சிறப்புக் கட்டுரைகள்

பாவத்தில் பங்கேற்பது யார்?

கவுதம் பாட்டியா

இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கும் உண்மையான நிலைமைக்கும் இடையில் இருக்கும் நகைமுரணை பாரிஸ் கூட்டம் வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது. ஆம், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு முன்னுதாரணமாகிவருகிறது இந்தியா! உலகில் உச்சபட்சமாக மாசடைந்த முதல் 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன என்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம். இந்நாட்டின் தாய் நதிகள் ஆதாரம் இழந்து வானம் பார்த்த பூமியாக மாறிவருகின்றன. மொத்தமுள்ள நிலப் பரப்பில் 23.7% மட்டுமே வனமாக இருப்பதாக உலக வங்கி தெரிவிக்கிறது. சுவாசக் கோளாறு மற்றும் நீர் மூலமாகப் பரவும் நோய்களுக்கு உலகின் தலைநகரமாகிவிட்டது.

இப்படிப் படுமோசமான புள்ளிவிவரங்களைச் சுமந்து கொண்டிருந்தாலும் ‘வளர்ச்சி’க்கான திட்டத்தில் எந்த மாற்றத்தையும் இந்திய அரசு செய்வதாக இல்லை. உலகத் தரம் அனுமதிப்பதைவிடவும் 20 மடங்கு அதிகப்படியாக கார்பனை உமிழ்ந்து 20-ம் நூற்றாண்டில் சுற்றுச்சூழலை மாசுபடுத்திய பெருமை அமெரிக்காவுக்குத்தான் சேரும். 21-ம் நூற்றாண்டில் அந்தப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. நமக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டுவருகிறோம். அதிலும் கார்பன் வெளியீட்டில் இந்தியா தன் முத்திரையைப் பதிக்க ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் செய்ய வேண்டியவை இதோ: ஆளுக்கு இரண்டு கார்கள், நான்கு அடுப்பு கேஸ் ஸ்டவ், எக்கச்சக்கமான மின்னணு இயந்திரங்கள், வீட்டின் அடித்தளம் முழுக்க டீப் ஃபிரீசர், நாடு முழுவதும் சுற்றுலா போக வேண்டும், கண்ணு மண்ணு தெரியாமல் செலவு செய்ய வேண்டும், தினந்தோறும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டும், உணவில் அதிகப்படியாக மாமிசம் சேர்த்துக்கொள்ள வேண்டும், இன்னும் 12 மடங்கு அதிகமாகக் குப்பை போட வேண்டும். அமெரிக்காவைப் பழிவாங்க இதுவே சிறந்த வழி. என்ன பிதற்றல் இது எனத் தோன்றுகிறதா?

பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் வரலாற்றுப் பாதை இதுதானே! தொழில்புரட்சிக்குப் பிறகு அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒரு நூற்றாண்டில் இப்படித்தான் வளர்ந்தன. அடுத்தது அந்த வெறி சீனாவைப் பிடித்தாட்ட அதே வளர்ச்சியை இரண்டே தசாப்தங்களில் அடைந்தது. மிக மோசமாக மாசுபடுத்தும் நாடு என்ற இடத்தை எட்டிப்பிடித்தது. இப்போது மாற்று வழிக்கான பாதையில் அமெரிக்காவோடு கைகோத்து நிற்கிறது. இத்தனைக் காலம் பின்பற்றிய உச்சபட்ச நுகர்வுக் கலாச்சாரத்தைத் தற்போது பசுமை எரிவாயு மற்றும் பசுமைத் தொழில்நுட்பத்தின் ஊடாகப் பின்தொடர்வேன் என்கிறது.

இவர்களோடு ஒப்பிடும்போது கொலம்பியா, நைஜீரியா, காம்பியா, மேற்கு ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிலையில்தான் இந்தியாவும் இருக்கிறது. ஆனால், இந்தச் சிறு நாடுகளைப் போல் அல்லாமல் கரி நச்சைக் காற்று மண்டலத்தில் கலப்பதில் அதிபயங்கரமாகப் பங்காற்றிவருகிறது. பெட்ரோல், டீசல், கரி போன்ற படிம எரிபொருட்களையும் மேற்கத்திய மாதிரிகளையும் பின்பற்றாமல் வறுமையை ஒழிக்க இந்தியாவுக்குத் தெரியவில்லை. அதற்கான நிதியோ தொழில்நுட்பமோ இந்தியாவிடம் இல்லை. டெல்லியை மாசற்ற நகரமாக்கும் சோதனை முயற்சியில் நிகழ்ந்த குளறுபடிகளே இதற்குச் சாட்சி.

தொழில்நுட்பத்தின் தோல்வி

மாற்றுத் தொழில்நுட்ப முயற்சி படுதோல்வி அடைந்த நகரம் புது டெல்லி எனலாம். டெல்லியின் சுவாசக் குழாயை மாசுப்பாட்டில் இருந்து காப்பாற்றலாம் என 15 நாட்களுக்கு ஒரு சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் டெல்லி வீதிகளில் தனியார் கார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அந்த நாட்களில் சட்டவிரோதமாக இயங்கிவரும் தொழிற்சாலைகளோ, சரக்கு லாரிகளோ, பேருந்துகளோ முடக்கப்படவில்லை. எரிபொருளுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு, மிதிவண்டிகளுக்கு, மாசுபடுத்தாத பிற வாகனங்களுக்கு எத்தகைய ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மாற்றம் கொண்டுவர என்ன தேவை? இரண்டு அல்லது மூன்று கார்கள் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதா? அல்லது கார் இல்லாதவர்கள் அரசுப் போக்குவரத்து வாகனங்களில் இலவசமாகப் பயணிக்க அனுமதிப்பதா?

இந்திய நகரங்களைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்கக் காரணம் போக்குவரத்துதான் என்பதை நமக்கு எடுத்துச்சொல்ல நிபுணர்கள் தேவையில்லை. நெடுஞ்சாலைகளையும் அரசுப் போக்குவரத்து வாகனங்களையும் அதிகப்படுத்துவதற்குப் பதிலாக வளர்ச்சிக்கான திட்டங்கள் வேறு கோணத்தில் வடிவமைக்கப்பட வேண்டும். அதாவது, போக்குவரத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான திட்டமிடல் தேவை. டெல்லி சோதனை முயற்சியைப் போன்றுதான் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகள் இந்தியாவில் அரைவேக்காடுத்தனமாக நடத்தப்படுகின்றன.

எது வளர்ச்சி?

இந்தியா, சீனா, ஆப்பிரிக்க நாடுகள் இப்படி எதுவாகவிருந்தாலும் வளர வேண்டும், செழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், உலக அரங்கில் இந்தியா முன்வைக்கும் முகத்துக்கும் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள்தான் கவலைகொள்ளச் செய்கின்றன. பாரிஸ் கூட்டத்தில் நடந்த அத்தனை பேச்சுவார்த்தைகளிலும் ‘பருவநிலை நீதிக்கும்’, ‘நிலையான வாழ்க்கை முறைக்கும்’ஆதரவு தெரிவிப்போம் எனக் குரல் எழுப்பினார் பிரதமர் மோடி. ஆனால் நிதர்சனம் என்ன? 2008-லேயே பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த எட்டுப் புள்ளிகள் கொண்ட தேசியச் செயல்திட்டத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார். அதன்படி சூரிய ஆற்றலை வணிகரீதியாக வளர்த்தெடுப்பது, கட்டுமானங்களில் புதிய ஆற்றல் திட்டம் அமல்படுத்துவது, நகர பொதுப் போக்குவரத்துக்குக் கூடுதல் ஊக்கத்தொகை ஒதுக்குவது உள்ளிட்ட எட்டு செயல்திட்டங்கள் முடிவெடுக்கப்பட்டன. இவை அத்தனையும் இன்று தூசி படிந்து கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மாறாக பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றி உலகத்தை அதிகப்படியாக மாசுபடுத்தும் மூன்றாம் நாடு இந்தியா என்ற பெயர் பெற்றிருக்கிறோம்!

யோசிக்க நேரம் இல்லை

இந்த பாரிஸ் ஒப்பந்தத்திலும் வார்த்தை ஜாலம் அன்றி வேறெதுவும் இல்லை. தொழில்வளம் மிக்க நாடுகள் வளரும் நாடுகளுக்குத் தருவதாக ஒப்புக்கொண்ட நிதியும் தொழில்நுட்பமும் வந்துசேரும் வழி புலப்படவில்லை. மோடி சுட்டிக்காட்டியதைப் போலப் பருவநிலை ஒப்பந்தத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் பணக்கார நாடுகள் என்பது உண்மைதான். அதே சமயம், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் திருத்தம் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். வாழ்க்கை முறை, நகரப் போக்குவரத்து, சமூக உள்கட்டமைப்பு எனப் பல அடுக்குகளில் இந்தியா கட்டாயம் மாற்றம் கொண்டுவந்தாக வேண்டும். தேசிய அளவில் தொழில் சட்டத்திலும், கட்டுமான அமைப்பிலும் சூழலியல் பார்வை தேவைப்படுகிறது.

வடகொரியா, போசானியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளின் அரசியல் சிக்கல்களுக்கு சர்வதேச நிலைப்பாடு என்று வரும்போது இந்தியா மவுனமாக ஒதுங்கித்தான் நின்றிருக்கிறது. அதேபோல பருவநிலை மாற்றத்துக்கும் இருந்துவிட முடியாதே! ஏனெனில், மத்தியப் பிரதேசத்திலும் மகாராஷ்டிராவிலும் தொடர் வறட்சி, இமாலயப் பனிப் பாறைகள் உருகிக்கொண்டிருக்கின்றன. அதிலும் காஷ்மீரும் சென்னையும் எதிர்கொண்டிருக்கும் மழை வெள்ளச் சேதம் இனியும் மதில் மேல் பூனை போல வேடிக்கை பார்க்க முடியாது என்பதை உணர்த்திவிட்டன. வளர்ந்த நாடுகளின் பாவச் செயல்களைச் சுட்டிக்காட்டுவதில் காட்டும் வேகத்தை நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்வதிலும் காட்ட வேண்டும். அதிகப்படியான கட்டுமானம், ஆற்றுப்படுகையிலும் வெள்ளப் பரப்புகளிலும் குடியேறுவது, கண்மூடித்தனமாக நகரத்துக்குப் புலம்பெயர்தல், சட்டவிரோதமான தொழிற்சாலைகள் எண்ணிலடங்காமல் பெருகுவது, சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வு இன்மை, கட்டுப்பாடற்ற கார் வியாபாரம், போக்குவரத்திலும் வரையறை இன்மை, பசுமையான மாற்று வழிகளே இல்லாத நிலை இப்படிப் பல கட்டங்களில் இந்தியா பின்தங்கியிருக்கிறது. இனியும் சுயமாகச் சிந்தித்துத் தீர்வுகளை முன்னெடுக்கத் தவறினால் பேரழிவு வெகுதூரத்தில் இல்லை.

பருவநிலை மாற்றம் என்பது மனிதரால் ஏற்பட்டதா அல்லது இயற்கை நிகழ்வா போன்ற கேள்விகளை வளர்ந்த நாடுகளில் பலர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலர் பருவநிலை மாற்றம் என்பதே மாயை என்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பும் அளவுக்கு நாம் வசதிபடைத்தவர்கள் இல்லையே! தற்போது இருக்கும் நிதி நிலவரத்துக்கும் இயற்கை வளத்துக்கும் மாற்று முறைகளை உடனடியாகக் கண்டுபிடித்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். பெருநகரங்களான டெல்லியும் சென்னையுமே பேரழிவின் மண்டலங்களான பிறகும் யோசித்து முடிவெடுப்போம் என நிற்கக் காலம் நம் கையில் இல்லை!

©‘தி இந்து’ தமிழில்: ம. சுசித்ரா

SCROLL FOR NEXT