2015-ன் தருணங்கள் இவை. உலகெங்கும் எவ்வளவோ நடந்திருக்கின்றன இந்த ஆண்டில். இந்தியப் பார்வையில் நம்மை அதிகம் கவனிக்க வைத்த, கலங்க வைத்த, நெகிழ வைத்த தருணங்களில் மிகச் சில இவை. ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும் நடத்தும் பயங்கர மோதலும் அதனிடையே சிக்கிச் சின்னாபின்னமாகும் சாமானியர்கள் வாழ்க்கையுமே நினைவுகளின் அடுக்குகளில் எஞ்சும் என்று தோன்றுகிறது. ஐஎஸ் பெரும் அச்சுறுத்தலாக, மனிதகுல எதிரியாக உருவெடுத்ததும், ஆயிரக் கணக்கில் மக்கள் அகதிகளாக உயிர் பிழைக்க ஓடியதும் என்றும் மறக்கக் கூடியவை அல்ல. துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கிய அய்லானின் படம் மறக்கக் கூடியது அல்ல. புவியரசியல் பேயாட்டம் போடுகிறது; மானுடம் அஞ்சி ஓடுகிறது. இடம் தேடி. இருப்பு தேடி. மாற்றம் தேடி. நம்பிக்கையுடன் புதிய விடியலுக்குக் காத்திருப்போம்!
சமகாலத்தின் பெரும் துயரமாகிவிட்டது அகதிகள் விவகாரம். போர்ச் சூழலும் இனவெறியும் பயங்கரவாதமும் கூடிக் கூத்தாட… லட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைக்க ஓடினார்கள். 2015-ன் இறுதியில் சிரியாவிலிருந்து மட்டும் 10 லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். பாதுகாப்பும் அரவணைப்பும் தேடிச் சென்ற அகதிகளில் 5,000 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக உலகெங்கும் கிட்டத்தட்ட 6 கோடி மக்களை அகதிகளாக்கிவிட்டது இன்றைய உலகம். செப்டம்பர் 2, 2015-ல் நெடுங்காலமாக உறைந்து கிடந்த உலகின் மனசாட்சியைத் துருக்கி கடற்கரையில் பாதி முகம் மணலில் புதைந்த நிலையில் இறந்துகிடந்த பிஞ்சுக் குழந்தை அய்லான் குர்தியின் புகைப்படம் உலுக்கியது.
அரை நூற்றாண்டு ராணுவ ஆட்சியில் முடங்கிக்கிடந்த மியான்மரில் மக்களாட்சி மலர்வதற்கான தருணங்கள் முகிழ்ந்தன. 15 ஆண்டு காலம் வீட்டுச் சிறைவாசத்துக்குப் பின் ஆங் சாங் சூச்சியின் இடைவிடாத அகிம்சாவழிப் போராட்டம் மியான்மர் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. அவருடைய தேசிய ஜனநாயக லீக் கட்சி இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 338 இடங்களை கைப்பற்றிச் சரித்திரம் படைத்தது. இன்னும் வீட்டோ அதிகாரம் ராணுவத்திடமே இருக்கிறது என்றாலும், ஜனநாயக மாற்றங்கள் முழு சுதந்திரத்தையும் பெற்றுத் தரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதை மியான்மர் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
நேபாளத்தின் வரலாற்றில் மோசமான வருடம் இது. ஆண்டின் தொடக்கத்தில் இமாலய நாடு எதிர்கொண்ட பூகம்பம், 8,000 உயிர்களைப் பலி வாங்கியது உலகின் மோசமான துயர நிகழ்வுகளில் ஒன்று. அடுத்து புதிய அரசியல் சட்டம் ஏற்படுத்திய பூகம்பம் நேபாள மக்களை இனரீதியாகப் பிளந்தது. நேபாள நிலப்பரப்பில் 17%, மக்கள்தொகையில் 51%, 75 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் என்று பெரும் பிரதிநிதித்துவம் கொண்ட, இந்தியாவுடன் நெருக்கமான மாதேசிகளை இரண்டாம் தரக் குடிமக்களாக்கியது புதிய அரசியல் சட்டம். மாதேசிகளின் போராட்டம் இந்தியாவுடனான சரக்குப் போக்குவரத்தை மாதக் கணக்கில் முடக்கியது. இதன் தொடர்ச்சியாக பொருளாதாரரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேபாளம், இந்தப் போராட்டங்களின் பின்னணியில் இந்தியா இருப்பதாகக் குற்றஞ்சாட்டியது. சீனப் பக்கம் சாயத் தொடங்கியது.
அமைதிக்கான நோபல் பரிசை வென்றது துனிஷிய தேசியப் பேச்சுவார்த்தைக் குழு. பேச்சுவார்த்தை மூலமாகவும் சகிப்புத்தன்மை வழியாகவும் மோதல்களை எப்படி முடிவுக்குக் கொண்டுவரலாம் என்பதற்கான உதாரணமாக இக்குழு திகழ்ந்தது என்று பாராட்டியது நோபல் பரிசுக் குழு. அதையும் தாண்டி ஆக்கபூர்வமான அரசியலை எப்படிக் கட்டமைப்பது என்பதற்கான உதாரணமாகவும் திகழ்கிறது இக்குழு. துனிஷியாவின் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், சட்ட வல்லுநர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் என நான்கு அமைப்புகளின் கூட்டமைப்பு இது. அரபு எழுச்சி, பெரும்பாலான நாடுகளில் பேரழிவுகளையும் கூடவே கொண்டுவந்த நிலையில், துனிஷியா ஜனநாயக ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர இக்குழுவே காரணம்.
மேற்குலகுக்கு நாகரிக முன்னோடியான கிரேக்கம் அதல பாதாளத்துக்குப் போய் மீண்டது. அந்நாட்டின் மோசமான பொருளாதார நிலை, பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் வாங்கிய கடனுக்கான ஆண்டுத் தவணையைக்கூடத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு அதைத் தள்ளியது. வங்கிகள் மூடப்பட்டன. வீதிகளில் ரொட்டி முகாம்கள் முளைத்தன. திவால் நிலைக்கு வந்த கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தே நீக்கப்படவிருந்த சூழலில், புதிய கடன் தன் நாட்டு மக்களை மேலும் கஷ்டத்தில் தள்ளும் என்று கூறிவந்தார் கிரேக்கப் பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸ். ஆனால், ஒருகட்டத்தில் புதிய கடன்களே தீர்வு என்றானது. கிரேக்கத்துக்குப் புதிய கடன் அளிக்கும் முயற்சியில் சர்வதேச அளவில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் பெயர் புதிய கவனம் பெற்றது. தொடர்ந்து அகதிகள் விவகாரத்திலும் அவர் உலகின் கவனம் ஈர்த்தார். இதனிடையே கிரேக்கப் பிரதமர் பதவியிலிருந்து விலகினார் அலெக்ஸிஸ் சிப்ராஸ். மீண்டும் தேர்தல். மீண்டும் பதவிக்கு வந்தார். நாடக மாற்றங்கள். தன்னுடைய ஓய்வூதியத்தைப் பெற வங்கிக்கு வந்த பெரியவர் கதறி அழுத இந்தப் படம் வரலாற்றுச் சாட்சி.
பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடிவெடுத்து 1979-ல் சீன கம்யூனிஸ்ட் அரசு அறிவித்த ‘ஒரு குழந்தை கொள்கை’யை முடிவுக்குக் கொண்டுவந்தது சீனம். இத்திட்டத்தின் விளைவாகக் கடந்த 45 ஆண்டுகளில் 33.6 கோடிக்கும் அதிகமான கருக்கலைப்புகள் செய்யப்பட்டதாக சீன சுகாதாரத் துறையே தெரிவிக்கிறது. உண்மை நிலை இதற்குப் பல மடங்கு மேல் என்கிறார்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். இளைஞர்களின் எண்ணிக்கை 2010-ஐவிட 2030-ல் 10.4 கோடி குறைந்துவிடும் எனும் நிலையைச் சுட்டிக்காட்டினார்கள் நிபுணர்கள். மக்கள் எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி, பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்றால், ஒரு குழந்தை கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்பதை உணர்ந்தது சீனம். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, இனி சீனத் தம்பதியர் இரு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறிவித்தபோது, சீனாவுடன் சேர்ந்து உலகமே பெருமூச்சு விட்டது!
மோடியின் வெளிநாட்டுப் பயணங்களும் வெளிநாட்டு அதிபர்களின் இந்திய வருகையும் 2015-ன் சர்வதேச முக்கிய நிகழ்வுகளில் குறிப்பிட வேண்டியவை ஆகின. உள்நாட்டில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், உலகுடன் தொடர்ந்து உரையாடல்கள் நடத்தினார் மோடி. ஒபாமாவின் இந்திய வருகை பெரிய அளவில் பேசப்பட்டது. கூடவே, அப்போது மோடி அணிந்த அவர் பெயர் பொறிக்கப்பட்ட கோட்டும். விமர்சனங்களின் தொடர்ச்சியாக, ரூ.10 லட்சம் மதிப்புடையது என்று சொல்லப்பட்ட அந்த கோட்டை ஏலத்தில் விட்டார் . ரூ. 4.5 கோடிக்கு ஏலம் போனது. இலங்கையில் நடந்த தேர்தல், நேபாளத்தில் நடந்த தொடர் போராட்டங்கள், பாகிஸ்தானில் நடந்த குழப்பங்கள் இப்படி எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வகையில் இந்தியா அடிபட்டுக்கொண்டே இருந்தது. ஆஃப்கன் பயணத்தின்போது திடீரென பாகிஸ்தானில் மோடி இறங்கியது உட்பட பலவும் சர்வதேசச் செய்திகள் ஆயின.
இடது சிந்தனையின் புதிய எழுச்சிக் களமாகப் பார்க்கப்பட்ட லத்தீன் அமெரிக்கா இப்போது வலது புயலை எதிர்கொள்கிறது. இதன் உச்சக் குறியீடாகியிருக்கிறது அர்ஜெண்டினா தேர்தல். தன்னை அர்ஜெண்டினாவின் முதல் வலதுசாரி என்று அப்பட்டமாக அறிவித்துக்கொண்டு, வர்த்தக தாராளமயமாக்கலுக்கு ஆதரவான அறிவிப்புகளுடன் தேர்தலை எதிர்கொண்ட மரிகோ மாக்ரி அதிபர் ஆகியிருக்கிறார். தனது அமைச்சரவையில் கார்ப்பரேட் உலகின் பெருந்தலைகளை இணைத்திருக்கிறார். ‘ப்ரொபுவஸ்டா ரிபப்ளிகானா’ கட்சியின் உதயமே, அரசியலில் வர்த்தகர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டுவந்து அரசியலையும் நிர்வாகத்தையும் செயல்திறன் கொண்டதாக்குவதுதான் என்கிறார், அர்ஜெண்டினாவின் சமூகவியலாளர் காப்ரியேல் வாம்மரோ. தொடர்ந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளில் அடுத்தடுத்துப் பரவும் வலது அலை, இடது சிந்தனையாளர்களிடம் கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
பொறியியலுக்குப் பெயர் போனது ஜெர்மனி. அதன் கவுரவத்துக்குரிய நிறுவனங்களில் ஒன்று ‘போக்ஸ்வேகன்’. உலகிலேயே அதிக கார்களை விற்கும் நிறுவனம் எனும் முதலிடத்தை நோக்கி முன்னேறிய ‘போக்ஸ்வேக’னுக்கு அமெரிக்காவில் அடி விழுந்தது. நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக புகையை வெளியிட்ட கார்களில், ஒரு மென்பொருளை நிறுவி ‘போக்ஸ்வேகன்’செய்த தில்லுமுல்லு அம்பலமானது. நிறுவனத்தின் பங்குகள் 33% அளவுக்குச் சரிந்தன. தலைமைச் செயல் அதிகாரியான மார்டின் வின்டர்கோர்ன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுப் பதவி விலகினார்.
ரஷ்ய அதிபர் புதின் விஸ்வரூபம் எடுத்தார். எங்கே மீண்டும் சோவியத் ஒன்றியத்தைக் கட்டமைக்கும் உத்வேகத்தில் இறங்கிவிட்டதோ ரஷ்யா என்கிற அளவுக்கு சர்வதேச அரங்கில் அதிரடி ஆட்டம் ஆடியது ரஷ்யா. ஐஎஸ்ஸுக்கு எதிராக ரஷ்யா எடுத்த நடவடிக்கைகள் இவற்றின் உச்சம். டிசம்பரில் வெறும் மூன்று நாட்களில் மட்டும் ஐஎஸ் அமைப்பின் 70 கட்டுப்பாட்டு மையங்கள், 21 பயிற்சி மையங்களை ரஷ்யா தகர்த்தழித்தபோது, ஐஎஸ்ஸை அழிக்க ஏன் ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒன்றுசேரக் கூடாது என்ற கேள்வியைப் பலரும் எழுப்பினார்கள். முன்னதாக சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்கர்களின் மனசாட்சியுடன் உரையாடினார் புதின்.
தெற்காசியப் பிராந்தியத்தில் வலுவான தலைவர்களில் ஒருவராக இருந்த ராஜபக்ச, அதிபர் தேர்தலில் மைத்ரிபால ஸ்ரீசேனாவிடம் தோல்வியைத் தழுவினார். அடுத்தும் அசராமல் பிரதமர் தேர்தலில் நின்று, ரணில் விக்ரமசிங்கவிடம் தோல்வி அடைந்தார். இலங்கையின் நீண்ட கால அதிபர், போர் வெற்றி நாயகன் எனும் முகத்துடன் தேர்தலைச் சந்தித்த ராஜபக்ச, தன் சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பை எதிர்கொண்டதுதான் பெரும் அரசியல் திருப்பமாக அமைந்தது. அதிகார துஷ்பிரயோகங்களும் குடும்ப அரசியலும் ஊழல்களும் இனவாதமும் என எல்லாம் சேர்ந்து ராஜபக்சவை மூழ்கடித்தன.
முஸ்லிம்களின் புனித கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணம் நெகிழ்ச்சிக்காக நினைவுகூரப்படுவது. ஆண்டுதோறும் 20 லட்சம் மக்கள் வந்துபோகும் உலகின் மிகப் பெரிய யாத்திரைத் தலம் மெக்கா. இந்த ஆண்டு அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் 13 நாடுகளைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்டோரின் உயிரை உடனடியாகக் கொன்றது, உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.
உலகில் ஆயுதப் போராட்டங்களுக்கு மிச்சம் மீதி இருந்த கொஞ்ச நஞ்ச அர்த்தத்தையும் அழித்தொழிக்கும் அமைப்பாக உருவெடுத்தது ஐ.எஸ். சிரியா, இராக்கின் சில பகுதிகளை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’என்ற பெயரில் ஒரு ராஜ்ஜியத்தைக் கட்ட முனைந்தவர்கள், இப்போது அதையும் தாண்டிய இலக்கோடு நகர்கிறார்கள். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களுக்கு மட்டும் அல்ல; கிறிஸ்தவர்கள், யூதர்கள் மட்டும் அல்ல; எந்த இஸ்லாம் பெயரால் அமைப்பை உருவாக்கினார்களோ அந்த முஸ்லிம் மக்களுக்கும் நாடுகளுக்கும் எதிரியாக இருக்கிறது ஐஎஸ். இதுவரை ஆயிரக்கணக்கானோரைக் கொன்றழித்திருப்பதுடன், எண்ணிலடங்கா பெண்களையும் நாசப்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் எதிரான நாசகார இயக்கமான ஐஎஸ், உலகின் தலையாய அச்சுறுத்தலாக உருவெடுத்தது இந்த ஆண்டில்.
ஒரே ஆண்டில் இரு பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டது, உலகின் நவீன கலாச்சார நகரமாகப் பார்க்கப்படும் பாரிஸ் நகரம். ஜனவரியில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டபோது பத்திரிகையாளர்கள் உட்பட 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நவம்பரில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். ஆனால், வெகுசீக்கிரம் பாரிஸ் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. அதே நவம்பரின் இறுதியில் பாரிஸில் நடந்த பருவநிலை மாநாடு புவியின் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் எடுக்க வேண்டிய தீவிர நடவடிக்கைகளை விவாதித்தது. மாசற்ற தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டியதன் அவசியத்தை உலகத்துக்கு உணர்த்தியது.
தொகுப்பு:சாரி, சிவசு, ஷங்கர், வெ.சந்திரமோஹன், ம.சுசித்ரா | வடிவமைப்பு: ம.ரீகன்