சமூகநீதி என்றதும் சிலர் முகம் மலர்வதும், சிலர் முகம் சுளிப்பதும், இன்னும் சிலர் மிகவும் கவனத்தோடு மௌனம் காப்பதும் வழக்கமாக இருக்கிறது. விளிம்புநிலை மக்களுக்கு முன்னுரிமை தருவது சரியா? இது சமத்துவமா? இது ஒருபக்கச் சார்புநிலை ஆகாதா? சமபங்கு என்ற அறவியல் கோட்பாட்டையும், அறவியலாளர்கள் ஜான் ரால்ஸ், ஜான் ரஸ்கின் ஆகியோரின் சிந்தனைகளையும் கொண்டு இதற்கு விடை தேடலாம்.
சமத்துவம், சமபங்கு
சமத்துவம் (equality), சமபங்கு (equity) என்ற இரு அறவியல் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் காண்போம். நியாயம்தான் இரண்டின் இலக்கும். சமத்துவக் கோட்பாடு ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல், அனைவரையும் சமமாக நடத்துவதன் மூலம் இதனைச் சாதிக்கிறது. ஆனால், சமபங்குக் கோட்பாடு சமூகத்தில் உள்ள பலரின் அல்லது பல குழுக்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு, அவர்களை வித்தியாசமாக நடத்துவதன் மூலம் நியாயத்தை அடைகிறது.
இந்தியா போன்ற சமத்துவமற்ற சமூகங்களில் சமபங்குத் தத்துவமே முன்னுரிமை பெற வேண்டும். நம் சமூகத்தில் பொருளாதார, அரசியல், சமூக, கலாச்சார சமத்துவமின்மை நிலவுகிறது. நாம் அனைவரும் ஒரே உயரம் கொண்டவர்கள் இல்லை. எனவே, எல்லோருக்கும் சம உயரமான நாற்காலிகள் வழங்குவதால், சுவருக்கு வெளியே நின்றுகொண்டு ஒரு நிகழ்வைச் சமமாக ரசிக்க முடியாது. உயரமானவர்களுக்குக் குட்டையான நாற்காலிகளும், குட்டையானவர்களுக்கு உயரமான நாற்காலிகளும் வழங்குவதன் மூலமே, அனைவருக்கும் ‘சமமான பார்த்தல்’ அனுபவத்தைச் சாத்தியமாக்க முடியும். இங்கு அனைவரும் சமத்துவமாக நடத்தப்படாததுபோல் தோன்றலாம். ஆனால், இதுதான் சமபங்குக் கோட்பாடாகும். இதைத்தான் சமூகநீதி என்கிறோம்.
பாரம்பரிய நீதித் தத்துவத்தில் இது ‘மறுசீரமைப்பு நீதி’ என அழைக்கப்படுகிறது. இழந்த சமத்துவத்தைப் புதுப்பிக்கவும், நியாயத்தை மீட்டெடுக்கவும் இந்த மறுசீரமைப்பு நீதி அறைகூவல் விடுக்கிறது. ‘தண்டிக்கிற நீதி’யாகவும் இதைக் கருத வாய்ப்புண்டு. ஏனெனில், சமூகப் படிநிலையில் கீழே உள்ளோர் மீது அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான் சிலர் ஏழைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கல்லாதோராகவும் வைக்கப்பட்டிருக்கின்றனர். தவறிழைத்தோருக்குத் தண்டனை என்பதுதானே நீதி. எனவே, சமத்துவம் எட்டப்படும் வரை, பின்தங்கிய சமூகங்களுக்கு ‘உயரமான நாற்காலிகள்’ கொடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதுதானே நியாயம்? இந்த சமபங்குத் தத்துவத்தின் நடைமுறைச் செயல்பாடுகளில் ஒன்றுதான் இடஒதுக்கீடு.
இந்த அணுகுமுறை சில நாடுகளில் உடன்பாட்டு நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது. சாதி, சமயம், இனம், பாலினம் போன்ற வேறுபாடுகளால் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் சமபங்கு இல்லாதவர்களுக்குச் சமபங்கு வழங்குவதே சமூகநீதிக் கொள்கையாகும்.
ரால்ஸின் ‘நியாயமே நீதி’
அமெரிக்க மெய்யியலர் ஜான் ரால்ஸ் ‘நீதியே நியாயம்’ எனும் கருத்தாக்கத்தைத் தன்னுடைய புகழ்பெற்ற ‘நீதிக் கோட்பாடு’ எனும் நூலில் 1971-ல் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து இந்தக் கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்துத் திருத்தி ‘நியாயமே நீதி: ஒரு மறுசீரமைப்பு’ என்ற நூலை 2001-ல் வெளியிட்டார். 20-ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை ஜெ.எஸ்.மில்லின் பயனுடைமைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே தத்துவ அறிஞர்கள் ஜனநாயகக் கொள்கைகளின் நியாயத்தை எடுத்துரைத்தனர். அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அதிக அளவு மகிழ்ச்சியைத் தருவதே பயனுடைமைத் தத்துவம். அதன் விளைவு? சிறுபான்மையினரின் உரிமைகள், கரிசனைகளை அநியாயமாக ஒதுக்கித்தள்ளியே, பெரும்பான்மையினரின் அதிக அளவு மகிழ்ச்சி உறுதிசெய்யப்பட்டது.
இதற்கு முற்றிலும் மாறுபட்ட, பயனுடைமை சாராத நியாயம், சமத்துவம், தனிமனித உரிமை போன்றவற்றின் அடிப்படையில் ஜனநாயக அரசியலுக்கான நியாயத்தை ரால்ஸ் உருவாக்க முயன்றார். அவரது தத்துவத்தில் இரண்டு கொள்கைகள் உள்ளன. இரண்டாம் கொள்கையின் இரண்டாம் பகுதி வேறுபாட்டுக் கொள்கை என அழைக்கப்படுகிறது. வருமானம், சொத்து இவற்றைப் பங்கீடு செய்வதை ஒழுங்குபடுத்தும் கொள்கை இது. எல்லோருக்கும் குறிப்பாக, பின்தங்கியோருக்குச் சாதகமாக இருக்கும் வரை, சமத்துவமற்ற வருமானம்-சொத்து போன்றவற்றை இது அனுமதிக்கிறது. முன்னேறத் தவறியவர்களுக்கு மிகச் சாதகமாகவே பொருளாதாரச் சமத்துவமின்மை இருக்க வேண்டும் என்பதே இக்கொள்கை. “மனிதர் தம் சுமைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ள ‘நீதியே நியாயம்’ தத்துவத்தில் உடன்படுகின்றனர்” என்கிறார் ரால்ஸ்.
அமர்த்திய சென்னின் ‘நீதி பற்றிய கருத்து’ (2009) எனும் நூல் ரால்ஸின் நீதிக் கோட்பாட்டின் விமர்சனமும் திருத்தமுமே ஆகும். ரால்ஸின் கருத்தைப் பாராட்டி ஏற்றுக்கொள்ளும் சென், நீதியையும் நியாயத்தையும் வேறுபடுத்திக் காட்டுகிறார். நீதி என்பது நேரிய சட்டங்கள். ஆனால் நியாயம் என்பது அதனை வாழ்வாக்குதல். நீதி ஸ்தூலமற்றது; நியாயம் நடைமுறைச் செயல்பாடுகளால் உருப்பெறுகிறது. ரால்ஸ் முழுமையான நீதிக் கொள்கையை உருவாக்குவதையே கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார் என சென் விமர்சிக்கிறார். “நமக்குத் தேவை சீர்மிகு முழுமையான நீதிக் கொள்கை (நீதி) அல்ல; மாறாக அநியாயங்களை ஒழிக்கும் நடைமுறைச் சாதனங்களே (நியாயம்)” என்கிறார் சென். எனவே, ரால்ஸின் தத்துவத்தை சென் முழுமையாக்குகிறார்.
ரஸ்கினின் ‘கடையர் வரை’
‘கடையர் வரை’ என்ற ரஸ்கினின் தத்துவமும் அதன் இந்நிய அவதாரமும் இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.
1860-ல் ஆங்கிலக் கலை விமர்சகர் ஜான் ரஸ்கின் ‘கடையர் வரை’ என்ற நூலை எழுதினார். காந்தி தன் சர்வோதயத் தத்துவத்தை ரஸ்கினிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். காந்தி ரஸ்கினின் கொள்கைளை மூன்றாகத் தொகுக்கிறார். அவற்றில் முதலாவது கொள்கை இது. “எல்லோரின் நலனில் தனிப்பட்ட நபரின் நலன் அடங்கியிருக்கிறது.” காந்தியின் சர்வோதயக் கொள்கையில் சமூகத்தின் கடைக் கோடியில் இருப்போர் மீதான அவரின் கரிசனை தெரிகிறது. உண்மையாகவே, ‘கடையர் வரை’ என்ற ரஸ்கினின் தத்துவத்தை காந்தி ‘சர்வோதயம்’ (அனைவரின் நலம்) என்பதற்குப் பதிலாக ‘அந்தியோதயம்’ (கடையரின் நலம்) என்றுதான் மொழிபெயர்த்திருக்க வேண்டும்.
காந்தியாலும் வினோபாவாலும் ஈர்க்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயண், சர்வோதயத் திட்டத்தை விரிவுபடுத்தினார். வினோபாவால் முன்னெடுக்கப்பட்ட பூமி தானம், கிராம தான இயக்கங்கள் நிலக்கிழார்களிடமிருந்து நிலங்களைத் தானமாக வாங்கி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்குக் (கடையருக்கு) கொடுத்ததில் ஓரளவு வெற்றியடைந்தன. இதனை முன்னேறிய வகுப்பினர் தரப்பிலிருந்து வெளிப்பட்ட தன்னார்வ சமூக நீதி எனலாம்.
அந்தியோதயம் வழியே சர்வோதயம்
உண்மையிலேயே, அந்தியோதயம் வழிதான் சர்வோதயத்தை அடைய முடியும். சமூகத்தின் கடைக்கோடியில் இருப்போரின் நலனை உறுதிசெய்வதன் வழியாகத்தான் எல்லோருடைய நலனும் சாத்தியமாகும். ஒரு தாய் ஆரோக்கியமான குழந்தைக்கும், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைக்கும் சமமாகவா உணவளிப்பார்? தேவையுள்ளோருக்கு அதிக உணவளிப்பதே நீதியும் நியாயமும் ஆகும். ஒரு சமூகம் ஏழைகளையும் வலுவிழந்தோரையும் எப்படி நடத்துகிறது என்பதைப் பொறுத்துதான் அதன் தரம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோருக்கு முன்னுரிமை தருவதே காலத்தின் தேவை. இதுவே சமூக நலனை அடைவற்கான அறவியல் கட்டாயமும் ஆகும். இதுதான் சமூகநீதித் தத்துவம்.
- சி.பேசில் சேவியர், ‘பிலாசபி ஆஃப் மார்ஜின்ஸ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: basilxavier@gmail.com