கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த புலியூர் முருகேசன், ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ சிறுகதைத் தொகுப்பு ஏற்படுத்திய சர்ச்சை வழியாகப் பொதுக் கவனத்துக்கு வந்தவர். எழுத்திலும் பேச்சிலும் மார்க்ஸியப் பார்வையை முன்வைக்கும் அவர், முன்பு எல்ஐசி முகவராகவும், தற்போது ‘தோழர் மெஸ்’ என்ற பெயரில் அசைவ உணவுகள் சமைத்து விநியோகிப்பவராகவும் இருந்துவருகிறார். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், ‘உடல் ஆயுதம்’, ‘மூக்குத்தி காசி’, ‘படுகைத் தழல்’, ‘பாக்களத்தம்மா’ ஆகிய நான்கு நாவல்களும் வெளிவந்திருக்கின்றன.
நாவல், சிறுகதை, கவிதை இவற்றில் எதை விரும்பி வாசிக்கிறீர்கள்?
நாவல், சிறுகதைத் தளத்தில் எழுதிக்கொண்டிருந்தாலும் கவிதைகளைத்தான் அதிகம் விரும்பி வாசிக்கிறேன். ஆனால், அரசியல்மயப்பட்ட கவிதைகள் மட்டுமே என் தேர்வுக்குரியவை. அந்த வகையில் யவனிகா ஸ்ரீராம், இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் எனக்கு முக்கியமானவை. தற்போதைய தலைமுறையில் ஸ்டாலின் சரவணன், மெளனன் யாத்ரீகா, றாம் சந்தோஷ் கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், வினையன் இருவரும் தலித்தியக் கவிதைகளில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
அரசியல்மயப்படுத்தப்பட்ட பிரதிதான் உங்களுக்கு முக்கியமானது என்கிறீர்கள். எனில், இலக்கியம் குறித்த உங்கள் பார்வை என்ன?
எனக்கு இலக்கியம் என்பது ரசித்து இன்புறுவதற்கான பண்டம் இல்லை. சமத்துவத்தை நோக்கிப் பேசுவதுதான் எனக்கு இலக்கியம். அரசியல்மயப்பட்ட பார்வையுடன் எழுதினால் அது நல்ல படைப்பு இல்லை என்ற கருத்து தமிழ் இலக்கியச் சூழலில் உலவுகிறது. பலரும் அதை உண்மை எனக் கருதி அரசியலைத் தவிர்த்து எழுதுகின்றனர். நானும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன். பல அனுபவங்களுக்குப் பிறகுதான் அரசியல்மயப்படாத பிரதி வெற்றுக் காதிதம் என்பதைக் கண்டுகொண்டேன். சமூகப் பிரச்சினைகளைப் பேசத் திராணி இல்லாமல்தான் அரசியல்மயப்பட்ட எழுத்து நல்ல படைப்பு இல்லை என்கிறார்கள்.
உங்கள் கூற்றுக்கு மாறாக, அழகியல்தன்மையைப் பிரதானப்படுத்தும் போர்ஹேயை உங்களுடைய ஆதர்சமாகக் குறிப்பிடுகிறீர்களே?
போர்ஹேயின் கதைகளை அவற்றின் அழகியலை அடிப்படையாகக் கொண்டு மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அவருடைய ‘வாளின் வடிவம்’ கதை ஒரு இடதுசாரி மீதான குற்றச்சாட்டுதான். இடதுசாரி இயக்கத்தில் உள்ள ஒருவன் எப்படித் தன் நண்பனைக் காட்டிக்கொடுக்கிறான் என்பதுதான் அந்தக் கதையின் உள்ளடுக்கு. அரசியல் பார்வையைக் கொண்ட எழுத்து நம் கருத்தியல் தளத்தோடு உடன்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்றில்லை. அதே சமயம், இங்கு போர்ஹேயைப் பிரதிசெய்து எழுதுகிறவர்களிடம், அரசியல் பிரதிகள் மீது வெறுப்பு மட்டும்தான் இருக்கிறது. ஒரு மேட்டிமைத்தனத்தோடு பிறரை அணுகுகிறார்கள்; போராளிகளை, இயக்கங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் புதிதாக நிறையப் பேர் எழுத வந்திருக்கிறார்கள். கவனிக்கிறீர்களா?
உலகமயமாக்கலுக்குப் பிறகு தமிழ் எழுத்துச் சூழலில் மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிட்டன. கம்யூனிஸம் என்ற பெருங்கருத்தியலிலிருந்து பெண்ணியம், சுற்றுச்சூழல், இனம், மொழிப் பிரச்சினைகள் எனத் தனித்தனிப் பிரிவுகள் உருவாகி, அதில் கவனம் குவிக்கப்படுகிறது. இந்தப் போக்கில் நல்லது என்னவென்றால், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான போராட்டமாக அது அமைகிறது. கெட்டது என்னவென்றால், தனித்தனிப் பிரச்சினைகளை மையப்படுத்தும்போது ஒருங்கிணைந்த தீர்வை எட்ட முடியாமல் போய்விடுகிறது. இருந்தபோதும், இந்த மாற்றங்களால் முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழில் அரசியல்மயப்பட்ட நாவல்கள் வரத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் தற்போது எழுதுபவர்களில் யாரை முக்கியமானவர்களாகக் குறிப்பிடுவீர்கள்?
இரா.முருகவேள், பாரதி நாதன், பாட்டாளி போன்றோர் சமகாலத்திய முக்கியமான படைப்பாளிகள். கருத்தியலில் எதிர்முகாமாக இருந்தாலும் எனக்கு பா.வெங்கடேசன் முக்கியமான எழுத்தாளர். பா.வெங்கடேசனின் எல்லா நாவல்களும் அரசியல் நாவல்கள்தான். அவர் அரசியல் பார்வையோடுதான் தன் படைப்பை உருவாக்கிவருகிறார். அதுதான் இலக்கியம். அதன் மூலம்தான் சமூக உரையாடலை நிகழ்த்த முடியும். சத்யபெருமாள் பாலுசாமியின் ‘கொடுங்கோளூர் பரணி தெறிப்பாட்டுகளின் வெளிச்சத்தில் சிலம்பும் கண்ணகியும்’ கட்டுரைத் தொகுப்பானது தமிழ் அடையாளத்தை மீட்டுருவாக்குகிறது. அதேபோல, ‘நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்’ சிறுகதைத் தொகுப்பை எழுதிய பாவெல் சக்தி, இன்றைய சூழலில் மிக முக்கியமானவர். அரிசங்கரின் ‘உண்மைகள் பொய்கள் கற்பனைகள்’ நாவலைச் சமீபத்தில் படித்தேன். ஐடி துறையில் சாதி அரசியல், மொழி அரசியல் என்று மட்டுமில்லை; நிற அரசியல், வயது அரசியல் என எவ்வளவு பிரச்சினைகள் ஊடாடுகின்றன என்பதை அவர் நிறங்களின் வழியே புனைவாய் எழுதுகிறார். தமிழில் அரசியல்மயப்பட்ட எழுத்து என்பது ஒரு இயக்கமாக மாறினால் அது நிச்சயம் சமூக மாற்றத்துக்கு வித்திடும்.