கடன் அட்டை, பண அட்டை, பயண அட்டை என்று அட்டைகளில்தான் எத்தனை வகைகள்!
கடன் அட்டைக்கும் (கிரடிட் கார்டு) பண அட்டைக்கும் (டெபிட் கார்டு) என்ன வேற்றுமை? உங்களிடம் கடன் அட்டை இருந்தால், ஒரு வரம்பு வரை அட்டையின் அடிப்படையில் கடன் வாங்கலாம். பண அட்டை, உங்கள் வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கவும், கணக்கிலிருந்து பணம் செலுத்திக் கடையில் பொருள் வாங்கவும் பயன்படுவது.
செலவு அட்டையைப் போன்றது, ஆனால் வங்கிக் கணக்கு தேவையில்லாதது பயண அட்டை. அமெரிக்கா சுற்றுப் பயணம் போகிறீர்களா? கையில் கொண்டுபோக உத்தேசித்த தொகையை முன்கூட்டியே ரூபாயாக வங்கியில் கட்டினால், அதற்கு ஈடான அமெரிக்க டாலர் மதிப்பைப் பயண அட்டையில் ஏற்றித் தருவார்கள். அமெரிக்காவில் ஏ.டி.எம்., கடைகண்ணி, ஓட்டல் என்று எங்கேயும் அட்டையில் டாலர் தீரும்வரை அட்டையைத் தேய்க்கலாம். அலுவலகப் பயணம் போகும்போது அட்டையில் பணம் தீர்ந்துபோனால் இங்கே இந்தியாவிலிருந்தே கூடுதல் டாலர் மதிப்பை அட்டையில் ஏற்ற முடியும்.
இதன் இன்னொரு அவதாரம் ‘மின்தொடர்பு வேண்டாத பயண அட்டை’ (கான்டாக்ட்லெஸ் டிரான்ஸிட் கார்டு). லண்டன் பயணமா? அங்கே பேருந்து, சுரங்க ரயில், தேம்ஸ் நதியில் படகுப் பயணம் என்று பல விதங்களில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டிவரும். எல்லாப் பயணத்துக்கும் சேர்த்து ஒரு மாதத்துக்கு சீசன் டிக்கெட் வாங்குகிற மாதிரி இந்த அட்டை.
வாங்கும் இடத்தில் பயண அட்டையில் பிரிட்டிஷ் பவுண்ட் பணத்தை ஏற்றிக்கொள்ளலாம். பயணம் எப்படி? லண்டன் ஹீத்ரு விமானத் தளத்தை ஒட்டிய சுரங்க ரயில் நிலைய வாசலில் பயண அட்டையை உயர்த்திப் பிடிக்கத் திருக்கதவம் தாள் திறந்து உள்ளே போவீர்கள். அங்கே ரயில் பிடித்து, லண்டன் பிக்கடலி ரயில் நிலையத்தில் இறங்கி, திரும்பவும் அட்டையைக் காட்ட, கதவு திறந்து வெளியே வருவீர்கள்.
அட்டையில் அமைந்துள்ள சிலிக்கன் சில்லு நீங்கள் பயணம் செய்த தூரத்தைக் கணக்கிட்டு, பயணக் கட்டணத்தை அட்டையில் ஏற்றியிருக்கும் பணத்திலிருந்து கழித்துவிடும். அட்டையில் பணம் தீரத் தீரக் கூடுதல் பணம் ஏற்ற முடியும். ஒரு வருடத்துக்கு சீசன் டிக்கெட்டாகப் பயண அட்டையில் பணம் ஏற்றி வைத்துக்கொள்ளலாம். அது கணிசமான தொகை என்பதால் வங்கி உங்களுக்கு சீசன் டிக்கெட் வாங்கக் கடன்கொடுத்துத் தவணை முறையில் திரும்பச் செலுத்தும் வசதியும் உண்டு.
சில்லறை வர்த்தக அட்டை
‘காசு ஏற்றிய’ அட்டையின் மற்றொரு வடிவம் ‘மின்தொடர்பு வேண்டாத சில்லறை வர்த்தக அட்டை’. வாகனத்தில் பெட்ரோல் போட்டு முடித்தவுடன், பெட்ரோல் பங்க் வளாகத்தில் இருக்கும் கடையில் ஐஸ்கிரீமோ செய்தித்தாளோ வாங்கப்போவது நம் நாட்டை விட வெளிநாட்டில் வாடிக்கை. சிறிய பெட்ரோல் பங்குகளில், இப்படி நிறுத்தப்பட்ட கார்கள், இட நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும்.
இதைத் தவிர்க்க, பெட்ரோல் போட்டு முடித்ததும் காரில் உட்கார்ந்தபடிக்கே, கடைக்குள் ஓட்டிச்சென்று கார்க் கண்ணாடியை இறக்கி, அட்டையை அங்கங்கே காட்ட, ஐஸ்கிரீமும் செய்தித்தாளும், இன்ன பிறவும் அவையவை வைத்திருக்கப்படும் இடங்களிலிருந்து கையில் வந்து விழும். கடையில் வேலையாட்கள் தேவையில்லை. கடைக்கு வெளியே கார் வரும்போது செலவுக்கணக்கு ரசீதும் அச்சடித்துக் கிடைக்கும்.
சாக்லெட், செய்தித்தாள்போல சில்லுண்டிச் செலவு
களுக்குக் கடன் அட்டையைப் பயன்படுத்த வசூலிக் கப்படும் கட்டணம் செலவுத் தொகையை விடக் கூடுதலாக இருக்கலாம். இதைத் தவிர்க்க, மின்-பர்ஸ் (ஈ-வேலட்) உண்டு. அட்டை வாங்கும்போது தேவையான பண மதிப்பை ஏற்றிக்கொள்ளலாம். அட்டையில் இருக்கும் சில்லு, கடையில் அதைப் பயன் படுத்தும்போது தொகையைக் கழித்து வர்த்தகருக்கு வரவு வைத்துவிடும்.
அட்டைகளும் எதற்கு?
கை நிறைய இப்படி அட்டைகளோடு அலைந்து திரிய வேண்டிய சிரமம் நமக்கு முன்னால் ஜப்பானியர்களுக்கு புத்தியில் பட்டது. மாற்றி யோசித்தார்கள். போகிற இடத்துக்கெல்லாம் கைபேசியைக் கொண்டுபோகிற காலம் இது. கைபேசி இருக்க, தொல்லை தரும் அட்டைகள் எதற்கு? கடன் அட்டை, பண அட்டை, பயண அட்டை என சகல அட்டைகளையும் சில்லு உருவத்தில் கைபேசியின் சிம் கார்டோடு பிணைத்துவிட்டார்கள். தீர்ந்தது பிரச்சினை. அட்டையைக் காட்ட வேண்டிய இடத்திலெல்லாம் தற்போது இப்படியான சிறப்புக் கைபேசியை அசைத்துக் காட்டிக்கொண்டிருப்பவர்கள் கிட்டத்தட்ட மூன்று கோடி ஜப்பானியர்கள்.
அடுத்த கட்டம், அட்டையை எதிர்பார்க்காமல், கைபேசியிலேயே பணப் பட்டுவாடா செய்வது. விரைவாக இங்கேயும் அறிமுகமாகிவரும் தொழில்நுட்பம் இது. நீங்கள் கடையில் பொருள் வாங்கியதும் அதற்கான பணத்தை உங்கள் கைபேசிச் சேவையாளர் வணிகர் கணக்கில் செலுத்திவிடுவார். மாதக் கடைசியில் கைபேசியின் பயன்பாட்டுக் கட்டணத்தைக் கட்டும்போது அந்தத் தொகையையும் சேர்த்துச் செலுத்தலாம். ஒரு கைபேசியிலிருந்து இன்னொன்றுக்குப் பண மாற்றமும் செய்ய முடியும்.
பேபாலும் ஈபேயும்
எச்சில் தொட்டு கரன்சி நோட்டை எண்ணி வாங்கி, வழங்கி சகலப் பற்றுவரவும் செய்யாமல் உருவமற்ற காசு கொண்டு ஊர் முழுக்க வர்த்தகம் செய்வதன் இன்னொரு செயல்பாடு, ‘பேபால்’ போன்ற பணப் போக்குவரத்து சேவை நிறுவனங்கள். இணையத்தில் முக்கியமான ஏலக்கடையான ‘ஈபே’ நிறுவனம் ‘பேபா’ லோடு ஒரு குடையின் கீழ் உள்ளது.
உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்கள் வங்கி விவரங்களையும் கொடுத்து ‘பேபால்’ கணக்கை இணையம் மூலமே தொடங்கலாம் (தற்போது இந்தியாவில் இது இயலாது). அமெரிக்கா என்றால் உங்கள் வங்கிக் கணக்குக்கு ஐந்து ஐந்து செண்டாக மூன்று முறை ‘பேபால்’ பணம் அனுப்பும். அவை வந்துசேர்ந்த விவரம் அடங்கிய வங்கிக் கணக்குப் பிரதியை ‘பேபா’லுக்கு மின்னஞ்சல் செய்ய, கணக்கு திறக்கப்படும்.
உங்களிடம் தாத்தா கால, விலை மதிப்பு அதிகமான அஞ்சல்தலை இருக்கிறதென்று வைத்துக்கொள் ளுங்கள். இணைய ஏலக்கடை மூலம், அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கிறவருக்கு அந்த அஞ்சல்தலையை விற்கலாம். அவர் தன்னுடைய ‘பேபால்’ கணக்கிலிருந்து உங்கள் கணக்குக்குப் பணம் அனுப்புவார். அந்தப் பணத்தைக் கொண்டு ‘பேபால்’ கணக்கு வைத்திருக்கும் வேறு பலருடனும், வணிக நிறுவனங்களுடனும் வியாபாரம் நடத்தலாம். வேண்டும்போது ‘பேபால்’ கணக்கிலிருந்து உங்கள் வங்கிக் கணக்குக்கும் பணத்தை அனுப்பலாம்.
கண்ணுக்குத் தெரியாமல் உருவமற்று இருந்து உலகை நடத்திப்போவதால் காசும் கடவுளாகுமோ இனி!
- இரா. முருகன், எழுத்தாளர்,
தொடர்புக்கு: eramurukan@gmail.com