சிறப்புக் கட்டுரைகள்

இன்னும் எத்தனை காலம்தான்...

செய்திப்பிரிவு

இன்னும் எத்தனை காலம்தான்...

​சீன அரசைப் பின்தொடரும் பிசாசாக விரட்டுகிறது, தியானென்மென் சதுக்கம் நாள். இது கால் நூற்றாண்டுக் கதை. 1989 ஜூன் 4 அன்று ஜனநாயக முழக்கங்களோடு பெய்ஜிங்கில் தியானென்மென் சதுக்கத்தில் கூடிய ஆயிரக் கணக்கான மக்களை ராணுவத்தின் துணையுடன் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியது சீன அரசு. கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கைகூட இன்றுவரை கசிந்துவிடாமல் அரசு ரகசியம் காக்கும் நிலையில், ஜனநாயகவாதிகளோ தியானென்மென் சதுக்கத்தைச் சுதந்திரத்தின் ஒரு குறியீடாகப் பார்க்கிறார்கள். இந்த ஆண்டு 25-வது ஆண்டு என்பதால், மக்கள் இதைப் பற்றிக் கொஞ்சமும் பேசிவிடக் கூடாது என்பதற்காக அரசு தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தது. 20 லட்சம் பேர் கண்கொத்திப் பாம்புகளாகச் சீனர்களின் இணையதளச் செயல்பாடுகளைக் கண்காணித்தனர். சமூக வலைத்தளங்களில், சம்பவ நாளை ஞாபகப்படுத்தும் 4-6-1989 தொடர்பான எந்த எண்களுக்கும் அனுமதி இல்லை. ‘மெழுகுவத்தி', 'இன்று' ஆகிய வார்த்தைகளுக்குக்கூட தடா. உலக வரலாறு கண்டிராத தணிக்கை இது என்கிறது இணைய உலகம். ஆனால், தன்னுடய ஒடுக்குமுறையால் இதுவரை தியானென்மென் சதுக்கம் நாளைப் பற்றித் தெரியாதவர்களுக்கு அரசே தணிக்கை வாயிலாகத் தெரியப்படுத்திவிட்டது என்றும் சொல்கிறார்கள் அவர்கள்.

எமன் வாகனம் மாறுதோ?

ஒட்டகம் என்றால், குர்பானி ஞாபகத்துக்கு வருகிறதா? இப்போது 'மிடில்ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சின்ட்ரம் மெர்'ஸையும் நினைவில் ஏற்றிக்கொள்ளுங்கள். மத்தியக் கிழக்கு நாடுகளில் மனிதர்களைச் சாய்க்கும் மூச்சடைப்பு நோய்க்கான கிருமிகள் ஒட்டகங்களிடமிருந்து பரவுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் கிருமியின் பேர்தான் இது. மேற்கண்ட நோயால் சமீபத்தில் 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 204 பேர் இறந்துள்ளனர்.

பால்கனி பேய்கள்

எகிப்தில் ஜனநாயகம் பேசுபவர்கள் பலரும் திடீர் திடீரெனச் செத்துப் போகிறார்கள். சமீபத்திய மரணம் பிரபல வலைப்பதிவர் பாஸம் சாப்ரி (31). இப்படி இறப்பவர்கள் பலரும் ஒரே மாதிரி பால்கனியில் இருந்து ‘தவறி விழுந்து' மரணத்தைத் தழுவுவது ராணுவத்தின் மீதான சந்தேகத்தை மக்களிடையே எழுப்பியிருக்கிறது.

எங்கேப்பா உலக நாட்டாமை?

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் ஆதரவில் புதிய அரசு ஏற்பட்டிருப்பதை இஸ்ரேல் விரும்பவில்லை. குடைச்சல் கொடுப்பதற்காகவே தாங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் மேலும் 1,500 வீடுகளைக் கட்டி இஸ்ரேலியர்களை அதில் குடியேற்றப்போவதாக இஸ்ரேலிய வீடமைப்பு அமைச்சர் யூரி ஏரியல் அறிவித்துள்ளார். உலகெங்கும் சமாதான ராஜாவாக நடித்துவரும் அமெரிக்கா இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பாலஸ்தீனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது நீடித்தால் இதுவரை இருந்திராத அளவில் பதிலடி தர நேரிடும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரித்துள்ளனர்.

ச்சீய்ய்…

ஆனாலும், சிங்கப்பூர்க்காரர்களுக்கு இவ்வளவு குசும்பு கூடாது. வெளிநாடு செல்லும் சிங்கப்பூர்க்காரர்கள் லபக்குதாஸ் மாணவர்களாக மாறி தூதரகங்களைப் படுத்துகிறார்களாம். வெளிநாட்டில் தனக்குத் தரப்பட்ட கோழிக்கறி மற்றவர்களுக்குத் தரப்பட்டதைவிட சின்னதாக இருந்ததாகச் சொல்லி, நிறவெறியே இதற்குக் காரணம் என்று தூதரகத்தில் முறையிட் டிருக்கிறார் ஒருவர். பாலியல் தொழிலாளியிடம் சென்றுவிட்டு, திருப்தி இல்லை; காசைத் திரும்பி வாங்கித்தர முடியுமா என்று தூதரகத்தை அணுகியிருக்கிறார் இன்னொருவர். “முடியல” என்று கதறுகிறார்கள் சிங்கப்பூர் தூதர்கள்.

அடிவாங்க காசு?

பிரேசில் அரசு தன்னுடைய காவல் துறைக்கு 15.88% ஊதிய உயர்வு அளிக்க முன்வந்திருக்கிறது. எல்லாம் உலகக் கோப்பை உபயம்தான். போட்டி நடக்கும் காலகட்டத்தில் 'சட்டம் ஒழுங்கு' கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளத்தான் இந்த ஏற்பாடு. பொதுவாகவே, லத்தீன் அமெரிக்க ரசிகர்கள் நம்மூர் கொல்கத்தா ரசிகர்களைப் போல. இந்த முறை பிரேசிலிலேயே போட்டி நடப்பதால் ஆடுகளம் அதகளம் ஆகலாம் என்பதால்தான் இந்த முன்னேற்பாடு!

நீங்களுமா ஆந்த்ரே சபாயகே?

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மக்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். செல்போனில் எஸ்.எம்.எஸ்-களுக்குத் தடை விதித்திருக்கிறது அந்நாட்டு அரசு. கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு குரூப் எஸ்.எம்.எஸ். மூலமாக ஆள் சேர்த்துவிடுகிறார்கள் என்ற பயத்தால். உள்நாட்டுக் கலகத்தால், 25% மக்கள் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்ட நிலையில், ஆப்பிரிக்க ஒன்றியம் மேற்கு நாடுகள் உதவியுடன் சில காலத்துக்கு முன்புதான் இடைக்கால அரசை ஏற்படுத்தி ஆந்த்ரே சபாயகேவைப் பிரதமராக நியமித்தது. 'ஜனநாயக ஹீரோ'தான் இப்போது எஸ்.எம்.எஸ்-களுக்குக் குண்டுவைத்திருக்கிறார்!

உங்களையெல்லாம் நம்பித்தானே இருக்கோம்?

எல் சால்வடாரின் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கிறார் சால்வடார் சாஞ்சேஸ் செரன் (69). அந்நாட்டின் அதிபர் பதவிக்கு வரும் முதல், முன்னாள் கொரில்லா தலைவர் சாஞ்சேஸ். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொலைகள் நடக்கும் எல் சால்வடாரில் குற்றங்களைக் குறைக்க முன்னுரிமை தருவேன் என்று சொல்லியிருக்கிறார் சாஞ்சேஸ்!

SCROLL FOR NEXT