சிறப்புக் கட்டுரைகள்

சங்கரய்யா: கொள்கைப் பிடிப்பின் முன்னுதாரணம்

ஆர்.நல்லகண்ணு

தோழர் என்.சங்கரய்யாவின் தந்தை அந்தக் காலத்திலேயே அரசுப் பொறியாளராகப் பணிபுரிந்தவர். கோவில்பட்டியில் பள்ளிக் கல்வியை முடித்த சங்கரய்யா, பின்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்துக்கொண்டிருந்தபோது, தமிழ்நாடு மாணவர் சங்கத்தில் சேர்ந்தார். பின்பு, அதன் செயலாளராகவும் ஆனார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர் சங்கத்திலும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவர் ஆற்றிய பணிகள், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கச் செயல்பாடுகளின் மையமாக மதுரை உருவாக வழிவகுத்தன. தென்தமிழ்நாடெங்கும் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவுவதற்கு அவர் பெரும் பங்காற்றினார்.

அந்தக் காலத்தில், திருநெல்வேலி இந்து கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்தேன். இயக்கப் பணிகளுக்காக எங்கள் பகுதிக்கு வந்தபோது அவரைச் சந்தித்திருக்கிறேன். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் தேர்ச்சிபெற்றவர். அபாரமான பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், அயராத களப்பணியாளர். பேச்சு, எழுத்து, களப்பணி என மூன்றிலும் சமமான வல்லமை பெற்ற அரிதான ஆளுமை அவர். அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் (ஏஐடியூசி) தேசிய மாநாடு அன்றைய மதராஸில் 1945-ல் நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், எஸ்.ஏ.டாங்கே, சர்க்கரைச் செட்டியார் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்றனர். அந்த மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடித்ததில், இளைஞரான சங்கரய்யாவுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த மாநாடு குறித்த திட்டமிடல் கூட்டம் நடைபெற்றபோது, அவருடைய தந்தை இறந்துவிட்ட செய்தி கிடைத்தது. தந்தையின் இறுதிச் சடங்குக்குச் சென்றுவிட்டு, அடுத்த நாளே வந்து பணிகளைத் தொடர்ந்தார். மாநாட்டில் உரையாற்றினார். இத்தகைய அர்ப்பணிப்பும் உழைப்பும் என்னைப் போன்றவர்களுக்குப் பெரும் உத்வேகம் அளித்தன.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பம்பாயில் 1946-ல் நடைபெற்ற கடற்படை எழுச்சிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்தது. அதற்காக மதுரையில் நடைபெற்ற ஒரு பேரணிக்கு சங்கரய்யா தலைமை வகித்தார். பேரணியைக் கைவிடுமாறு போலீஸார் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபோதும், சங்கரய்யா பேரணியைக் கைவிடவில்லை. ஜவாஹர்லால் நேரு காஷ்மீருக்குச் செல்ல முயன்றபோது, பிரிட்டிஷ் அரசு அவரைக் கைதுசெய்ய முயன்றது. அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. 1946-ல் மதுரையில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி, தமிழகத் தலைவர் பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, ‘மதுரை சதி வழக்கு’ எனும் புனையப்பட்ட வழக்கில் பி.ராமமூர்த்தி, சங்கரய்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களைக் கைதுசெய்து, பிரிட்டிஷ் அரசு சிறையில் அடைத்தது. நாடு விடுதலை பெறுவதற்கு முந்தைய நாள் (1947 ஆகஸ்ட் 14) இரவுதான் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். விடுதலைக்காகப் போராடியவர்களுக்கே முந்தைய நாள்தான் விடுதலை கிடைத்தது.

நாடு விடுதலை பெற்ற பிறகும் சங்கரய்யாவின் போராட்ட வேட்கை ஓயவில்லை. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும், தொழிற்சங்கங்களில் பல பொறுப்புகள் வகித்திருக்கிறார். நிலச் சீர்திருத்தப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகக் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றியிருக்கிறார். இப்படிப் பல தளங்களில் தொடர்ந்து தீவிரமாக இயங்கியதற்கு இடையில் நிறைய வாசிக்கவும் செய்வார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நுழையும் இளைஞர்கள் அனைவரும் கொள்கைப் பிடிப்பில் அவரை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

சங்கரய்யாவின் மனைவி நவமணி கிறிஸ்தவர். அவருடைய குடும்பத்தில் அனைவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். இதனால், அவருடைய வீட்டுக்குச் செல்வதே மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சிக் காலத்திலிருந்தே நானும் சங்கரய்யாவும் நட்புடன் இருந்தோம். கம்யூனிஸ்ட் கட்சி 1964-ல் பிரிந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினராக அவர் ஆனார். ஆனால், எங்களுக்கு இடையிலான நட்பில் எந்த இடைவெளியும் ஏற்படவில்லை.

கேட்டு எழுதியவர்: ச.கோபாலகிருஷ்ணன்

ஜூலை 15: என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு தொடக்கம்

SCROLL FOR NEXT