சிறப்புக் கட்டுரைகள்

களத்தில் தி இந்து: ஸ்டவ்வில் மண்ணெண்ணெய் நிரப்ப வேண்டாம்!

செய்திப்பிரிவு

உதவும் கரங்கள் ஒன்றுசேர்கின்றன!

மழை, வெள்ளத்தால் வீடிழந்து நிலைகுலைந்திருக்கும் நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு ‘தி இந்து’ வாசகர்களின் உதவிகள் தொடர்கின்றன.

சென்னை:

சென்னையில் ‘கிருஷ்ணப்ரியா பவுண்டேஷன்’ சார்பில் 500 போர்வைகள் வந்தன. வாசகர்கள் டி.ஆர்.நாராயணன், ஏ.கற்பகம், என்.அலுமேலு, எஸ்.ரம்யா, ஆர்.கே.சீனிவாசன், சங்கமித்ரா, பி.வெங்கடரமணி, ஜி.ஜி.நாதன், லயன் ஏ.சுபாஷ், மாதவ் மற்றும் சுராஜ் ஆகியோர் புதிய பாய், போர்வைகளை அனுப்பினர். விழுப்புரம் கரிகால் சோழன் பசுமை மீட்புப் படை சார்பில் பாய், போர்வைகள் வந்தன. வேலூர் வாசகர்கள், சத்துவாச்சாரி தரன், சலவன்பேட்டை கே.ராமானுஜலு ஆகியோர் பாயோடு மண்ணெண்ணெய் கேஸ் ஸ்டவ்வும் அனுப்பினர்.

கோவை: உடுமலை அரசுக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 30 பாய்கள், 30 போர்வைகள் அடங்கிய பெட்டியை சங்க நிர்வாகிகள் எஸ்.கண்ணன், வெ.தேவேந்திரன், எஸ்.ஜோசப், பேராசிரியர் வ.கிருஷ்ணன் ஆகியோர் அளித்தனர். வாசகர்கள் காந்தன் - சந்தானமணி தம்பதியினர், ஜனார்த்தனம், குரப்பன் ஆகியோர் 6 பாய்கள், போர்வைகளை அனுப்பிவைத்தனர்.

சேலம்:

தமிழ்நாடு பாய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 880 பாய்களை அனுப்பியிருந்தனர். சங்கத் தலைவர் தங்கம் இவற்றை ஒப்படைத்தார். சத்திரம் அத்திப்பாளையத்தைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி மாதர் சங்கத்தினர் 50 பேருக்கான பாய்கள், போர்வைகளை அளித்தனர். வாசகர் அழகாபுரம் சுப்பிரமணி 12 போர்வைகள் அடங்கிய பெட்டியுடன் வந்து சேர்ந்தார். வாசகர் கனகசபாபதி 100 பாய்களை வழங்கினார். வெங்கடேசபுரம் சுப்பிரமணி 5 செட் சட்டை, பேன்ட், புடவை, துண்டு ஆகியவை அடங்கிய பெட்டியை அனுப்பிவைத்தார். தர்மநகர் மருத்துவர் என்.எஸ்.மகாலட்சுமி, சொர்ணம் அர்த்தநாரி ஆகியோர் 10 ஸ்டவ்களோடு, 6 பாய்கள் - போர்வைகள் வழங்கினர். பி.ஆர்.கே.சிவகுமார் 10 ஸ்டவ்களை வழங்கினார். கிருஷ்ணகிரி கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்க நிர்வாகி விடுதலை 7 ஸ்டவ்களை வழங்கினார்.

மதுரை:

விருதுநகர் மாவட்டம், தமுஎகச கிளைத் தலைவர் பி.பாக்கியராஜ் 250 பாய்களையும், 200 போர்வைகளையும் அனுப்பிவைத்தார். திண்டுக்கல்லைச் சேர்ந்த ‘ஆர்.பி.டிரேடர்ஸ்’, ‘எஸ்.எஸ்.மோட்டார்ஸ்’ இரு நிறுவனங்களையும் சேர்ந்த வாசகர்கள் பாய், ஸ்டவ், போர்வைகளை அளித்தனர்.

திருச்சி:

பெரம்பலூர், லப்பைக்குடிகாட்டைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகி தாருசலாம் 38 ஸ்டவ்களை அனுப்பிவைத்தார். திருச்சி வாசகர்கள் யுவசங்கர், தியாகராஜன், சீனிவாசன், தில்லை சீனு ஆகியோர் ஸ்டவ்களை அனுப்பினர். வாசகர் கமல்பாட்ஷா, கல்பனா ஆகியோர் பாய், போர்வைகள், உடைகளை அனுப்பினர்.

தஞ்சாவூர் வாசகர் மார்டின் தியோபால் இரு குடும்பங்களுக்கான போர்வைகளை அனுப்பினார். கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சேர்ந்து 35 ஸ்டவ்களை அனுப்பிவைத்தனர். கரூர் வாசகர் கந்தசாமி 2 ஸ்டவ்களையும், புதுக்கோட்டை வாசகர் மாணிக்கம் பாய் - போர்வைகள் அடங்கிய பெட்டியையும் ஊரக வளர்ச்சி ஊழியர்கள் விஸ்வநாதன், வேலவேந்தன் ஆகியோர் ஒரு பெட்டி நிறையப் போர்வைகளையும் அனுப்பினர்.

நெல்லை:

திருநெல்வேலி ‘கணேஷ் அண்டு கோ’ சார்பில் 10 போர்வைகள் வந்து சேர்ந்தன. வாசகர்கள் பெரியசாமி பாய் -ஸ்டவ்களையும், ராமச்சந்திரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய துணிகளையும் அளித்தனர். கல்லூரி மாணவர் கணபதி சக்திவேல், பள்ளி மாணவர் ஆர்த்தி சக்திபாலா இருவரும் ஸ்டவ்களோடு வந்தனர்.

வாசகர்களின் உதவிகள் தொடர்கின்றன. வீட்டோடு சேர்த்து தங்கள் மொத்த உடமைகளையும் பறிகொடுத்து அகதிகளைப் போல நிற்பவர்களுக்கு நாம் செய்ய வேண்டியவை நிறைய. வாசகர்களோடு கை கோத்து அடுத்தடுத்து, செய்ய வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து யோசிக்கிறோம். சேர்ந்தே திட்டமிடுவோம். இணைந்த கைகள் ஆறுதல் தரட்டும்!

- ஆசிரியர்

ஸ்டவ்வில் மண்ணெண்ணெய் நிரப்பி அனுப்ப வேண்டாம்!

நாம் அளிக்கும் உதவிகளில் புதிய பாய் போர்வைகளைவிட, புதிய மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்வுக்கான தேவையே அதிகமாக இருக்கிறது. பல கிராமங்களிலும் மக்களிடமிருந்து தொடர்ந்து ஸ்டவ்வுக்கான கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

மண்ணெண்ணெய் ஸ்டவ்களை வாங்கி அனுப்பும் வாசகர்கள் பலரும், கூடவே மண்ணெண்ணெய் நிரப்பி கே.பி.என். அலுவலகத்தில் கொண்டுவந்து சேர்க்கின்றனர். வாகனங்களில் இப்படி அடுப்புகளை எடுத்துச் செல்லும்போது எரிபொருள் நிரப்பி எடுத்துச் செல்வது விபத்துகளுக்கு வழிவகுக்கும்; மண்ணெண்ணெயுடன் ஸ்டவ்களை எடுத்துச் செல்ல இயலாது. ஆகையால், வாசகர்கள் புது ஸ்டவ் வாங்கி அனுப்பும்போது எரிபொருள் நிரப்பாமல், ஸ்டவ்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

SCROLL FOR NEXT