தமிழ்நாட்டின் மகத்தான கல்வியாளர்களில் ஒருவரான முனைவர் முனிரத்தினம் ஆனந்த கிருஷ்ணனின் மறைவு ஒரு தலைமுறையின் தலைசாய்வு. மு.ஆனந்த கிருஷ்ணனை அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராகவும் கான்பூர் ஐஐடியின் மேனாள் இயக்குநராகவும் பலருக்குத் தெரியும். தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சிலுக்குப்பொறுப்பேற்று அவர் ஆற்றிய பங்களிப்பைக் கல்வித் துறையில் உள்ளவர்கள் அறிவார்கள். ஆனால், மிக முக்கியமான ஒரு காலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கைச் சிலரே அறிவார்கள். 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த பல முக்கிய மாற்றங்கள் தமிழின் வளர்ச்சியில் மைல்கல்கள். அவை கணித்தமிழ் தொடர்பானவை.
தமிழ் எழுத்துருக்கள் கணிப்பொறியில் முன்பே இடம்பெற்றிருந்தாலும் இணையத்தில் தமிழ் எழுத்துருக்கள் இடம்பெறத் தொடங்கிய காலம் அது. சுமார் 30-க்கும் மேற்பட்ட எழுத்துரு வகைகள் தமிழுக்கென இருந்தன. இந்த வளர்ச்சி மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தாலும், தரப்படுத்தப்படாத நிலையில் தமிழின் முன்னேற்றம் தடைப்பட்டது. தமிழ் எழுத்துரு முறையிலும் விசைப்பலகையில் தமிழை உள்ளீடு செய்யும் முறையிலும் தரப்படுத்தலைக் கொண்டுவரும் முயற்சியும் உலகத் தமிழர் மத்தியில் எடுக்கப்பட்டது. ஆனால், இது மிகப் பெரிய சவாலாக இருந்தது.
தமிழ் மொழி ஆட்சிமொழியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவோ நான்கு நாடுகளில் இருக்கிறது: இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா. அத்துடன் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உயர் தொழில்நுட்ப மையங்களில் பணியாற்றிய பலரும் தமிழ் எழுத்துகளை வடிவமைத்திருந்தார்கள். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் பல எழுத்துரு நிறுவனங்கள் இருந்தன. புலமைப் பூசல்களும் சந்தைப் போட்டியும் எழுத்துருக்களைத் தரப்படுத்துவதற்குத் தடையாக இருந்தன. இதற்கிடையில் தேவநாகரி எழுத்துருவை அடித்தளமாகக் கொண்டு, இந்திய அரசாங்கத்தின் மின்னணுவியல் துறை உருவாக்கிய குறியீட்டு, விசைப்பலகை வடிவமைப்புகள் தமிழுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், முற்றிலும் தமிழுக்கு அந்நியமாக இருந்தன. ஆக, உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து, தமிழுக்குத் தரப்படுத்தல் செய்வது கிட்டத்தட்ட அசாத்தியமாகக் கருதப்பட்ட காலம் அது.
1997-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற கணித்தமிழ் முன்னோடிகளில் ஒருவரான நா.கோவிந்தசாமி நடத்திய தமிழ்நெட் மாநாட்டில் தமிழ் எழுத்துரு தரப்படுத்தல்களுக்கான முதல் பெருமுயற்சி எடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில் அன்றைய தமிழ்த் துறை அமைச்சர் மு.தமிழ்க்குடிமகன் கலந்துகொண்டார். அந்த முயற்சிக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார். ஆனால், அந்த முயற்சி தொடர்வதில் பிறகு தாமதம் ஏற்பட்டது. பிறகு, அந்த மாபெரும் சவால், தனக்கான ஒரு ஆளுமைக்காகக் காத்திருந்தது. அந்த ஆளுமை ஆனந்த கிருஷ்ணன்!
1998-ல் கணித்தமிழ் ஆர்வலராக இருந்த என்னைப் போன்றவர்கள் மு.கருணாநிதி அரசிடம் தரப்படுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தத் தொடங்கினோம். அப்போது தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பச் செயற்படை (IT Task Force) என்கிற அமைப்பு முதல்வர் கருணாநிதியின் தலைமையில் இருந்தது. அதன் துணைத்தலைவராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் இருந்தார். கணித்தமிழ்த் தேவைகள் குறித்து மாறனிடம் நாங்கள் கோரிக்கைவைத்தபோது, அவர் அந்தப் பொறுப்பை அதேகாலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஆனந்த கிருஷ்ணனிடம் அளித்தார்.
ஆனந்த கிருஷ்ணன் ஒருபக்கம் அரசியல் தலைவர்கள், அரசு செயலர்களையும், மற்றொரு பக்கம் தகவல் தொழில்நுட்பர்கள், தமிழறிஞர்களையும் இணைத்து ஒரு வியூகத்தை வகுத்தார். மளமளவென செயல்பாடுகள் தொடங்கின. 1999-ல் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாடு மிகப் பெரிய திருப்புமுனை ஆகும். அந்த மாநாட்டில்தான் தமிழ் 99 விசைப்பலகைத் தரப்படுத்தலும், ‘டேம்’, ‘டேப்’ என்கிற இரு எழுத்துரு குறியீட்டுத் தரப்படுத்தல்களும் உருவாக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 15 நாடுகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பேராளர்களை ஒருங்கிணைத்து மிகப் பெரிய சாதனையைச் செய்தார் ஆனந்த கிருஷ்ணன். இந்தச் சாதனையை எட்டாவது உலக அதிசயம் என்று வர்ணித்தார் முதல்வர் கருணாநிதி. அதற்கடுத்த ஆண்டுகளில் கணித்தமிழ் ஆர்வலர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தை நிறுவுவதில் அவர் வெற்றிபெற்றார். தமிழ்கூறு நல்லுலகின் முக்கிய நகரங்களில் எல்லாம் தமிழ் இணைய மாநாடுகள் இன்று வரை நடக்கின்றன என்றால், அதற்கு அவர் போட்ட அஸ்திவாரம்தான் காரணம். தமிழ் இணையக் கல்விக் கழகம் போன்ற அமைப்புகள் உருவாகவும் அவரே முதன்மைக் காரணம்.
தமிழில் உள்ள எழுத்துரு முறைகளைச் சரிசெய்வதற்கே இவ்வளவு பாடுபட வேண்டியிருந்தது என்றால், உலக மொழிகள் அனைத்துக்கும் பொதுவான யூனிக்கோடு தரப்படுத்தலில் தமிழுக்கு உரிய இடத்தைப் பெறுவது அதைவிடப் பெரிய சவாலாக இருந்தது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரே மாதிரியான தீர்வு என்று இந்திய ஒன்றிய அரசு தன்னிச்சையாக மேற்கொண்ட தரப்படுத்தலை, அது தமிழுக்குப் பொருந்தாது என்று கூறி, தமிழர்கள் எதிர்த்தார்கள். ஆனால், நாம் சர்வதேச அளவில் போராட வேண்டிய தேவை ஏற்பட்டது. பல்வேறு நாடுகளும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் உறுப்பினர்களாக இருந்த யூனிக்கோடு கூட்டமைப்பில் தமிழ்நாடு அரசும் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து போராடியது. இதற்குப் பின்னால் இருந்தது ஆனந்த கிருஷ்ணனின் வழிகாட்டல்தான். ஐநா உட்பட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளில் பணியாற்றி அவர் திரட்டிவைத்திருந்த அனுபவமும் அறிவும்தான் நமக்கு உதவியது.
கணித்தமிழ் வட்டாரத்தில் அவரை நாங்கள் எல்லோரும் பேராசிரியர் என்றே அழைப்போம். பல்வேறு பேராசிரியர்கள் உறுப்பினர்களாக இருந்த அந்த அவையில், பேராசிரியர் என்று சொன்னால் அது ஆனந்த கிருஷ்ணனை மட்டுமே குறிக்கும். தன் இளமைக் காலத்தில் சமூக நீதிச் சிந்தனைகளாலும் பொதுவுடமைக் கோட்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டிருந்த ஆனந்த கிருஷ்ணன், பெரியாரிய-அண்ணாவிய அரசியல் மரபு வழங்கிய சாதனையாளர். மொழிக்கான அவரது பங்களிப்பு எந்த அளவுக்கு அறிவியல் வழிப்பட்டதாக இருந்ததோ அதே அளவுக்கு உணர்வுபூர்வமாகவும் இருந்தது.
தமிழ்நாட்டில் புதிய அலையைத் தொடங்கியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள்: திருப்பத்தூர்-வாணியம்பாடி பகுதியில் மு.ஆனந்த கிருஷ்ணன் பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்குங்கள். அவரது பெயரில் ஒரு கணித்தமிழ் விருதை உருவாக்கி, மொழித் தொழில்நுட்ப மாணவர்களுக்கு வழங்குங்கள். மிக முக்கியமாக, தமிழ் இணையக் கல்விக் கழகத்தை மேலும் மேம்படுத்துங்கள்.
- ஆழி.செந்தில்நாதன், பத்திரிகையாளர், பதிப்பாளர்.
தொடர்புக்கு: zsenthil@gmail.com