தமிழகத்தின் முன்னணி வார இதழ்களில் பணியாற்றிய தமிழ்மகன், இதழியல் பணிக்கு நிகராக இலக்கியத்திலும் தன்னை முழுக்க ஈடுபடுத்திக்கொண்டவர். ‘சொல்லித் தந்த பூமி’, ‘ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம்’, ‘வெட்டுப்புலி’, ‘ஆண்பால் பெண்பால்’, ‘வனசாட்சி’, ‘ஆபரேஷன் நோவா’, ‘தாரகை’, ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’, ‘நான் ரம்யாவாக இருக்கிறேன்’, ‘படைவீடு’ ஆகிய நாவல்களும், ‘எட்டாயிரம் தலைமுறை’, ‘சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்’, ‘மீன்மலர்’, ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் இதுவரையிலான தமிழ்மகனின் புனைவுப் பங்களிப்புகள். ஒரு பத்திரிகையாளரான தமிழ்மகன், புனைவுகள் எழுதும்போது வரலாறு பக்கம் நகரும் பின்னணி குறித்துப் பேசுகிறார்.
ஒரு பத்திரிகையாளரான நீங்கள் உங்களுடைய நாவல்களின் உள்ளடக்கமாக வரலாற்றுப் பின்புலங்களைத் தேர்ந்தெடுப்பது ஏன்?
பத்திரிகையாளராக இருப்பதால்தான் என்று தோன்றுகிறது. இது நீங்கள் கேட்ட பிறகு எனக்கு ஏற்பட்ட தெளிவாகக்கூட இருக்கலாம். செய்திகளில் பல அன்றன்றே மரணம் எய்திவிடும். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின் அந்தச் செய்தி நமக்கு ஒரு வரலாற்றுத் தரிசனத்தை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு, அண்ணா ஹசாரேவைச் சில காலங்களுக்கு முன் மிகைப்படுத்திச் செய்திகள் எழுதினார்கள். ஹசாரே பற்றிய சித்திரத்தைப் படைப்பதற்குச் செய்தியின் போதாமை எனக்கு இருந்ததால், அவரை ஒரு கதாபாத்திரமாக மாற்ற நினைக்கிறேன். அதனால், நடந்து முடிந்த சம்பவங்களைத் தேடியலைந்தபடியே இருக்கிறேன். என்னுடைய ‘வெட்டுப்புலி’, ‘மானுடப்பண்ணை’, ‘வனசாட்சி’, ‘ஆண்பால் பெண்பால்’, ‘தாரகை’, ‘படைவீடு’ அனைத்துமே கடந்துபோன சம்பவங்களை மறுபரிசீலிப்பவை. ‘இன்றைய செய்தி நாளைய வரலாறு’ என்பது சாதாரண சொற்றொடர் அல்லவே.
‘படைவீடு’ நாவலில் விடுபட்ட காலகட்டத்தை எழுதியிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் காலகட்டம் குறித்து நீங்கள் விவரங்கள் சேகரித்த கதை சொல்லுங்கள்?
சேர சோழ பாண்டியர்கள் காலம் ஏறத்தாழ 13-ம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டில் சுல்தானியர் படையெடுப்பு 1310-ல் நிகழ்ந்தது. மாலிக் காபூர் தலைமையில் வந்த அந்தப் படை, மதுரையைக் கைப்பற்றியது. பின்னர், சுமார் எட்டு மாதங்களில் மாலிக் காபூர் மீண்டும் டெல்லி சென்றுவிட்டார். சுல்தானியத் தளபதிகள், அதன் பின்னர் துக்ளக் தலைமையில் அமைந்த படையினர் என மதுரையை ஆள்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் தொண்டை மண்டலத்தின் மீது படையெடுக்கவில்லை. கி.பி.1273 - 1363 வரை 90 ஆண்டுகள் தொண்டை மண்டலத்திலே என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. மார்க்குவெஸின் தலைப்பான ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ போல இருந்தது அந்தக் காலகட்டம். இருண்ட அந்தக் காலகட்டத்தைத் தேட ஆரம்பித்தேன். கோ.தங்கவேலு, இல.தியாகராசன் எழுதிய ‘சம்புவராயர் வரலாறு’ நூல் கிடைத்தது. ஆதாரபூர்வமான அரிய தகவல்கள் அடங்கிய நூல் அது. கண் முன்னே ஒரு காவியம் ஓட ஆரம்பித்தது. ‘சம்புவராயர்களின் நாணயங்கள்’ நூலும் எனக்குப் போதுமான ஆதாரமாக அமைந்தன. அதன் பிறகு, தொண்டை மண்டலத்தைப் பலமுறை வலம்வந்தேன். இளவரசர் பயணிக்கும் பகுதியாக அதை நாவலில் வலுவாகச் சேர்க்க முடிந்தது. சம்புவராயர்களை வென்ற விஜயநகரப் பேரரசர் குமாரகம்பண்ணன் பயணித்த பகுதிகளைத் தேடி, சம்புவராயர்கள் ஆண்ட படைவீடு பகுதி தொடங்கி ஹம்பி வரை செல்ல வேண்டியிருந்தது. குமாரகம்பண்ணனின் மனைவி கங்காதேவி எழுதிய ‘மதுரா விஜயம்’ நூல் என் நாவலுக்குப் பெரிதும் உதவியது.
தமிழ்ச் சூழலில் வரலாற்றுப் புனைவுகள் நிறைய எழுதப்படுகின்றன. அவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எல்லாவற்றுள்ளும் அவரவர் அரசியல் சார்ந்து ஒரு நோக்கம் இருப்பதைப் பார்க்கிறேன். இடதுசாரி, வலதுசாரி என இதிலும் பிரிவுகள் உண்டு. சிலர் எந்த வம்புக்கும் போகாமல் அரசர்களின் வீரசாகசத்தை மட்டுமே எழுதிச் செல்கிறார்கள்.
புனைவுகளில் வரலாற்றுத் தருணங்கள் எப்படிக் கையாளப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?
வரலாற்றுப் பெருமைகளைச் சொல்வதோடு நிற்காமல், அந்தக் காலகட்டத்தை இன்றைய ஏதேனும் சிக்கல்களை உரசிப்பார்க்க உதவுமாறு செய்தால் பெரும் வரலாற்றுப் பலனாக இருக்கும். என்னுடைய ‘படைவீடு’ நாவலில், இன்று பெருகியோடும் சாதி வெறிப் போக்குக்கு ஆதாரமான ஒரு புள்ளியை அலசியிருக்கிறது. முடிந்த அளவு ஆதாரத்துடனும் நம்பகத்தன்மையுடனும் அதைச் சொல்லியிருக்கிறேன். ‘வெட்டுப்புலி’, ‘ஆண்பால் பெண்பால்’, ‘தாரகை’, ‘வனசாட்சி’ போன்றவற்றிலும் அப்படியொரு தடயம் இருக்கும். இது என்னுடைய படைப்பு நோக்கம் மட்டுமே. யாரிடமும் இப்படித்தான் எழுத வேண்டும் என வலியுறுத்த மாட்டேன்.
வரலாறுகளின் உண்மைத்தன்மைக்கு ஒரு புனைவாசிரியர் எவ்வளவு நேர்மையாக இருக்க வேண்டும்?
வரலாற்றைத் திரித்துச் சொல்வதும், வரலாற்றின் வெற்றிடங்களைப் பொருத்தமான ஆதாரங்களுடன் இட்டு நிரப்புவதும் ஓரிழை இடைவெளிதான். இடறிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. நமக்குச் சாதகமாக வரலாற்றைத் திசை திருப்பக் கூடாது. ஏழாயிரம் பாக்களில் உருவான ஜெயம் என்ற கதை, பிறகு ஒரு லட்சம் பாக்களாக மகாபாரதமாக வளர்ந்தது என்பர். புராணங்கள்தான் காலத்துக்கு ஏற்ப வளையும். வரலாறு அப்படியல்ல... காலம் செதுக்கிவைத்த கல்வெட்டு. அதிகமாக வளைத்தால் உடைந்துவிடும்.