சிறப்புக் கட்டுரைகள்

களத்தில் தி இந்து: கடலூர் மக்களுக்கு ‘காலத்தால் செய்த உதவி’

செய்திப்பிரிவு

உதவி செய்வதும், பெறுவதும் மகிழ்ச்சிக்குரிய தருணங்கள்தான் என்றபோதிலும் சில நேரங்களில் செய்யும் உதவிக்குக் கிடைக்கும் அங்கீகாரம்தான் மேலும் மேலும் அந்த அறப்பணியில் நம்மை ஈடுபடுத்தும். ஆதரவற்ற நிலையில் அலைமோதும் ஒரு தருணத்தில் கிடைக்கும் உதவி வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாறிவிடும். அத்தகைய நிகழ்வைத்தான் எதிர்கொண்டனர் பண் ருட்டியை அடுத்த பாவைக்குளம் கிராம மக்கள்.

கடந்த நவம்பர் 9-ம் தேதி பெய்த கனமழையால் கடலூர் மாவட்டமே வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்குச் சேதத்தைச் சந்தித்தது. அந்தச் சோகம் சூழ்ந்து ஒரு மாதங்கள் ஆன நிலையிலும் கொடுமையான அனுபவத்திலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கின்றனர் கடலூர் மக்கள்.

பண்ருட்டியை அடுத்த பெரியக்காட்டுப் பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இறந்த சம்பவம் ரணமாக மாறிவிட்டது.

அதேபோன்ற மனநிலையில் தினம் தினம் மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர் பாவைக்குளம் கிராம மக்கள். கனமழையால் வீடுகளை இழந்து வீதியில் நிற்கின்றனர். கிராமத்தைச் சூழ்ந்த மழைநீரோ போக வழி தெரியாமல் குடியிருப்புகளையே இன்னமும் சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது.

“ராத்திரி நேரத்துல நாங்க படுற கஷ்டம் சொல்லி மாளாது. தவள சத்தம் காதப் பிளக்கும், கொசுக்கடி புடுங்கும், ஈரமாக இருக்கிற தரையில உட்கார முடியாது, புள்ளைங்க எல்லாம் நல்ல சாப்பாடு சாப்பிட்டு ஒரு மாசமாச்சு” என்கிறார் ஆரவள்ளி.

“இதுவரைக்கும் ஊராட்சித் தலைவர் வரவே இல்லை, ஏன் வரலன்னு கேட்டா, இந்த ஊர்ல எத்தனை பேரு செத்தாங்க, இங்க வந்து பாக்கறதுக்குன்னு சொல்றார், செத்துப்போனா ஒரு நாளுதாங்க துக்கம், ஆனா நாங்க ஒரு மாசமா செத்து செத்து பிழைக்கிறோமே அதுக்கு என்ன பதில் சொல்லப் போறார் ஊராட்சித் தலைவர்” என வேதனை பொங்க கேட்டார் விஜயலட்சுமி

அவரே தொடர்ந்தார், “நீங்க கட்சிக்காரங்க இல்ல அதனால எல்லா விஷயத்தையும் சொல்றோம், ஒரு மாசமா மழை தண்ணி அப்படியே நிக்குது, எங்க பாத்தாலும் தண்ணி, கவர்மெண்டல இருந்து யாரும் வரல, ரெண்டு நாளக்கி முன்னாடி பத்திரிக்கைக்காரங்க வந்தாங்க (பிரண்ட் லைன் அசோசியேட் எடிட்டர் டி.சுப்பிரமணியம்). அவங்கதான் எங்க ஊரப் பத்தி கேட்டாங்க ஒவ்வொரு வீடா போய்க் கேட்டாங்க, எல்லாத்தையும் பாத்தாரு, அப்புறம் கலெக்டர் ஆபிஸ்ல போயி கேட்டாராம், அதுக்கப்புறம்தான் முந்தாநேத்து கலெக்டர் ஆபிஸ்லேர்ந்து ரெண்டு அதிகாரிங்க வந்து கணக்கெடுத்திருக்காங்க. ஐயாயிரம் ரூவா தர்றதா சொல்லியிருக்காங்க. இதுக்கு மொதல்ல உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றார்.

இந்த நிலையில் நேற்று பாவைக்குளத்தில் ‘தி இந்து’ வாசகர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது கிராம மக்களிடையே உரையாற்றிய சமூக ஆர்வலர் அறிவழகன், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். கடலூர் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படும் நிவாரண உதவிகளையும் கூறினார்.

அதைத்தொடர்ந்து 460 பயனாளிகளுக்குப் போர்வை, பாய், பிரஷ், பேஸ்ட், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் மிகுந்த பரவசத்தோடு “இந்த அளவுக்குத் தாராளமாகக் கொடுத்திருக்கீங்க, ரொம்ப நன்றி சாமி” என்றனர்.

பெங்களூரில் வாசகர்களான தமிழ் பெண்கள் அமைப்பினர், இளம் பெண்களுக்கு மேலாடைகளை வழங்கியிருந்தனர். அந்தப் பொருட்கள் பாவைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுமிகளுக்கு வழங்கப்பட்டது. வடலூர் காய்கறி சந்தைப் பகுதியில் உள்ள கோயிலில் நடுங்கியவாறு அமர்ந்திருந்த முதியவர் ஒருவருக்கு கடலூர் நீதிமன்ற ஊழியரும் சமூக ஆர்வலருமான முனியப்பன் ‘தி இந்து’ வாசகர்கள் தந்த போர்வை ஒன்றை வழங்கினார். அதேபோல குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீராணம் ஏரிக் கரையோர கிராமமான கொத்தவாசலில் நேற்று நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன. 200 பேருக்கு போர்வை, பாய், பிஸ்கெட், கொசுவத்திச் சுருள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

புத்தூர் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ பிரபாகரன், வீராணம் ஏரி பாசன சங்கத் தலைவர் இளங்கீரன் ஆகியோர் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். புகைப்பட கலைஞரும் தன்னார்வ தொண்டருமான சதீஷ், அறிவு ஆகியோரும் இணைந்து செயலாற்றினர். மேலும் டி.நெடுஞ்சேரி மெயின் ரோட்டில் வந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிஸ்கெட் வழங்கப்பட்டது. நிவாரண பொருட்களை பெற்ற பலர் ‘தி இந்து’வுக்கு நன்றி தெரிவித்தனர்.

கடலூரில் திரும்பிய பக்கமெல்லாம் ‘தி இந்து’ வாசகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் குரல்கள் ஒலித்துக்கொண்ேட இருக்கிறது.

SCROLL FOR NEXT