இந்திய விடுதலைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் மறக்க முடியாத துரோகங்களும் உண்டு. வங்காள நவாபுக்குத் துரோகம்செய்து, கிழக் கிந்திய கம்பெனிக்கு உதவிய மிர் ஜாபர் (1691-1765) வங்காள நவாப் ஆக அறிவிக்கப்பட்ட நாள் இன்று.
இந்தியாவின் முகலாயப் பேரரசுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நிகழ்ந்த முக்கியமான போர், பிளாசி போர். கிழக்கிந்திய கம்பெனியின் படைத்தளபதியாக இருந்தவர் ராபர்ட் கிளைவ். இந்தியப் பேரரசின் சார்பாக வங்காள நவாப் சிராஜ் உத் தவுலா போரிட்டார்.
கிளைவ் தலைமையிலான படையில் 2,100 இந்திய சிப்பாய்களும் 750 ஆங்கிலேய சிப்பாய்களும் இருந் தனர். 100 சிறுபீரங்கிகளும், 8 நடுத்தர பீரங்கிகளும் அவர்களிடம் இருந்தன. இந்தியத் தரப்பில் 42 ஆயிரம் தரைப்படை வீரர்களும் 20 ஆயிரம் குதிரைப்படை வீரர்களும் இருந்தனர்.
இந்தியத் தரப்பில் இருந்த சுமார் 62 ஆயிரம் பேரை சுமார் 3 ஆயிரம் பேர் தாக்கியதில் இந்தியத் தரப்பில் 500 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். கம்பெனி படைகளில் 5 ஐரோப்பியர்களும் 13 இந்தியர்களும் கொல்லப்பட்டனர். 30 இந்தியர்களும் 15 ஐரோப்பியர்களும் காயமடைந்தனர். நவாப்பின் படைத்தளபதிகளைத் தந்திரமாகத் தன் வலையில் விழவைத்து, போரில் நவாபுக்குத் துரோகம் செய்ய வைக்கும் பல திட்டங்களை ராபர்ட் கிளைவ் செயல்படுத்தினார்.
முர்ஷிதாபாத் வீழ்ந்தது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் ஆசியாவில் ஏற்படுவதற்கான முக்கிய மான திருப்பமாக இந்தப் போர் அமைந்தது. இந்தியத் தரப்பில் தளபதியாக இருந்துகொண்டே ஆங்கிலேயர் களுக்கு உதவியதன் மூலம் துரோகம் செய்த மிர் ஜாபரை வங்காள நவாபாக கிழக்கிந்திய கம்பெனி நியமித்தது. இடையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக டச்சு நாட்டின் உதவியைப் பெற மிர் ஜாபர் சில முயற்சியைச் செய்தார். எனினும் அதை ஆங்கிலேயர்கள் முறியடித்தனர்.