இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தொடங்கிவிட்டது என்கிறார்கள். யார் தடுத்தாலும் அந்தக் கிருமி ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்காமல் ஓயாது என்பதைச் சுட்டிக்காட்டும் தகுதிசார் மருத்துவர்கள் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் எழுதுவதையெல்லாம் படித்துப் பாருங்கள், தெரியும்.
தமிழகப் பிரச்சாரக் காட்சிகளில் தென்படும் தலைவர்களின் முகங்களைக் கூர்ந்து பார்த்தேன். 90% தலைவர்கள் முகக்கவசம் அணியவில்லை. இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்தது. தமிழகத்தைக் காக்கப்போகிற தலைவர்களுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்கிற நல்லெண்ணம் இருக்கக் கூடாதா? பார்த்துப் பார்த்துப் பக்குவமாய், நமக்குத் தோதான மாதிரி பேச கரோனா என்ன கூட்டணிக் கட்சியா? தோழமைச் சுட்டலெல்லாம் இல்லாமல் மூச்சுக் குழாயை வெறிகொண்டுக் கவ்விவிடும் அந்தக் கிருமி. உண்மையிலேயே அவர்களது பாதுகாப்பு குறித்த பதற்றம் அவர்களைச் சுற்றி இருக்கிற உறவினர்களுக்கு வர வேண்டாமா? இரண்டாவது, பொது நலன். இன்னொரு முழு அளவிலான பொது முடக்கத்தையெல்லாம் தாங்குமா தமிழகம்? பொருளாதாரம் வீழ்ந்தால் வரப்போகிற ஆளுங்கட்சியின் விழி பிதுங்கிவிடாதா?
நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பவர்களைப் பொறுத்தவரை வாக்கு சதவீதம் அதிகரிக்க வேண்டும். கட்சி வாக்குகள் என்பதைத் தாண்டி நடுநிலை மற்றும் நகர்ப்புற நடுநிலை வாக்கு சதவீதம் அதிகரிப்பது மிக முக்கியமான அம்சமும் அலகும். அது குறைந்தால் நிச்சயம் அது வெற்றிவாய்ப்பு இருக்கும் கட்சிக்குக் கொஞ்சம் சுணக்கமாகவே போய் முடியும். சில இடங்களில் இருநூறு முன்னூறு வித்தியாசம் என இழுபறியைக் கொண்டுவந்துவிடும். கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எடுத்துப் பாருங்கள், புரியும்.
எனக்குத் தெரிந்து கரோனா பரவல் அதிகரிப்பு எனத் தொடர்ந்து செய்திகள் வந்தால், வாக்கு சதவீதம் குறையவே அதிக வாய்ப்பு. எனவேதான், இதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன்.
தலைவர்கள் முகக்கவசம் அணிவதோடு, அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் அணியச் சொல்லி வலியுறுத்த வேண்டும். ஒருவகையில், இது மக்கள் மனதில் நன்னம்பிக்கையைத் தோற்றுவிப்பதோடு, வெளியே வரலாம் என்கிற நம்பிக்கையையும் கொடுக்கும். வாக்குச்சாவடிக்குத் துணிந்து செல்லலாம் என்கிற முடிவுக்கும் வருவார்கள்.
இதைப் பற்றித் தொடர்ந்து உரக்கப் பேசுவதோடு, ராணுவ ஒழுங்கோடு தங்கள் கட்சியினரை வழிநடத்துவது நல்லது. மக்களின் மனதில் இடம்பிடிக்கவும் முடியும். யாருக்கு நல்லதோ இல்லையோ, ஜெயிக்கிற கனவில் இருப்பவர்களுக்கு நல்லது. கரோனா தொற்று எண்ணிக்கை ஏற ஏற வாக்கு சதவீத எண்ணிக்கையும் தலைகுப்புற வீழும் என்பதை மனதில் வையுங்கள். மிச்சம் அவர்கள் பாடு!
- சரவணன் சந்திரன், எழுத்தாளர்.