வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் நோக்கில் ஒன்றிணைந்த நல்ல உள்ளங்கள், ‘தி இந்து’ முன்னெடுத்த ‘மீண்டு எழுகிறது சென்னை’ நிவாரண முகாமில் தொண்டாற்றி பாதிக்கப் பட்ட மக்களின் துயரங்களில் பங்கெடுக்கின்றனர். வந்து குவிந்த உதவிகளும், அவை பாதிக்கப்பட்ட மக்களின் கரங்களுக்கு கொண்டு சேர்ப்பதும் என மிகச்சிறப்பான பணியை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று ‘தி இந்து’நிவாரண முகாம் வாசலில் வந்து நிற்கிறது பள்ளி வாகனமும், ஒரு பேருந்தும். இரண்டிலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாய், பால் பவுடர் என 14-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் அடங்கிய 215 பெட்டிகளும், கூடவே தண்ணீர்ப் பாட்டிகள், புதுத் துணிகள் அடங்கிய பெட்டிகளும் இருந்தன. இவை பெங்களூரு மற்றும் மங்களூரு பகுதியிலுள்ள பிரசிடன்ஸி குரூப் ஆஃப் ஸ்கூலில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளும், அவர்களது பெற்றோர்களும் சேகரித்து அனுப்பியவை.
பொருட்களுடன் வந்த ஜி.தங்கராஜ் (59) கூறும்போது, “சென்னையில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொலைக்காட்சியில் பார்த்தபோது, கலங்கித்தான் போனோம். இவ்வளவு பெரிய பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம் என்று நான்கு நாட்களுக்கு முன்தான் பள்ளியில் சுற்றறிக்கையொன்றை அனுப்பினேன். பள்ளிக் குழந் தைகளும், பெற்றோர்களுமாய் சேர்ந்து, அவர்களால் ஆன பொருட் களை வாங்கிவந்து குவித்து விட்டார்கள்” என்று நெகிழ்ந்தார்.
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர் கால்வின். சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பணிகளில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக களத்தில் நிற்பவர். ‘தி இந்து’ நிவாரண முகாம் தொடங்கிய நாளிலிருந்து தினமும் தன்னோடு படிக்கும் 40 நண்பர்களோடு வருவார். இப்போது நண்பர்கள், அவர்களது பெற்றோர்கள் என தன்னார்வலர்களின் எண்ணிக்கை சுமார் 100 தாண்டியுள்ளது.
சிட்டிசன் ஃபார் சேப் ரோடு அமைப்பைச் சேர்ந்த கோதண்ட பாணி (71), லெட்சுமி நரசிம்மன் (64), காசி விஸ்வநாதன், கோவிந்த ராஜன் நால்வரும் நிவாரணப் பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். ‘சேவை செய்ய வயது ஒரு தடையல்ல’என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார்கள்.
நேற்று மட்டும் ஓட்டேரி, கே.ஹெச்.ரோடு, அன்னை சத்யாநகர், அனகாபுத்தூர், பனைமரத்தொட்டி (ராயபுரம்), அயனாவரம், கவுரிவாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், செம்பாக்கம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ‘தி இந்து’ நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துள்ளன.