அம்பேத்கர் மட்டும்தான் உணர்ச்சிகளைக் காட்டிலும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்
இந்தியா சுதந்திரம் பெற்றதைக்காட்டிலும் முக்கியமானது, அதன் அரசியலமைப்பை இயற்றிய வரலாறு. அண்டை நாடான நேபாளம் மன்னராட்சியிலிருந்து விடுபட்டுப் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குள் சந்தித்திருக்கும் சண்டை சச்சரவுகளையெல்லாம் பார்த்தால், நாம் எவ்வளவு பெரிய சாதனை புரிந்திருக்கிறோம் என்பது புரியும்.
இந்தியாவுக்குச் சுதந்திரம் அறிவிக்கப்படும் முன்பே அதன் அரசியலமைப்பின் பணி தொடங்கிவிட்டது. 1946 - ல் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் வெறும் 14% பேர்தான் வாக்குரிமை பெற்றிருந்தார்கள். அவர்களால் மாகாணத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே அரசியலமைப்பு அவையின் உறுப்பினர்களை முடிவு செய்தார்கள். அவையில் சமஸ்தான மன்னர்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தார்கள். இருந்தாலும்கூட இயற்றப்பட்ட அரசியலமைப்பு இந்தியக் குடிமக்கள் அனைவரின் நலன்களையும் பாதுகாப்பதாகத்தான் அமைந்திருக்கிறது.
அம்பேத்கரின் நிபுணத்துவம்
அரசியலமைப்பின் ஆலோசகராக இருந்த பனகல் நரசிங்க ராவ், தனது நிர்வாகம் மற்றும் நீதித் துறை அனுபவங்களின் காரணமாகப் பல்வேறு நாடுகளின் மிகச் சிறந்த அரசியலமைப்புக் கூறுகளைத் தேர்ந்தெடுத்து வழங்கி இந்திய அரசியலமைப்புக்கு வழிகாட்டினார். வங்கத்திலிருந்து உறுப்பினராகத் தேர்வாகிய அம்பேத்கர், அவையில் விவாதிக்கப்பட்டு ஒருவாறு உருவம் கண்டுவிட்ட அரசியலமைப்பைத் தனது நிபுணத்துவத்தால் மேலும் மெருகூட்டினார்.
அன்றைய பம்பாய் மாகாணத்திலேயே பிறந்து வளர்ந்து பணி செய்த அம்பேத்கர் ஏன் வங்கத்திலிருந்து பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
அம்பேத்கர் 1942-ல் பட்டியல் சாதியினருக்கான முதல் அரசியல் கட்சியான ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷனைத் தொடங்கினார். அக்கட்சி 1946-ல் நடந்த மாகாணத் தேர்தலில் இந்தியா முழுவதிலும் 51 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், வங்கத்தில் ஓரிடத்திலும் மத்திய மாகாணத்தில் ஓரிடத்திலும் மட்டுமே அதனால் வெற்றிபெற முடிந்தது. அதே ஆண்டில் மாகாண உறுப்பினர்கள் ஒன்றுகூடி அரசியலமைப்பு அவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர். மாகாணங்களில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியிருந்த காங்கிரஸ் ஆங்கில ஆட்சியில் சிறைக் கொடுமை அனுபவித்த தலைவர்களுக்கு அரசியலமைப்பு அவை உறுப்பினர் என்ற பதவியை அளித்தது.
இந்தச் சமயத்தில்தான் வல்லபாய் பட்டேலின் அறிவுறுத்தலின்படி அம்பேத்கர் பம்பாய் மாகாணத்திலிருந்து அரசியலமைப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டார். வங்கத்தின் ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன் தலைவராக இருந்த ஜோகேந்திர நாத் மண்டல், முஹம்மது அலி ஜின்னாவின் நண்பர். எனவே, மண்டல் முஸ்லிம் லீக் ஆதரவைப் பெற்று அம்பேத்கரை வங்கத்திலிருந்து அரசியலவைக்குத் தேர்ந்தெடுக்கச் செய்தார். பின்னாட்களில் மண்டல் பாகிஸ்தானின் தற்காலிக அரசியலவைக்குத் தலைவராகவும் அந்நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் பதவிவகித்தார். இந்தியாவில் அம்பேத்கர் வகித்த அதே மதிப்புக்குரிய பதவியை பாகிஸ்தானிலும் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரே வகித்திருக்கிறார்.
அம்பேத்கரின் தேவை
பம்பாய் மாகாணத்தின் பிரதிநிதியாக இருந்த எம்.ஆர்.ஜெயகர் அரசியலமைப்பு அவையிலிருந்து விலகிக்கொள்ள, அவரது இடத்துக்கு அம்பேத்கர் சென்றார். அவர் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தபோதும் அவரது தேவை அரசியலமைப்பு அவைக்கு அவசியமானதாக இருந்தது. அரசியலமைப்பு அவைக்குள் நுழையவே அனுமதிக்கப்படாத அம்பேத்கர்தான், கடைசியில் அந்த அரசியலமைப்புக்கு எழுத்து வடிவம் கொடுத்தார்.
இந்தியாவில் அமையவிருக்கும் புதிய அரசியலமைப்பு, பட்டியல் சாதியினருக்கு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும் என்று அம்பேத்கர் நம்பினார். அதன் காரணமாகவே இந்தியாவில் பட்டியல் சாதியினரின் நிலையைப் பற்றி ஐக்கிய நாடுகள் அவைக்கு அனுப்புவதற்காக அவர் தயாரித்திருந்த அறிக்கையை அனுப்பாமல் நாட்களைத் தள்ளிப்போட்டார். கடைசியில், அரசியலமைப்பில் பட்டியல் சாதியினரின் பாதுகாப்புக்கான அம்சங்களைப் பற்றி அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. எனினும், அவற்றை அரசு வலிமையான முறையில் செயல்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டார்.
சாதி அமைப்பு ஏன்?
அம்பேத்கர் மட்டும்தான் தீண்டாமை என்னும் சமூக அவலத்துக்கு எதிராகப் பணிபுரிந்தாரா? அவருக்கு முன்பே சீர்திருத்தவாதிகள், ஆன்மிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என்று தீண்டாமையை எதிர்த்துப் பணியாற்றிவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே உணர்வுபூர்வமாகத்தான் தீண்டாமை எதிர்ப்பில் ஈடுபட்டார்கள். அம்பேத்கர் மட்டும்தான் உணர்ச்சிகளைக் காட்டிலும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டார். சாதியும் தீண்டாமையும் இந்திய நாட்டில் மட்டும் எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி நடத்தினார். ஒருவரைத் தொடர்ந்து ஏழையாக வைத்திருக்கவும், அவரிடம் மிகக் குறைவான சம்பளத்தைக் கொடுத்து அதிகமான வேலைகளை வாங்கவும் ஏற்படுத்தப்பட்டதுதான் சாதி என்ற அமைப்பு. இந்த அமைப்பை இந்து மத சாஸ்திரங்கள் பாதுகாக்கின்றன என்று தனது ஆராய்ச்சியின் முடிவில் வெளிப்படுத்தினார்.
தீண்டாமை ஒரு சமூகப் பிரச்சினை. மக்களிடம் மன மாற்றங்களை உருவாக்குவதன் மூலம் தீண்டாமையை ஒழித்துவிடலாம் என்றுதான் மற்ற தலைவர்கள் கருதினார்கள். ஆனால், தீண்டப்படாத மக்கள் தங்களது உரிமைகளை இழந்து நிற்கிறார்கள். எனவே, இது ஒரு அரசியல் பிரச்சினை என்று அம்பேத்கர் கூறினார். அரசியல்ரீதியில் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணவும் முயன்றார். அந்நிய ஆட்சியாளர்கள் என்றபோதும் ஆங்கிலேயர்களை அணுகி தீண்டப்படாத மக்களுக்கு அரசியலில் பங்கெடுக்கும் உரிமையைக் கோரினார். லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாடுகளில் தனது கோரிக்கையை எடுத்துவைத்தார். அதன் விளைவாக தீண்டப்படாத நிலையிலிருந்த மக்கள் நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் உறுப்பினர் ஆவதற்கு வழிசெய்தார்.
அம்பேத்கரின் சோஷலிசக் கனவு
அம்பேத்கர் அரசியலமைப்பின் உருவாக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டதால் பட்டியல் சாதியினருக்காக அவர் பல காலமாகக் கோரிவந்த உரிமைகளைப் பெற்றுத்தர முடிந்தது. அவையில் அவரது விவாதங்கள் பட்டியல் சாதியினருக்கானதாக மட்டுமே இருந்திருந்தால், அவர் வரலாற்றில் வெறும் சாதிக் கட்சித் தலைவராகவே சுருங்கிப்போயிருப்பார். ஆனால், அவர் சிறுபான்மையினரின் நலன்களையும் பாதுகாக்க முயன்றார். ‘முக்கியத் தொழில்துறைகள் அனைத்தும் அரசால் நடத்தப்பட வேண்டும் என்ற சோஷலிசக் கனவும் அவருக்கு இருந்தது. காப்பீடு, அரசின் தனியுரிமையாக இருக்க வேண்டும், அனைத்து விவசாய நிலங்களையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அவற்றைச் சீர்படுத்தி விவசாயிகளுக்குக் குத்தகை முறையில் பங்கிட்டு வழங்க வேண்டும்’ என்பன போன்ற அம்பேத்கரின் பல சமதர்மக் கனவுகளில் கொஞ்சமே கொஞ்சம் மட்டும்தான் அரசியலமைப்பின் வழியாக நிறைவேறியிருக்கிறது.
வலுவான நடுவணரசு, அரசின் அலுவல்மொழி பற்றிய அரசியலமைப்புப் பிரிவுகளெல்லாம் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சமமான அரசியல் உரிமையை வழங்கிவிடவில்லை. ஆனால், அவர்கள் அனைவருக்கும் விரும்பிய மதங்களைப் பின்பற்றும் உரிமை, தமது மொழியைப் பாதுகாக்கும் உரிமை, அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால் அதை எதிர்த்து வழக்கிடும் உரிமை ஆகியவை சர்வநிச்சயமாக உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன. அரசியல் உரிமைகளைக் காலப்போக்கில் போராடிப் பெற்றுக்கொள்ளலாம். இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் பிரிவு அப்படித்தானே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு நேரெதிராக, ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் இயங்கும் பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகளுக்கு மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகளைக் கொண்டிருக்கும் முகப்புரையில் தொடங்கி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான பிரிவுகள், சிறுபான்மையினர் உரிமைகளைப் பற்றிய பிரிவுகள் என்று கண்களை உறுத்துபவை நிறையவே இருக்கின்றன.
அரசியலமைப்பின் அடிப்படையை நாடாளு மன்றத்தால் மாற்றி எழுதிவிட முடியாது. அதன் காவலராக உச்ச நீதிமன்றமும் இருக்கிறது. எனினும், இந்திய அரசியலமைப்பு, மக்களாகிய நம்மால் இயற்றப்பட்டதாகத்தான் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இயற்றியவர்களுக்கும் அதைக் காக்கும் கடமை இருக்கிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தில் அக்கடமையை நினைவுகூர்வோம்!
- செல்வ புவியரசன், வழக்கறிஞர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: selvapuviyarasan@gmail.com
டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தினம்