அரசுகள் தராதபோது மக்களிடம் எப்படி ஆதாரம், ஆவணம் இருக்கும்
பழங்குடியினருக்கும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மற்ற மக்களுக்கும் காடுகளின் மீது உரிமைகள் வழங்கும் சட்டம் 2006-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது நடந்து ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாட்டைத் தவிர, இந்தியா முழுவதும் இந்தச் சட்டம் 2008 ஜனவரி 2-ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குகள் போடப்பட்டன. அவை அனைத்தும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் மீது 2016 பிப்ரவரி 1-ம் தேதி சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.
தமிழகத்தில் வன உரிமை
இந்தச் சட்டத்தின்படி, எங்களுக்கு நில உரிமையும் வன உரிமையும் வேண்டும் எனக் கேட்டு கடந்த 8 ஆண்டு காலத்தில் 2015 அக்டோபர் 31 வரை நாடு முழு வதும் சுமார் 44 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் 20.5 லட்சம் மனுக்கள் மாநில அரசுகளால் நிராகரிக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்களில் 17 லட்சத்து 5,250 பேருக்கு, 89 லட்சத்து 40,246 ஏக்கர்கள் விநியோகிக்கப் பட்டுள்ளன. திரிபுரா மாநிலத்தில் பெறப்பட்ட மனுக்கள் 1 லட்சத்து 91,653. இதில் 1லட்சத்து 22,583 பேருக்கு 4 லட்சத்து 37,953 ஏக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதி மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
தமிழக வனத் துறையில் மாவட்ட வன அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம்பசிவம் என்பவர் 2008-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ‘எந்த விதத்திலும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை’யை 2008 பிப்ரவரி 21-ம் தேதி விதித்தது.
இந்தத் தடையை அகற்ற மத்திய - மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் எழுந்தன. அவற்றின் விளைவாக, ஏப்ரல் 28-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் சில மாறுதல்களைச் செய்தது. அதாவது, “சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளைத் தமிழக அரசு மேற்கொள்ளலாம். ஆனால், பட்டா வழங்குவதற்கு முன்பு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அதேபோல் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மரங்களை வெட்ட வேண்டியிருந்தால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்” என்று ஒரு வரையறைக்குட்பட்ட உத்தரவை அது பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்குப் பிறகும், இந்தச் சட்டத்தை அமல்படுத்த அப்போது ஆட்சியில் இருந்த திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் இருந்த வழக்கைக் காரணம் காட்டியே காலத்தைக் கடத்திவிட்டார்கள்.
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும், கடந்த 5 ஆண்டு காலத்தில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று தமிழகத்தில் உள்ள ஆதிவாசி மக்களில் ஒருவருக்குக்கூட பட்டா வழங்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கை வேகமாக முடிக்கவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் 2015, அக்டோபர் 31-ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களே 21,871 தான். இந்த மனுக்களில் விசாரணை நடத்தப்பட்டு பட்டாக்கள் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருப்பது 3,723 விண்ணப்பங்களுக்குத்தான். எனவே, பெறப்பட்ட விண்ணப்பங்களின்மீது கள விசாரணை செய்கிற பணிகூட மேற்கொள்ளப்படவில்லை.
சட்டத்தின் நோக்கம்
திமுக ஆட்சிக் காலத்தில்தான் 1989-ல் அரசாணை எண் 1,168 மூலம் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கத் தடை விதிக்கப்பட்டது. இன்று வரை அந்தத் தடை உத்தரவு நீடிக்கிறது.
இது ஒருபுறம் இருக்கட்டும்... வன உரிமைச் சட்டம் தொடர்பான வழக்கில் பிப்ரவரி 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதாவது, விண்ணப்பித்துள்ள 44 லட்சம் மனுக்களில் 20.5 லட்சம் மனுக்களை மாநில அரசாங்கங்கள் உரிமை கோரத் தகுதியற்றவை என்று தள்ளுபடி செய்துள்ளன. இதன் மீது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இவர்களை ஏன் வெளியேற்றக் கூடாது என்றும், இதன்மீது 15 நாட்களுக்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
உரிமை கோரி விண்ணப்பித்தவர்களில் பாதிப் பேரை வெளியேற்றுவது என்று அரசு எப்படி முடிவெடுக்க முடியும்? அப்படி முடிவெடுத்தால், ஆதிவாசி மக்களுக்கும், பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் சமூகத்தினருக்கும் அது பெரும் துன்பத்தை உருவாக்காதா? அது வனஉரிமைச் சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தையே சீர்குலைத்துவிடுமே? ஆதிவாசி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முயலும் போக்கை எத்தகைய முறையில் புரிந்துகொள்வது?
கிராம சபையா, அதிகாரிகளா?
உரிமை கோரும் மனுக்களை ஏன் தள்ளுபடி செய்கிறார்கள்? அந்த மனுக்களை ஆராயும் கமிட்டியில் உள்ள வனத் துறை அதிகாரிகள், அந்த மக்களிடம் ஆதாரங்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இவை அபத்தமான காரணம்.
இந்தச் சட்டத்தில் ஆகப் பெரிய அதிகாரம் படைத்தது கிராம சபைதான். கிராம சபை பரிந்துரை செய்தபிறகு வனத் துறை அதிகாரிகள் அவற்றை ஏற்க மறுத்து ஆதாரங்கள் கேட்கிறார்கள் என்பது சட்டத்தை அமலாக்குவது ஆகாது.
அரசுகள் தராதபோது மக்களிடம் எப்படி ஆதாரம், ஆவணம் இருக்கும். உள்ளூர் விசாரணையின் மூலமும், அரசிடம் உள்ள வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் மூலமும், வருவாய் ஆவணங்கள் மூலமும்தான் ஆதிவாசி மக்களின் உரிமையை உறுதிப்படுத்த முடியும். அதை அரசுதான் செய்ய முடியும்? ஆதிவாசி மக்களிடம் அதைக் கேட்பது எப்படிச் சரியாகும்?
சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்பிறகாவது தமிழக அரசு வேகமாகச் செயல்பட வேண்டும். வன உரிமைச் சட்டத்தை அமலாக்கவும், ஏற்கெனவே தயாராக உள்ள பட்டாக்களை மக்களுக்கு வழங்கவும் முன்வர வேண்டும்.
நகரத்திலும் வனஉரிமை
நகராட்சிப் பகுதிகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்று பழங்குடியினர் நல அமைச்சகம் 2013, ஏப்ரல் 29-ம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. நகராட்சிப் பகுதிகளில், வனத் துறைக்குச் சொந்தமான இடங்களில் குடியிருக்கும் மக்களுக்குப் பட்டாக்கள் கிடைக்கவும் இதன் மூலம் வழி செய்யப்பட்டுள்ளது. வன உரிமைச் சட்டப்படி கிராம சபைக்குச் சமமான கமிட்டியை நகராட்சிப் பகுதிகளில் அமைத்து, கோட்ட மற்றும் மாவட்ட அளவிலான கமிட்டிகளுக்குப் பரிந்துரை செய்து, சட்டப்படியான உரிமைகளைப் பழங்குடி மக்கள் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இரண்டரை வருட காலமாக இதன்மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது தமிழக அரசு பழங்குடி மக்களின் பிரச்சினைகளை அக்கறையோடு கவனிக்க முன்வர வேண்டும்.
- பெ.சண்முகம், மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்.
தொடர்புக்கு: pstribal@gmail.com