சமீபகால நகைச்சுவை - திகில் திரைப்படங்களைப் பார்த்து நாம் வயிறு வலிக்கச் சிரித்திருக்கிறோம். மன பாரம் குறைந்த மகிழ்வில் நன்கு தூங்கியிருக்கிறோம். ஆனால், உண்மையிலேயே திகிலுறும்போது ஒருவரால் சிரிக்க முடியுமா? மனம் சமநிலையில் இருக்குமா?
திகிலுறச் செய்யும் நிகழ்வுகள் ஒருவிதப் பதற்ற மனநிலையை நமக்குள் தூண்டுகின்றன. இந்தத் தூண்டுதலால் பாதிக்கப்படாமல் ஒருசில நாட்களிலேயே பலர் சரியாகிவிடுகிறார்கள். ஆனாலும், மாதக்கணக்கில் வருடக்கணக்கில் திகிலிலிருந்து வெளியேற முடியாமல் சிலர் துன்புறுகிறார்கள். இவர்களை ‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு’ Post-traumatic stress disorder (PTSD) உள்ளவர்கள் என உளவியல் வரையறுக்கிறது. திகில் அனுபவத்தை, நேரடி அனுபவத்தால் திகிலுறுவது, பிறருக்கு நடப்பதைப் பார்த்துத் திகிலுறுவது என இரண்டு வகையாக உளவியல் பிரிக்கிறது.
தனக்கும் பிறருக்கும்
இயற்கை அல்லது மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவில் சிக்கியவர்கள், வாகன விபத்தைச் சந்தித்தவர்கள், சார்ஸ் போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மீன் பிடிக்கும்போது கடலில் விழுந்து மீண்டவர்கள், போர், கலவரம், தீவிரவாதத் தாக்குதலில் சிக்கியவர்கள், கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்கள், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானவர்கள், பாலியல் சீண்டலுக்கு உள்ளான குழந்தைகள் அனைவருமே நேரடியாகத் திகிலுறுவதன் சாட்சிகள். மற்றவர்கள் கொல்லப்படுவதை, குடும்ப வன்முறையை, இயற்கைக்கு மாறான மரணத்தை, பாலியல் துன்புறுத்தலைப் பார்ப்பவர்கள் அனைவருமே பிறருக்கு நடப்பதைப் பார்த்துத் திகிலுறுவதன் எடுத்துக்காட்டுகள்.
பொதுவாக, நிகழ்வு நடந்த முதல் மூன்று மாதங்களுக்குள் நோய்க்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகள் அன்றாட நடவடிக்கைகளைத் தொந்தரவுக்கு உள்ளாக்கும்; வேலை செய்யும் இடம், அலுவலகம், வீடு, படிக்கும் இடம், நட்பு, உறவு அனைத்திலும் இயல்பாக இருக்க இயலாதவாறு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஊடுருவல் அறிகுறிகள்
நடந்த நிகழ்வைச் சிலர் தாமாகவே மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பார்கள். அவர்களால் அதிலிருந்து வெளியேறவே முடியாது. தத்ரூபமாகத் தற்போதுதான் நிகழ்வதுபோல நினைப்பார்கள். திகில் ஏற்படுத்திய நிகழ்வுகளை நினைவூட்டும் கொடுங்கனவுகள் அடிக்கடி வரும். சில நேரங்களில், நிகழ்காலம் குறித்த உணர்வு முழுவதும் மறந்து நாம் எங்கே இருக்கிறோம், அருகில் இருப்பது யார் என்கிற எந்த உணர்வும் இன்றிச் செயல்படுவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்த நிகழ்வை விளையாட்டாக விளையாடுவார்கள். திகிலுற்ற சிலர், இரவில் திடீரென்று விழித்தெழுவார்கள், அழுவார்கள், அஞ்சுவார்கள், பிதற்றுவார்கள். கல்லூரி விடுதியில் மின்சாரம் தாக்கி என் நண்பர் ஒருவர் பலியானார். மகனின் இறப்பைப் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் இரவு நல்ல மழை பெய்தது. நள்ளிரவில் குடையை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார், அந்த நண்பரின் தந்தை. வீட்டில் இருந்தவர்கள் பதறி எழுந்து ஓடி அவரைப் பிடித்து நிறுத்தி, “எங்க போறீங்க?” எனக் கேட்டபோது, “மகன் மழைல நனைஞ்சிட்டு இருக்கான். அவனுக்குக் குடை கொடுக்கப் போறேன்” என்றாராம்.
திகிலடையச் செய்த நிகழ்வைப் பற்றி எதார்த்தமாகக்கூட நினைக்க சிலர் விரும்ப மாட்டார்கள். அது குறித்து மற்றவர்கள் நினைவுபடுத்துவதையோ பேசுவதையோ ஏற்க மாட்டார்கள். எதையாவது சொல்லிப் பேச்சை மாற்றுவார்கள். நிகழ்வு நடந்த இடத்துக்குச் செல்வதைத் தவிர்ப்பார்கள். அதில் தொடர்புடைய மனிதர்களைச் சந்திக்க மறுப்பார்கள். திகிலை நினைவுபடுத்தும் பொருட்கள், செயல்கள், உரையாடல்கள், சூழ்நிலைகளைத் தவிர்ப்பார்கள்.
தன்னைப் பற்றியும், மற்றவர்கள் குறித்தும், உலகத்தைப் பற்றியும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பயம், திகில், கோபம், குற்ற உணர்வு, அவமானம் போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகம் இருக்கும். முன்பு எதையெல்லாம் மகிழ்ச்சியாகச் செய்தார்களோ அவை அனைத்திலும் ஆர்வம் குறையும். மற்றவர்களிடமிருந்து விலகியே இருப்பார்கள். மகிழ்ச்சி, மனநிறைவு, திருமண உறவு போன்றவற்றில் நேர்மறை உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்த இயலாமல் உணர்ச்சியே இல்லாதவர்போல் இருப்பார்கள்.
இவர்களைப் பார்த்து, “பைத்தியம் பிடிச்ச மாதிரி பேசறா!” என ஒருவர் சொல்ல, “ஆமா, இருக்கலாம், பாஸ்டர் ஒருத்தர் முழு இரவு செபம் செய்கிறார். குடும்பத்தோட போய் எல்லாரும் முழு இரவு செபம் செஞ்சா சரியாகிடும்” என அடுத்தவர் குறிப்பிட, “தர்காவுல மந்திரிச்ச கயிறு வாங்கிக் கட்டினால் போதும்” என மற்றவர் பரிந்துரைக்க, “குளித்தலை மந்திரவாதி மந்திரிச்சுக் கொடுக்கிற தாயத்தக் கட்டிவிட்டா எல்லாம் சரியாகிடும்” என இன்னொருவர் சொல்ல என்று குடும்பத்துக்குள் குழப்பத்தை உருவாக்கிவிடுவார்கள்.
இயல்பு நிலைக்குத் திரும்புதல்
எல்லோருமே நோயாளிகளா என்று கேள்வி கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். ஆனால், திகிலுற்ற அனைவருக்குமே தற்காலிகமாகச் சில பிரச்சினைகள் இருக்கும். அந்த நினைவுகளிலிருந்து மீண்டுவருவதற்குச் சில நாட்கள் அல்லது வாரங்கள்கூட ஆகலாம். ஆற்றுப்படுத்துதல், தியானம், ஜெபம், நண்பர்களைச் சந்திப்பது, படைப்பாற்றல் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்துவது எனத் தங்களையே பலர் சரிசெய்துகொள்வார்கள். நடந்ததையே மறந்து அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கி இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள்.
அதே வேளையில், முழுமையாக எல்லோரும் நலமடைந்துவிடுவார்கள் எனச் சொல்லவும் இயலாது. இயல்பு நிலைக்குத் திரும்பிய வெகு சிலருக்கு, பழைய நிகழ்வை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் நடக்கும்போதோ, புதிதாகத் திகில் அனுபவம் ஏற்படும்போதோ, அல்லது அன்றாட வாழ்வின் பதற்றங்களாலோ மாதங்கள் அல்லது வருடங்கள் கடந்தும் இதன் அறிகுறிகள் வெளிப்படலாம்.
‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலை’வைக் குணப்படுத்த ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உளநோய்த் தீர்முறைகள் (Psychotherapy) பல இருக்கின்றன. தீவிர நிலையில் உள்ளவர்களுக்கு மாத்திரைகளும் பயன்பாட்டில் உள்ளன. எனவே, உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் செல்வோம். ஆற்றுப்படுத்துநர்களை நாடுவோம். திகிலுற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுப்போம். அவர்கள் அன்றாட வாழ்வில் இயல்பாக நடைபோட உதவுவோம்.
- சூ.ம.ஜெயசீலன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com
ஜூன்: ‘உடல் பாதிப்பைத் தொடர்ந்த உளச் சீர்குலைவு’க்கான மாதம்