வங்கத் தேர்தலை திரிணமூல் காங்கிரஸ் வென்ற மறுநாள் பாஜகவின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவைச் சந்தித்தபோது, அவருடைய கட்சி முந்தைய இடங்களான 3 என்பதிலிருந்து 76 இடங்கள் என்று உயர்ந்திருப்பது குறித்துத் தனிப்பட்ட வகையில் திருப்தியே என்றார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். “மாநிலம் முழுவதும் அராஜகம்தான், எங்கள் கட்சியினர் தாக்கப்பட்டனர், அவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது எங்கள் கட்சியினர் சிலரை அந்த மையங்களிலிருந்து அடித்துத் துரத்தினார்கள்” என்றார்.
வங்கத்தின் பொறுப்பாளரான விஜய்வர்கியா அந்த மாநிலத்தில் தனது கட்சி அடைந்த தோல்விக்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டார். ‘காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் சரணடைந்தது’ முக்கியமான காரணம் என்றார்; முக்கியமாக, வாக்குப்பதிவுக்கு முன்பு எதிர்க்கட்சிகளெல்லாம் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.
“அதற்குப் பிறகு காங்கிரஸ், சிபிஐ(எம்) இரண்டின் பிரச்சாரங்களிலும் உயிரே இல்லை. கரோனா இரண்டாம் அலையைக் காரணம் காட்டி, ராகுல் தனது பிரச்சாரங்களை நிறுத்திக்கொண்டார். இது குறைந்தபட்சம் அவர்களின் வாக்குகளில் 9% திரிணமூல் காங்கிரஸுக்குச் செல்வதற்குக் காரணமானது” என்றார். பெண்களின் அனுதாபமும் ஆதரவும் மம்தாவுக்கு அதிகமாக இருந்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், இதற்குக் காரணம் பிரதமர் மோடியின் பேச்சுக்களல்ல; மம்தா தனது பிரச்சாரத்தைச் சக்கர நாற்காலியில் இருந்தபடி மேற்கொண்டதே காரணம் என்றார். “அவரது சக்கர நாற்காலிப் பிரச்சாரத்தால் அவருக்குப் பெண்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவே செய்தது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தவில்லை பாருங்கள்” என்றார்.
திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவியவர்களை அதிக அளவில் நம்பியது பாதகமாகப் போய்விட்டதா என்று கேட்டதற்கு, குறைந்தபட்சம் 65 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியதாக அவர் குறிப்பிட்டுக் கூறினார். திரிணமூல் காங்கிரஸிலிருந்து கட்சி தாவியவர்களில் பெரும்பாலானோர், மம்தா பானர்ஜி அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள்கூட, இந்த முறை தோற்றிருக்கிறார்கள்.
“காங்கிரஸும் இடதுசாரிகளும் ஒரு எம்எல்ஏவைக்கூடக் கொண்டிராத நிலையில், 76 எம்எல்ஏக்களுடன் பாஜகதான் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக ஆகப்போகிறது. இந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியாகப் பெரிய இடத்தை நாங்கள் ஆக்கிரமிக்கப் போகிறோம். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்” என்றார்.
தோல்விக்கான காரணங்களை பாஜக ஆழமாக அலசிப் பார்க்கும் என்றவர், தற்போது தாங்கள் கவனம் செலுத்த வேண்டிய உடனடிப் பிரச்சினை என்பது எங்கள் கட்சியினரின் பாதுகாப்புதான் என்றும் குறிப்பிட்டார்.
© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை