ரசிகமணியின் பேரனும் இலக்கியச் செயற்பாட்டாளருமான தீப.நடராஜன் மே 22 அன்று காலமானார். கி.ரா.வின் மறைவையடுத்த ஒரு வாரத்துக்குள்ளாகவே அவரது ஆப்த நண்பரான தீப.நடராஜனும் மறைவுற்றது தொடர் சோகம். தனது தாத்தா டி.கே.சி. பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் ‘கவிதையும் ஆனந்தமும்’ எனும் நூலாக வெளிவந்தது. ரசிகமணி தனது வாழ்நாளில் தமிழின் முக்கிய ஆளுமைகள் 26 பேருக்கு எழுதிய கடிதங்கள் இவரால் தொகுக்கப்பட்டு ‘ரசிகமணி கடிதங்கள்’ எனும் நூலாகவும், நண்பர்கள் கி.ரா - தீப.நடராஜன் இடையிலான கடிதங்கள், ‘பஞ்சவடியும், ராஜபவனமும்’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்காசி மூத்த குடிமக்கள் சார்பாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘முதியோர் மடல்’ காலாண்டிதழின் ஆசிரியராகவும் இவர் செயல்பட்டுவந்தார்.
தமிழிலக்கியத்தில் கடித இலக்கியத்துக்கென ஒரு தனித்த மரபு உண்டு. கடித இலக்கியத்தை வளர்க்கும் பணியில் ஆர்வம் கொண்டிருந்தவர்களில் ரசிகமணி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன் ஆகியோர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். 1960-ல் கி.ராஜநாராயணனும் தீப.நடராஜனும் கையெழுத்துக் கடிதப் பத்திரிகையொன்றை நடத்தத் திட்டமிட்டனர். கு.அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, கி.ராஜநாராயணன், தீப.நடராஜன், நா.பார்த்தசாரதி ஆகிய எட்டு பேர்தான் இந்தக் கையெழுத்துக் கடிதப் பத்திரிகையின் ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள். பத்திரிகைக்கு ‘ஊஞ்சல்’ என்று அவர்கள் பெயர்சூட்டினர்.
இந்த ‘ஊஞ்சல்’ கடிதம் ஒவ்வொருவரிடம் செல்லும்போது, அதற்குப் பதில் கடிதம் ஒன்றும், சொந்தக் கடிதம் ஒன்றும் எழுத வேண்டும். இவ்வாறு ஏழு பேரிடமும் சென்று இறுதியில் கி.ரா.விடம் வந்துசேரும்போது ஓர் இதழ் நிறைவு பெற்றதாக அர்த்தம். கி.ரா.வின் பெரிதான முயற்சியால் வந்துகொண்டிருந்த ‘ஊஞ்சல்’ சில காலங்களில் முற்றுப்பெற்றுவிட்டாலும், நண்பர்கள் கி.ரா. – தீப.நடராஜன் இடையிலான கடிதப் போக்குவரத்து கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துவந்திருக்கிறது. தன் வாழ்நாளில் கி.ரா. அதிகமாகக் கடிதங்கள் எழுதியது தீப.நடராஜனுக்குத்தான்.
ரசிகமணி 1954-ல் மறைவுற்ற பிறகு தீப.நடராஜனைப் பார்க்க அடிக்கடி குற்றாலத்துக்கும் பின்பு தென்காசியிலுள்ள ‘பஞ்சவடி’ இல்லத்துக்கும் சென்று அவரிடம் இலக்கிய நாட்டத்தை விதைத்தவர் கி.ரா. இருவருக்குமிடையே கடிதப் போக்குவரத்தும் தொடர்ந்துகொண்டிருந்தது. ஒரு கடிதத்தில் ‘கதவு’ கதையையும் அனுப்பிவைத்திருக்கிறார். வாசகர்களிடையே பின்பு பெருத்த வரவேற்பைப் பெற்ற ‘கதவு’ கதையின் முதல் வாசகர் தீப.நடராஜன்தான்.
‘அன்புள்ள கி.ரா.வுக்கு’ என்ற கடிதத் தொகுப்புக்கு தீப.நடராஜன் எழுதிய அணிந்துரை சிறப்பானது. அதுபோல, கி.ரா.வின் ‘சங்கீத நினைவலைகள்’ தொகுப்புக்கு எழுதியுள்ள முன்னுரை முக்கியமான இசை ஆய்வுக் கட்டுரை. கி.ரா.வின் ‘நிலைநிறுத்தல்’ தொகுப்புக்கு எழுதியுள்ள அறிமுகக் கட்டுரையும் அத்தனை ரசனையானது. சில மருத்துவமனை தினங்களுக்குப் பிறகு, வீடு திரும்பிய நிலையில் மிகுந்த பிரயத்தனப்பட்டு அவர் எழுதிக் கொடுத்த கட்டுரை இது. டி.கே.சி.யின் பேரன் என்பதற்காக மட்டுமல்ல; கி.ரா.வின் ஆப்தன் என்கிற முறையிலும் தன்னிடம் பலரும் அன்புகாட்டுகிறார்கள் என்பதில் அவருக்குப் பெருமிதம் இருந்தது.
‘தொலைபேசியில் பேசினால் எல்லாம் காற்றோடு காற்றாய்க் கலந்து போய்விடும். கடிதம் எழுதும்போது கிடைக்கும் நிறைவை அனுபவத்தில்தான் உணர முடியும்’ என்று சொல்லும் தீப.நடராஜன் எனக்கும் கடிதங்கள் எழுதியுள்ளார். எல்லாக் கடிதங்களிலும் கி.ரா.வைப் பற்றியோ, அவரது படைப்புகள் பற்றியோ தவறாது குறிப்பிடுகிற வழக்கத்தைக் கொண்டிருந்தார். ‘தாத்தாவைவிட 14 ஆண்டுகள் கூடுதலாக இறைவன் என்னை இவ்வுலகிலே பயணிக்க வைத்துள்ள கருணையை என்னென்பேன்!’ என்று ஒரு வாட்ஸ்அப் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஏதேனும் உள்ளுணர்வோ என்று தெரியவில்லை.