரும் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவுறுத்தலின்படி பல்கலைக்கழகத்தின் மீதான டெல்லி காவல் துறையின் வன்முறை தொடங்கியது.

கன்னையா குமாருக்கும் பிப்ரவரி 9 ஏற்பாட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட சச்சரவைத் தீர்ப்பதற்காகவே அவர் அங்கு செல்ல நேரிட்டது என்றும் கூறப்படுகிறது. இத்துடன், கன்னையா குமார் சார்ந்திருக்கும் ஏ.ஐ.எஸ்.எஃப். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பாகும். இக்கட்சி இந்தியாவின் இறையாண்மைக்கோ, தேசியத்துக்கோ எதிர்ப்பான சித்தாந்தத்தை உடைய கட்சி அல்ல. மேலும் பிப்ரவரி 11-ல் மாணவர்களிடையே கன்னையா கொடுத்த உரையாடலில் (இந்த அனல் பறக்கும் பேச்சு வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது) அவர் தன் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அதில் இந்தியாவின் இறையாண்மை மீதும் அரசியல் அமைப்பின் மீதும் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கன்னையா குமார் குறிவைக்கப்பட்டிருப்பது அவர் ஜே.என்.யு.வின் ஒட்டுமொத்த மாணவர்களின் பிரதிநிதி என்பதால்தான்.

எச்சரிக்கை!

அரசின் இத்தகைய போக்குக்கு பல்வேறுபட்ட காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக பல மாதங்களாக நாட்டின் பல்வேறுபட்ட மாணவ அமைப்புகளை ஒன்றிணைக்கும் தளமாக மாறி அரசுக்கு நெருக் கடியை ஜே.என்.யு. ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்களின் பிரச்சினைகளை டெல்லியில் எதிரொலிக்கும் குரலாக இப்பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளார்கள். அண்மையில் ஹைதராபாத், ஜாதவ்பூர் பல்கலைக்கழகங்களிலும், புனே திரைப்படக் கல்லூரியிலும் ஏற்பட்ட போராட்டங்களை டெல்லியில் முன்னின்று நடத்தினார்கள். பல்வேறு மாணவ அமைப்புகளை ஒன்றிணைத்து டெல்லியில் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு முன்பும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு முன்பும் நடந்த தொடர் போராட்டங்களிலும் முன்னின்றனர். மாணவர் போராட்டங்கள் ஒரு தீராத சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், அரசு இவற்றை அடக்குமுறை மூலம் கையாள முற்படுவது வியப்பளிக்கவில்லை. கன்னையா குமாரின் கைது, இந்தியாவின் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்துக்குமே கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகத்தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

பிப்ரவரி-9 கைதுக்கு முன்பே, ஜே.என்.யு. மீதான அவதூறான வரையறைகளையும் கருத்துக்களையும் பாஜக தலைவர்கள் சாக்‌ஷி மகராஜ், சுப்ரமணியன் சுவாமி போன்றோர் பரப்பிவந்தனர். இக்கட்சியின் மாணவ அமைப்பான ஏபிவிபி, சிறுசிறு சம்பவங்களைக் கூட ஒரு இந்துத்வா அரசியலுக்கு உட்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, சில மாதங்களுக்கு முன்பு சில மாணவர்கள் விடுதிக் அறையில் நெருப்பு (ஹோமம்) வளர்த்து, யாகம் ஓதி பிறந்தநாள் கொண்டாடியதைத் தடுத்த விடுதி காப்பாளர்களில் (பல்கலைகழக ஆசிரியர்கள்) கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவரை மட்டும் தனிமைப்படுத்தி வழக்குப் பதிவு செய்தது. இப்புகாரில் முகாந்திரம் இல்லை என்று பல்கலைக்கழகம் அமைத்த உண்மை அறியும் குழு அறிவித்தபோதிலும் பாஜக தந்த அழுத்தத்தின் காரணமாக இன்றும் இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிப்ரவரி 13-ல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவந்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் ஆனந்த் சர்மா போன்றோரை வழிமறித்ததுடன் ஆனந்த் சர்மாவை தாக்கவும் முற்பட்டது ஏபிவிபி. மேலும் பிப்ரவரி 15-ல் டெல்லி நீதிமன்றத்தில் ஜே.என்.யு. மாணவர்களையும் ஆசிரியர்களையும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர்.

எனவே அரசும், அரசின் ஆதரவுடன் ஏபிவிபியும் மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை வன்முறையின் மூலம் ஒடுக்க முற்படுகிறார்கள். மிகவும் பின்தங்கிய வகுப்பில் இருந்து வந்து மக்களின் குரலாக இருக்கும் மாணவத் தலைவர்களான ரோஹித் வெமுலா, கன்னையா போன்றோர் தேசத்துரோகிகள் என்றால் ஆளும் அரசு எவ்வகையான தேசியத்தைக் கட்டமைக்க விரும்புகிறது என்பதைச் சிந்திக்க வேண்டி உள்ளது. மேலும் மாணவ அரசியலில் தலையிட்டு அதை தேசியப் பிரச்சினையாக உருவகப்படுத்துவது, ஜனநாயகக் கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத அரசின் இயலாத் தன்மையையே காட்டுகிறது.

சௌ. குணசேகரன்,

வரலாற்றுத் துறைப் பேராசிரியர், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம். தொடர்புக்கு: jsguna@gmail.com

SCROLL FOR NEXT