சிறப்புக் கட்டுரைகள்

ரகுநாதனின் புதுமைப்பித்தன்

ஆ.இரா.வேங்கடாசலபதி

நெருக்கடியான அவகாசத்தில் எழுதப்பட்டாலும் புதுமைப்பித்தனைப் பற்றிய முழு சித்திரத்தைத் தரும் நூல் ரகுநாதனுடையது

புதுமைப்பித்தனின் ‘கலியாணி’ கதையில் வரும் சுப்புவையரின் வீடு ஜன்னல்களுக்குப் பெயர்போனதல்ல என்பதுபோல் தமிழ் இலக்கியமும் வாழ்க்கை வரலாறுகளுக்கு, அதிலும் எழுத்தாளர்களுடைய வாழ்க்கை வரலாறுகளுக்குப் பெயர்போனதல்ல. இந்த வறண்ட சூழலில் பூத்த அத்தி ரகுநாதனின் ’புதுமைப்பித்தன் வரலாறு’.

புதுமைப்பித்தனைத் தமிழ் வாசக மனங்களில் ஆழமாகப் பதித்தது மட்டுமல்ல, ஒரு கலைஞன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உருவாக்கியதும்கூட இந்நூலே என்று சொல்ல முடியும். கட்டுக்கடங்காத படைப்பாற்றல், நிலவுகின்ற சமூக அமைப்பின்மீது அதிருப்தி,கலையின் எல்லையை விரிவுபடுத்தும் மேதைமை, சமூகத்தின் சீரழிவுகளைக் கண்டு பொங்கும் மனம், ஈவிரக்கமற்ற விமர்சனப் பார்வை, சராசரிகளையும் தரமற்றவர்களையும் கருணையின்றி வெட்டிச் சாய்த்தல், வறுமையிலும் சமரசமற்று எழுதுதல், வாழுங் காலத்தில் உதாசீனத்திற்கு ஆளாகி இறந்த பின்னர் போற்றுதலுக்கு உள்ளாதல் என்பன தமிழ்ச் சூழலில் ஒரு கலைஞனுக்கு இலக்கணமாகக் கொள்ளப்படுகின்றதென்றால், இதை வரையறுத்து அதற்கு முன்மாதிரியான ஓர் ஆளுமையாகப் புதுமைப்பித்தனை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டவர் ரகுநாதன்.

வரலாறு பிறந்த வரலாறு

‘புதுமைப்பித்தன் வரலாறு’ நூல் உருவான கதை சுவையானது. புதுமைப்பித்தனுக்கு எதிரான ஆளுமையாக இருவருடைய வாழ்நாளில் மட்டுமல்லாமல் மறைவுக்குப் பின்னும் கட்டமைக்கப்பட்ட கல்கியின் வரலாறு எழுதப்பட்ட கதையோடு இதை ஒப்பிடுவது சுவையானது. ‘பொன்னியின் புதல்வர்’ என்ற கல்கி வாழ்க்கை வரலாறு, இரண்டாண்டுகள் ‘கல்கி’ வார இதழில் தொடராக வெளிவந்து, 1976 டிசம்பரில் நூலாக்கம் பெற்றது. ஏறத்தாழ 900 பக்க அளவிலான பெரிய நூல் அது. எழுதியவர் தொடக்ககால ‘மணிக்கொடி’ எழுத்தாளரும், பின்பு கல்கி குழுவில் இடம்பெற்றவருமான மே.ரா.மீ. சுந்தரம் என்ற சுந்தா. கல்கி நிறுவனத்தின் முழு ஆதரவுடனும் புரத்தலுடனும், தி. சதாசிவம், கல்கியின் மகன் கி. ராஜேந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினரின் ஒத்துழைப்புடனும் எழுதப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு அது.

கல்கி பணியாற்றிய ‘நவசக்தி’, ‘விமோசனம்’, ’ஆனந்த விகடன்’, ‘கல்கி’ ஆகிய இதழ்களை முழுமையாகவும் முறையாகவும் பயன்கொண்டு, பொருத்தமும் சுவையும் பொருந்திய ஏராளமான மேற்கோள்களைச் சுந்தா எடுத்தாண்டிருப்பார். வாழ்க்கை வரலாறு எழுதுவது எப்படி என்பதற்கு ஒரு பாடப்புத்தக முன்மாதிரி என்றும் இதனைச் சொல்லலாம்.

சத்தான உணவும், குங்குமப்பூ போட்ட பாலும் பருகி வளர்ந்த தாய்க்குப் பிறந்த சுந்தாவின் ‘பொன்னியின் புதல்வ’ரோடு ஒப்பிடுகையில் ரகுநாதனின் ‘புதுமைப்பித்தன் வரலாறு’ போஷாக்கு இல்லாமல் பிறந்த குழந்தை. ஆனால் நிறைமாதக் குழந்தையின் வனப்புடன் ‘பிறந்தவுடன் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு கோஷமிட்டுக்கொண்டு’ ஓடிய அவதாரப் பிறப்பு.

1948 ஜூன் 30-ல் திருவனந்தபுரத்தில் தம் மனைவியின் பிறந்த அகத்தில் புதுமைப்பித்தன் மறைந்தார். 1950 இறுதியில் அவருடைய மனைவி கமலாவும் மகள் தினகரியும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்கள். அப்பொழுது அவர்கள் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் புதுமைப்பித்தன் குடும்பத்திற்கு நிதி திரட்டி அளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1950 டிசம்பர் இறுதியில் கல்கி, க.நா.சுப்ரமண்யம், ரகுநாதன் முதலான எழுத்தாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்றியது. இதன் சார்பில் புதுமைப்பித்தன் நினைவு நாள் 1951 ஜூலை 23-ல் கொண்டாடப்பட்டது. புதுமைப்பித்தன் குடும்பத்திற்கு நிதி திரட்டித் தர வேண்டும் என்ற தீர்மானம் அவ்விழாவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இயங்குவிசையாக இருந்தவர் ரகுநாதன். புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு நிதி திரட்டிய இந்தக் காலப் பகுதியில்தான் (ஜூலை செப்டம்பர் 1951), இந்த முயற்சிக்குத் துணை செய்யும் கருவியாகவே புதுமைப்பித்தன் வரலாற்றை எழுத முற்பட்டார் ரகுநாதன்.

நெருக்கடியில் பிறந்த குழந்தை

நூலை எழுதிய காலத்தில் ரகுநாதன் ‘சக்தி’ மாத இதழின் ஆசிரியக் குழுவில் இருந்தார். மாதச் சம்பளமான நூறு ரூபாயினையும்கூட ஐந்தும் பத்துமாகத்தான் பெற வேண்டிய நிலை. எனவே, பகலில் பத்திரிகைப் பணி, இரவில் கூடுதல் வருமானத்துக்காக மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைத் தமிழாக்கும் வேலை என நெருக்கடியான சூழலில் இருந்தபோதுதான் ரகுநாதன் புதுமைப்பித்தன் வரலாற்றை ஒரு காலக்கெடுவுக்குள் எழுதி முடிக்க முற்பட்டார். ரகுநாதன் அவருக்கே உரிய முறையில் இடைக்கால இலக்கிய மரபொன்றைச் சுட்டியதுபோல் தலைக்கு மேல் கத்தியும் உடலுக்குக் கீழே நெருப்புமாக அரிகண்டம், யமகண்டம் பாடிய புலவர்களையொத்த நினையில் பத்தே நாளில் எழுதி முடித்த நூல் இது.

இவ்வாறு மிகமிக விரைவில் எழுதப்பட்டதாயினும் திடீரென எழுதப்பட்ட நூலல்ல இது. ‘புதுமைப்பித்தன் இறந்தவுடனேயே அவரைப் பற்றிய வரலாறு ஒன்றை எழுத வேண்டும் என்ற விருப்பத்தோடு’ இருந்தவர்தான் ரகுநாதன். புதுமைப்பித்தன் வாழ்நாளின்பொழுதே அவரோடு நெருங்கித் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் அவர். புதுமைப்பித்தன் உயிரோடிருந்தபொழுதே அவரை முக்கியக் கதைமாந்தராகக் கொண்டு ‘ஞானமணிப் பதிப்பகம்’ என்ற கதையினை ரகுநாதன் எழுதியிருக்கிறார்; தமது ‘இலக்கிய விமர்சனம்’ என்ற தற்கால இலக்கியம் பற்றிய தீர்மானமான இலக்கியக் கருத்துகளைக் கொண்ட தமிழில் முன்னோடியான திறனாய்வு நூலில் புதுமைப்பித்தன் உயிருடனிருந்த காலத்திலேயே அவரை உச்சிமேல் புகழ்ந்தவர் அவர். எனவே, புதுமைப்பித்தன் வரலாற்றை எழுதுவதற்கான தகுதி, திறமை, ஆற்றல், விருப்பம், மனச்சமைவு அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்தவராகவே ரகுநாதன் இருந்திருக்கிறார்.

இரு ஆளுமைகளின் ரசவாதம்

சுந்தாவைப் போல் ஒரு பெரும் பத்திரிகை நிறுவனத்தின் ஆதரவோடு, சமூகத்தின் மதிப்புமிக்க பிரமுகர்களின் ஒத்துழைப்போடு ரகுநாதன் தம் நூலை எழுதவில்லை. ‘கள ஆய்வுகளையெல்லாம் நடத்திய பின் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூலல்ல. சுளைசுளையாக ஆயிரக்கணக்கில் சம்பளத்தை வாங்கிக்கொண்டும், யூஜிசி மானியம் போன்ற நிதி உதவிகளையும் பெற்றுக்கொண்டும், சோற்றுக்குக் கவலையில்லாமல், சொகுசு வாழ்க்கைக்குப் பஞ்சமில்லாமல் வாழ்ந்துகொண்டும், ஊர்ஊராகச் சென்று களஆய்வுகள் செய்து தகவல்களைத் திரட்டும் வாய்ப்பும் வசதியும்’ கொண்டு எழுதப்பட்டதல்ல என்று புதுமைப்பித்தன் வரலாறு வெளியாகி நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, விவாதச் சூட்டில் சினம் கொப்புளிக்க ரகுநாதன் எழுதியதுபோல் எந்த நிதி வசதியும் இல்லாமல் எழுதிய நூல் இது.

ஆனால் ‘புதுமைப்பித்தனின் ஆவி ரகுநாதனிடம் குடிகொண்டு விட்டது’ என்று வாசகர்கள் நம்பும் அளவுக்கு இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் ஆழப் பதிந்துவிட்டது. புதுமைப்பித்தனின் ஆளுமையும் ரகுநாதனின் எழுத்தாற்றலும் இணையும் ஒரு ரசவாதம் `புதுமைப்பித்தன் வரலா’றை ஒரு செவ்வியல் படைப்பாக்குகிறது.

‘புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை’ என்ற பீடிகையுடன் தொடங்கி, ‘இலக்கிய திருடனின் பேய்க்கனவு; புத்தகாசிரியர்களுள் ஒட்டக்கூத்தன்; வலுவற்றுக் கிடந்த தமிழ் வசனத்துக்கு வாலிபம் தந்த சஞ்சீவி; உலக இலக்கிய சத்சங்கத்திலே தாமாகவே இடம்பிடித்துக் கொண்ட மேதை; சிறுகதை இலக்கியத்தின் ஆசிய ஜோதி; இளம் எழுத்தாளர்களின் லட்சியம்; யதார்த்தவாதிகளின் முன்னோடி; தமிழ் நாட்டில் எழுதிப் பிழைப்பது என்பது எத்தனை அபாயகரமானது என்பதைத் தமது உயிரையே பணயம் வைத்துக் காட்டிச் சென்ற உதாரணம் - இவர்தான் புதுமைப்பித்தன்’ என்று முடியும் ‘புதுமைப்பித்தன் வரலாறு’ ஒரு நவீன கிளாசிக் என்பதில் விவாதத்திற்கு இடமிருக்க முடியாது.

கடந்த கால் நுற்றாண்டாகப் புதுமைப்பித்தன் பற்றிப் புதிய கவனம் திரும்பியுள்ளது புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றிப் பல விவாதங்கள் புறப்பட்டுள்ளன. அவருடைய படைப்புகள் தொகுக்கப்பட்டுச் செம்பதிப்புகளாக வெளிவந்துள்ளன. தொகுக்கப்படாத படைப்புகள் தேடித் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான கடிதங்கள் அச்சேறியுள்ளன. இவற்றைக் கொண்டு விரிவான ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதும் தேவை உள்ளது. ஆனால் அவ்வாறு எழுதப்படும் வரலாறு இருபத்தெட்டு வயது இளைஞராக ரகுநாதன் எழுதிய இந்நூலை விஞ்சும் என்று கருதக் காரணங்கள் இல்லை!

- காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவுள்ள ரகுநாதனின் ‘புதுமைப்பித்தன் வரலாறு’ எழுதிய செம்பதிப்புக்கான முன்னுரையிலிருந்து சில பகுதிகள்.

ஆ.இரா. வேங்கடாசலபதி, ‘புதுமைப்பித்தன் படைப்புகள்’ பதிப்பாசிரியர்.

தொடர்புக்கு: arvchalapathy@yahoo.com

டிசம்பர் 31, ரகுநாதனின் நினைவு நாள்.

SCROLL FOR NEXT