மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்திருந்த காந்தியைக் காண்பதற்காகச் செல்கிறார் கே.எம்.நடராஜன். அப்போது அவருக்கு வயது 13. முதன்முதலில் காந்தி தரிசனம் அப்போதுதான் அவருக்குக் கிடைத்தது. அந்த ஆழமான பதிவு அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. 1947 மதுரை கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் படிப்பை விட்டுவிட்டு இயக்கத்தில் இணைவது என்ற முடிவோடு பொதுவாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இறுதி மூச்சு வரை காந்தியம், சர்வோதயம் என்று வாழ்ந்த கே.எம்.நடராஜன் தன்னுடைய 89-வது வயதில் கரோனா காரணமாக மே 24 அன்று காலமானார்.
அரசாங்க வேலையை உதறித் தள்ளிவிட்டு, காங்கிரஸ் தலைவர் சங்கர்ராவ் தேவின் பாதயாத்திரையில் ராமேஸ்வரம் முதல் பாலக்காடு வரை நடராஜன் கலந்துகொண்டார். பின்னர், காந்தி கிராமத்தில் நடைபெற்ற ஊழியரகத்தில் நடந்த பயிற்சிப் பட்டறையில் ஒரு பயிற்சியாளராக இணைந்தார். அப்போதுதான் அவருக்கு சர்வோதயத் தலைவர் ஜெகநாதனுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஜெகநாதன் - கிருஷ்ணம்மாள் தம்பதியுடன் அவருக்கு ஏற்பட்ட உறவு சர்வோதய இயக்கத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, இயக்கத்தின் வேராக இருந்து செயல்பட வைத்தது. தஞ்சாவூரில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வாங்கிக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களில் கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் தம்பதியுடன் துணைநின்ற பெருமையும் அவருக்கு உண்டு. நாகப்பட்டினத்திலும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளிலும் இறால் பண்ணை வைப்பது தஞ்சைப் பகுதியையே பாலைவனமாக மாற்றிவிடும் என்று மக்கள் இயக்கத்தின் மூலமாகவும் சட்ட வழிமுறைகளின் மூலமாகவும் வழக்கறிஞர் மாரியப்பன், கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் தம்பதியர் ஆகியோருக்கு உறுதுணையாகச் செயல்பட்டு இறால் பண்ணைகளை அகற்றுவதற்குக் காரணமாக இருந்தார் நடராஜன்.
வினோபா பாவே ‘பூமிதான இயக்க’த்தை முன்னெடுத்து இந்தியா முழுவதும் பாதயாத்திரையாக வந்துகொண்டிருந்தபோது அவரோடு இணைந்து கே.எம்.நடராஜனும் 11 மாதங்கள் தமிழகம் முழுவதும் பயணித்தது அவருடைய வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு. 1960-களில் ஜெயப்பிரகாஷ் நாராயணின் ஏற்பாட்டின்படி பல இளைஞர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு செயல்படுத்தப்பட்ட கிராம வளர்ச்சித் திட்டங்களையும் விவசாய-பாசன நடைமுறைகளையும் நேரில் கண்டு பயிற்சி பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் நடராஜனும் அடங்குவார். பயிற்சி பெற்ற கையோடு தமிழகம் திரும்பியதும், பூமிதான இயக்கத்தில் கிடைத்த நிலங்கள் விவசாய வேலைகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்ற குறைபாடுகளைப் போக்குவதற்காக அவர்களுக்குக் கிணறுகள் வெட்டிக் கொடுப்பது, நிலங்களை மேம்படுத்துவதற்காக அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு குழுமமாக உருவாக்கி, வளர்ச்சித் திட்டங்களைப் பொதுமைப்படுத்துவது என்று பல விவசாய வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்து செயல்பட்டார். ஜே.சி.குமரப்பா, கெய்த்தான், மார்ஜூரி ஸ்கைஸ், விமலா டக்கர் போன்ற காந்தியர்களுடனும் செயல்பாட்டாளர்களுடனும் நெருக்கமாக இருந்து செயல்பட்டவர் நடராஜன்.
நடராஜன் காந்திய இயக்க வேலைகளில் எவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டாரோ அதே அளவுக்குப் புத்தகங்கள் வாசிப்பது, விவாதிப்பது, எழுதுவது என்றும் செயல்பட்டார். கடைசி வரை சர்வோதய இலக்கியப் பண்ணை மற்றும் காந்தி இலக்கிய சங்கம் ஆகிய நிறுவனங்களில் முதன்மைப் பொறுப்பில் இருந்தார். தன்னுடைய தொடர்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அவர் ஆரம்பித்தவைதான் ‘சர்வோதய தலிஸ்மன்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையும், ‘சர்வோதயம் மலர்கிறது’ என்ற தமிழ்ப் பத்திரிகையும். இவை தவிர ‘கிராமராஜ்யம்’ என்ற வாரப் பத்திரிகை நடத்திய அனுபவமும் அவருக்கு உண்டு.
காந்தியச் சிந்தனைகளை மக்களுக்குக் கொண்டுபோவதற்கு எந்தெந்த வழிமுறைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்த முக்கியமானவர்களுள் ஒருவர் நடராஜன். இளைஞர்களை உற்சாகப்படுத்திய அதே சமயம் இந்த இயக்கத்தில் இருந்த முதியவர்களுடனும் நெருக்கமான உறவைத் தக்கவைத்துக்கொண்டார். இறுதி மூச்சு வரை காந்தியப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்த கே.எம்.நடராஜனின் வாழ்க்கை, தமிழகத்தின் காந்தியச் செயல்பாடுகளில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும்.