இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள ஐந்து பிராந்தியங்களில் பாஜகவின் முக்கிய இலக்கு வங்கம்தான். எட்டு கட்டங்களாக அங்கு தேர்தல் நடப்பதே தேசியத் தலைவர்களைப் பிரச்சாரக் களத்தில் இறங்குவதற்குப் போதிய கால அவகாசத்தை அளித்து, பாஜகவுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்காகத்தான் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏழு கட்டங்களாக அங்கு தேர்தல் நடத்தப்பட்டது என்பதால், அவரது குற்றச்சாட்டில் நியாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, கடந்த மக்களவைத் தேர்தலும்கூட ஏழு கட்டங்களாகத்தான் நடத்தப்பட்டன. காரணம், வங்க அரசியல் களம் வன்முறைகளுக்குப் பெயர்போனது என்பதுதான். ஒரே நாளில் அங்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிப்பது என்பது வன்முறைகளுக்கு வாய்ப்பளிக்கிற வகையில் அமைந்துவிடக்கூடும். மம்தா ஆட்சியைப் பிடித்த 2011-ல் ஆறு கட்டங்களாகவும் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 2016-ல் ஏழு கட்டங்களாகவும் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் 6 அன்று மற்ற மூன்று மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகே வங்கத்தின் 294 தொகுதிகளில் 203 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்படும். எனவே, நாட்டின் ஒட்டுமொத்தக் கவனமும் வங்கத்தை நோக்கியே இருக்கும் என்பது உறுதி.
பெண் சக்தி
பெண் வாக்காளர்களைத்தான் இந்தத் தேர்தலில் பெரிதும் நம்பியிருக்கிறார் மம்தா. அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பெண்கள் மிகப் பெரிய அளவில் கலந்துகொள்கிறார்கள். அவரது தேர்தல் பிரச்சாரங்களும் பெண்களைக் குறிவைத்தே அமைந்திருக்கின்றன. மம்தா ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களைப் பற்றிய விளம்பரங்கள் அனைத்திலும் மம்தாவுடன் பெண்களின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மம்தாவின் பேச்சிலும் அடிக்கடி ‘தாய்மார்களே’, ‘சகோதரிகளே’ என்ற வார்த்தைகள்தான் அடிக்கடி இடம்பெறுகின்றன.
பெண்களை மையப்படுத்தும் அரசியலைக் கடந்த மக்களவைத் தேர்தலின்போதே மம்தா பரிசோதித்துப் பார்த்துவிட்டார். 42 வேட்பாளர்களில் 17 பேர் பெண்கள். ஏறக்குறைய இது 41%. பாஜகவும் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தங்களது மகளிர் அமைப்புகளை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. மம்தா தேர்தல் பிரச்சாரத்துக்காக மட்டும் மகளிர் உரிமை பேசுபவரல்ல. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பல நலத்திட்டங்களை அவர் முன்னெடுத்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது 2013-ல் அவர் தொடங்கிய கன்யாஸ்ரீ திட்டம். 13 வயது முதல் 18 வயது வரையிலான திருமணமாகாத பெண்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் இத்திட்டம், குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, மாணவிகளின் பள்ளி இடைநிற்றலையும் குறைத்திருக்கிறது. பொருளாதார வசதியில்லாத பெண்களுக்குத் திருமண உதவித்தொகையாக ரூ.25,000 அளிக்கும் ரூபாஸ்ரீ திட்டம், குடும்பத் தலைவிகளின் பெயரில் குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று இந்தப் பட்டியல் நீளமானது. ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்தில் நாட்டிலேயே பெண்கள் மிகவும் அதிகமாகப் பங்கேற்றிருப்பது வங்க மாநிலத்தில்தான்.
பெண் சக்தியைப் பிரதானமாக வணங்கும் வங்கத்தில் அரசியலிலும் அது எதிரொலிப்பது ஆச்சரியமில்லைதான். அதுபோலவே, வங்காளிகள் என்ற மொழிவழித் துணைத் தேசிய உணர்வும் அங்கு அதிகம். அரசியலிலும் அது பிரதிபலிக்கிறது. வங்கத்தின் வெற்றி வெளி மாநிலத்தவர்களுக்கா இல்லை வங்கத்தைச் சேர்ந்தவருக்கா என்று அவர் சமீபத்தில் எழுப்பிவரும் முழக்கத்துக்கு மக்களிடம் ஆதரவும் தெரிகிறது. தேசியக் கட்சியான பாஜக மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தங்களது கட்சித் தலைவர்களை வங்கத் தேர்தல் பணியில் ஈடுபடுத்திவருகிறது. அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் மம்தா தயாராகிவிட்டார்.
பாஜகவின் உத்தி
2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. எனினும், ஒப்பீட்டளவில் திரிணமூல் காங்கிரஸைவிடவும் பாஜக வங்கத்தில் பலவீனமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. அதனால்தான், திரிணமூல் காங்கிரஸ், சிபிஐ(எம்), காங்கிரஸ் என்று எல்லாக் கட்சிகளின் தலைவர்களையும் தங்களது கட்சிக்குள் இழுத்துப்போடும் உத்தியை பாஜக கையில் எடுத்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்களோடு அக்கட்சியின் வேட்பாளர் ஒருவரும் பாஜகவில் இணைந்திருக்கிறார். ஆக மொத்தம், இதுவரையில் திரிணமூல் காங்கிரஸிலிருந்து 24 சட்டமன்ற உறுப்பினர்களும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாஜகவில் சேர்ந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியிலிருந்தும் சிபிஐ(எம்) கட்சியிலிருந்து தலா மூன்று பேர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜகவின் கைவசமுள்ள முக்கியமான அஸ்திரம், வங்க அரசியல் களம் கட்டுக்கடங்காத வன்முறைகளின் ஆதிக்கத்தில் உள்ளது என்பதுதான். 2019 மக்களவைத் தேர்தலிலிருந்து 2020 நவம்பர் வரையில் குறைந்தபட்சம் அரசியல் காரணமாக 47 கொலைகள் நடந்துள்ளன. அவர்களில் 28 பேர் பாஜக ஆதரவாளர்கள். திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 18 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் இந்த வன்முறைகளுக்கு ஆளுங்கட்சியே குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
சாமானியர்களின் பிரதிநிதி
ஆயினும் எந்த விஷயத்தையும் இயல்பாக சாமானிய மக்களின் பார்வையைப் புரிந்தபடி அணுகும் மம்தாவுக்கு ஈடு கொடுப்பது எந்தக் கட்சிக்குமே அங்கு சாத்தியமாக இல்லை. நந்திகிராம் சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதுகூட அவர் அரசு மருத்துவமனைக்குத்தான் சென்றார். கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் காலில் பெரிய கட்டோடு மம்தா படுத்திருக்கும் படத்தை மக்களுக்கு அது இரண்டு செய்திகளைத் தெரிவிப்பதானது. ஒன்று, வன்முறைக்கு மம்தா இலக்காகியிருப்பதானது ‘திரிணமூல் வன்முறைக் கட்சி’ என்ற பிரச்சாரத்தை வாய் மூடவைக்கும் பதிலடி. இரண்டாவது, இந்தத் தேர்தலையெல்லாம் கடந்தது. அவ்வளவு பெரிய தலைவர் அரசு மருத்துவமனையையே தன்னுடைய மருத்துவமனையாகக் கருதுகிறார் என்ற வெளிப்பாடு. கரோனா காலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கே பல தலைவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிவருவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், ‘தன்னுடைய அரசின் மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் எவ்வளவு நம்புகிறார் எங்கள் தலைவி என்று பாருங்கள்!’ எனப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் திரிணமூல் காங்கிரஸார். மருத்துவமனையில் படுத்திருந்தாலும் பேசுபொருள் மம்தாதான். எதிர்க்கட்சிகள் பொருமுகின்றன!