திமுக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலில், அக்கட்சியின் அப்போதைய தலைவர்களில் ஒருவரான கவிஞர் கண்ணதாசனும் போட்டியிட்டார். ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடுமாறு அவரது நண்பர்கள் வற்புறுத்தினர் என்றாலும், அவர் அதற்குத் தயாராக இல்லை. தனது சொந்த ஊரான சிறுகூடல்பட்டியை உள்ளடக்கியிருந்த திருக்கோஷ்டியூரில் போட்டியிட்டார்.
சில ஊர்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் கூட்டம் போட்டு அங்கு அவரை அழைத்து வாக்குகள் கேட்கச் சொன்னார்கள். அவரும் கலந்துகொண்டார். கூட்டத்தார் முன் நின்று தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கவும் செய்தார். எனினும், கேட்டுக்கொண்டபடி வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.
காரணம், நகரத்தார் கூட்டங்களில் வாக்குகள் கேட்பவர் கூட்டத்தின் முன் கீழே விழுந்து வணங்கிக் கேட்க வேண்டும் என்பது அப்போது நடைமுறையில் இருந்த மரபு. கண்ணதாசன் அதற்குத் தயாராக இல்லை. நின்றுகொண்டே கும்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டார். வெற்றியோ தோல்வியோ வாக்குகளுக்காக ஒருவர் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்று பின்னர் அவர் குறிப்பிட்டார்.