சிறப்புக் கட்டுரைகள்

சந்திரபாபு நாயுடு

வெ.சந்திரமோகன்

இளம்வயதிலேயே அரசியல் வெற்றிகளைச் சுவைக்கத் தொடங்கியவரின் வளர்ச்சி எத்தகையதாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் ‘புதிய’ ஆந்திரத்தின் முதல்வராக 3-வது முறை பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் வாழ்க்கை. தனது 28-வது வயதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு, திரைப்படத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

ஆந்திரத்தில் கிருஷ்ணரின் அவதார மாகவே பார்க்கப்பட்ட என்.டி.ஆரின் தொடர்பு திரைப்படத் துறை அமைச்சர் பதவிமூலம் சந்திரபாபு நாயுடுவுக்குக் கிடைத்தது. என்.டி.ஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சந்திரபாபு நாயுடு, அவரது இரண்டாவது மகள் புவனேஸ்வரியைத் திருமணம் செய்துகொண்டார்.

1982-ல் தனது மாமனார் காங்கிரஸிலிருந்து விலகித் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கியபோதும் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸில்தான் இருந்தார். அதற்கு அடுத்த ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, மொத்தம் இருந்த 294 தொகுதிகளில் 202 இடங்களை வென்றது. முன்பு வெற்றி பெற்ற அதே சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் வேட்பாளரிடம் தோற்றார் சந்திரபாபு நாயுடு. அதன் பின்னர், மாமனாரின் கட்சியில் அடைக்கலமானார்.

என்.டி.ஆரின் முழுநம்பிக்கையும் சந்திரபாபு நாயுடு பக்கம் திரும்ப ஒரு சந்தர்ப்பமும் வந்தது. 1984-ல் இதய அறுவைச் சிகிச்சைக்காக என்.டி.ஆர். அமெரிக்கா சென்றிருந்தபோது, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த பாஸ்கர் ராவ் என்பவர் அரசியல் சதி மூலம், என்.டி.ஆரைத் தூக்கியெறிந்துவிட்டுத் தானே முதல்வரானார். கட்சிக்குள் கொந்தளிப்பு நிலவிய காலம் அது. சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய என்.டி.ஆர். கருப்பு உடை தரித்து, நீதி கேட்டு தர்ம யுத்தத்தில் இறங்கினார். நெருக்கடியான அந்தக் காலகட்டத்தில் மாமனாருக்குத் துணைநின்றார் சந்திரபாபு நாயுடு. கட்சி எம்.எல்.ஏ-க்களைத் திரட்டிக்கொண்டு குடியரசுத் தலைவர் முன்னர் நிறுத்தி, என்.டி.ஆரின் பலத்தை நிரூபித்தார். ஒரே மாதத்துக்குள் முதல்வர் பதவி மீண்டும் என்.டி.ஆருக்குத் திரும்பக் கிடைத்தது. கூடிய சீக்கிரமே என்.டி.ஆருக்கு எதிராகச் சதிசெய்து அவரை முதல்வர் பதவியிலிருந்து தூக்கியெறிந்தவரும் சாட்சாத் சந்திரபாபு நாயுடுதான். லட்சுமி சிவபார்வதியை என்.டி.ஆர். இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக வந்த செய்தி, கட்சிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் புயலைக் கிளப்பியது. கட்சி, லட்சுமி சிவபார்வதியின் கைக்குப் போய்விடும் என்று கசிந்த தகவலையடுத்து, முதல்வர் பதவியிலிருந்தும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் என்.டி.ஆரை அதிரடியாக நீக்கிய சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்தின் முதல்வரானார்.

தனது ஆட்சித் திறனால் மக்களின் ஆதரவும் சந்திரபாபு நாயுடுக்கு அதிகரித்தது. ஆந்திரத்தின் நீண்டகால முதல்வராக 2004 வரை இருந்தார். தகவல் தொடர்புத் துறை வளர்ச்சிக்காக எடுத்த முன்முயற்சிகள் காரணமாக, வளர்ச்சியின் நாயகனாகக் கொண்டாடப்பட்டார். எனினும், நகர்ப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்த அவர், விவசாயிகளின் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளவில்லை. விளைவு, 2004-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சிக்கு கிடைத்தது வெறும் 47 இடங்கள்தான். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தற்போது சீமாந்திரா பகுதியின் 175 இடங்களில் 102 தொகுதிகளை வென்று மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். முதல்வேலையாக விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்திருக்கிறார். தெலங்கானா பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திரத்தின் முதல்வராகியிருக்கும் நிலையில், தன் முன் இருக்கும் சவால்கள் சாதாரணமானவையல்ல என்பதை உணர்ந்தேயிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

- வெ.சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

SCROLL FOR NEXT