ஒடிஷாவில் அரசு அதிகாரி ஒருவர், திருநங்கை யாக மாறி அலுவலகத்துக்கு சேலை அணிந்து வந்ததாக வெளியான செய்தி சமீபத்தில் நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. தான் ஆணல்ல, திருநங்கை என்று பதின்மவயதில் உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் பின்னர் பல சோதனைகளைக் கடந்து ஒடிஷா நிதித் துறைத் தேர்வில் வென்று அதிகாரியாகப் பணியில் அமர்ந்தவர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் தைரியத்தை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
உலக அளவில் செயல்படும் மனித உரிமை ஆர்வலர்கள் கடந்த 2006-ம் ஆண்டில் பாலியல்/பாலினச் சிறுபான்மையினரின் உரிமைகளை வரையறுத்தனர். இது `யோக்யகார்டா நெறிமுறை கள்’ எனப்பட்டது. இதை அடியொற்றி கடந்த 2012-ல் பாலியல்/பாலினச் சிறுபான்மையினரின் இந்த உரிமைகளைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என ‘நேஷனல் லீகல் சர்வீஸஸ் அத்தாரிட்டி’(NALSA), உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீர்ப்பை வழங்கியது.
ஒருவர் தான் விரும்பும் பாலினத்துக்கு மாறிக்கொள்ளும் உரிமை உள்ளது. ஆணாகப் பிறந்து பெண் மனதோடு வாழ்பவர்கள், பெண்ணாகப் பிறந்து ஆண் மனதோடு வாழ்பவர்கள் ஆகியோரின் உரிமையை இது குறிக்கிறது. இதைக் கண்டறிவதற்கு ‘உடல்ரீதியிலான சோதனை’யைச் செய்வதற்குப் பதிலாக ‘உளவியல் சோதனை’யைச் செய்யுமாறு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
சமூகத்தில் திருநங்கைகளுக்கு உரிய மருத்துவ வசதி, கழிப்பறை வசதி, எச்.ஐ.வி./எயிட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான பாதுகாப்பான நடைமுறைகள், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கேட்டுக்கொண்டிருக்கிறது.
எனினும், பல மாநிலங்களில் இது முறையாக அமல்படுத்தப்படவில்லை எனும் மனவருத்தம் திருநங்கைகளிடம் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, திருநங்கைகள் நல வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்காக தமிழக அரசு பல திட்டங்களை முன்னெடுத்தது குறிப்பிடத் தக்க விஷயம்தான். திருநங்கைகள் நல வாரியத்தை ஏற்படுத்தியது, கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பல விஷயங்களை இந்தச் சமூகத்துக்குச் செய்திருக்கிறது தமிழக அரசு. எனினும், நிலைமையில் பெரிய முன்னேற்றம் இல்லை என்கின்றனர் திருநங்கைகள்.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக இருக்கும் ஒரு ஆண் ஊழியர் வாங்கும் சம்பளம்தான், எம்.பி.ஏ படித்த ஒரு திருநங்கைக்குக் கொடுக்கப்படுகிறது.
திருநங்கைகளுக்கான இலவச வீட்டு வசதித் திட்டம், மற்ற மாவட்டங்களில் செயல்படுகிறது. சென்னையில் மட்டும் அந்தத் திட்டம் செயல்படவில்லை. இதுபோன்று ‘பணியிடத்தில், இருப்பிட வசதியில், அன்றாட வாழ்க்கையில் எங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்கிறது. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதுதான் மாற்றாக இருக்க முடியும் என்கின்றனர்.
சமீபத்தில் திருநங்கைகள் உரிமைகளுக்காகப் போராடும் தன்னார்வ அமைப்பான ‘தோழி’, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சொல்வது என்ன என்பதையும், அதை அமல்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஊடகவியலாளர்களிடம் விளக்கியது.
மத்திய, மாநில அரசுகள் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசர அவசியம். அப்போதுதான் திருநங்கைகள் சமூகத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் உருவாகும்.
தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in