சென்ற வருடப் புத்தகக்காட்சி முடிந்த கையோடு கரோனா ஆட்கொண்டுவிட்டது. அதைத் தொடர்ந்து பொதுமுடக்கம் காரணமாகத் தமிழகத்தின் முக்கியமான புத்தகக்காட்சிகள் எதுவுமே நடக்கவில்லை. இதனால், பதிப்புத் துறை எதிர்கொண்ட இழப்புகள் ஏராளம். இப்போது மீண்டும் பழைய உற்சாகத்தோடு தமிழகத்தின் மிகப் பெரும் புத்தகத் திருவிழா தொடங்கியிருக்கிறது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 44-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சி, இம்முறையும் நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. 800 அரங்குகள், கோடிக்கணக்கான புத்தகங்கள், லட்சக்கணக்கான வாசகர்களின் பங்கேற்பு எனப் பிரம்மாண்டமாக வாசகர்களை வரவேற்கத் தயாராகியிருக்கிறது.
எதுவரை நடக்கிறது: பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை என இந்த ஆண்டு 14 நாட்கள் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. விடுமுறை தினங்கள் மட்டுமல்லாமல், இம்முறை எல்லா நாட்களிலுமே காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 10% கழிவில் புத்தக வேட்டையாடலாம்.
நிகழ்ச்சிகள்: தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (பிப்ரவரி 24) காலையில் புத்தகக்காட்சியைத் திறந்து வைத்தார். முன்னாள் தமிழகக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாலை நடந்த நிகழ்ச்சியில் சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நூற்றாண்டு கண்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பி.இரத்தின நாயக்கர் & சன்ஸ் பதிப்பகங்களுக்கும், சின்ன அண்ணாமலை (தமிழ்ப் பண்ணை), செ.மெ.பழனியப்ப செட்டியார் (பழனியப்பா பிரதர்ஸ்), பாரி செல்லப்பனார் (பாரி நிலையம்), முல்லை முத்தையா (முல்லை பதிப்பகம்) ஆகிய நூற்றாண்டு கண்ட பதிப்பாளர்களுக்கும் விருதுகளை வழங்கி வாழ்த்துரையாற்றினார். பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்புரை வழங்க, பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன் நன்றியுரை வழங்கினார்.
விருதுகள்: சிறந்த பதிப்பாளருக்கான விருதுக்காக வசந்தா பிரசுரம், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பகச் செம்மல் ச.மெய்யப்பன் விருதுக்காக அனுராதா பப்ளிகேஷன், சிறந்த பதிப்பாளருக்கான பதிப்புச் செம்மல் க.கணபதி விருதுக்காக ராஜ் மோகன் பதிப்பகம், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருதுக்காக ஆறு.அழகப்பன், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருதுக்காக கொ.மா.கோ.இளங்கோ, சிறந்த பெண் எழுத்தாளருக்கான அம்சவேணி பெரியண்ணன் விருதுக்காக சக்தி ஜோதி, சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருதுக்காக ஆத்மா கே.ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
‘இந்து தமிழ் திசை’ அரங்கு 246 – 247
புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ அரங்கு (எண்: 246 – 247) வாசகர்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது.
இந்து குழுமத்திலிருந்து 2021-க்கான ‘இந்து இயர்புக் - 2021’ வெளிவந்திருக்கிறது. அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, ஆசையின் ‘என்றும் காந்தி’ நூல்களுடன் மோகன வெங்கடாசலபதியின் ‘இணையச் சிறையின் பணயக் கைதிகள்’, கு.கணேசனின் ‘கரோனாவை வெற்றிகொள்வோம்’, வி.டில்லிபாபுவின் ‘போர்முனை முதல் தெருமுனை வரை’, பி.எம்.கதிரின் ‘பேசும் படம்’ எனப் பத்துக்கும் மேற்பட்ட புதிய வெளியீடுகள் வருகின்றன.