சிறப்புக் கட்டுரைகள்

நிமிடக் கட்டுரை: திப்புவின் கனவு டைரி!

ஷங்கர்

பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள பெர்ஷிய கையெழுத்துப் பிரதிகள் பிரிவில் உள்ள தனித்துவம் வாய்ந்த ஒரு ஆவணம் கவனத்துக்கு வந்துள்ளது. திப்பு சுல்தான் கண்ட 37 கனவுகள் மற்றும் அதைப்பற்றிய விளக்கங்கள் கொண்ட குறிப்பேடுதான் அது. திப்பு சுல்தானின் மறைவுக்குப் பின்னர் கவர்னர் ஜெனரல் மார்குவஸ் வெல்லஸ்லியின் பிரதிநிதியான அலெக்சாண்டர் பீட்சனால் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஏடு இது.

திப்புவின் கனவுக் குறிப்பேட்டை கர்னல் வில்லியம் கிர்க்பாட்ரிக் என்பார் ரங்கப்பட்டணம் அரண்மனையிலுள்ள எழுத்து மேஜைக்குள் ரகசிய ஆவணத் தாள்களினூடே கண்டுபிடித்துள்ளார். இதை எடுத்தபோது, திப்புவின் விசுவாச ஊழியரான ஹபீப் ஊலாஹ் உடன் இருந்துள்ளார். திப்பு எழுதிக்கொண்டிருக்கும்போது யாராவது வந்தால், இந்தக் குறிப்பேட்டை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாக திப்பு இருந்ததாக ஹபீப் ஊலாஹ் குறிப்பிட்டுள்ளார்.

1786-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, 1799 ஜனவரி மாதம் வரை இந்தக் குறிப்பேடு எழுதப்பட்டுள்ளது. 166 தாள்கள் கொண்ட இந்த குறிப்பேட்டில் முதல் 16 தாள்களை மட்டுமே திப்பு பயன்படுத்தியுள்ளார். இறப்பதற்கு சில மாதங்கள் முன்புவரை இந்தக் குறிப்பேட்டில் எழுதியுள்ளார். சில கனவுகளை, உறக்கத்திலிருந்து உடனே விழித்து விவரித்து எழுதியுள்ளார். இந்தக் கனவுகள் பற்றிய குறிப்புகள் காலவரிசைப்படியும் இல்லையென்பது குறிப்பிடத் தக்கது. எழுத்துப்பிழைகள் மலிந்தவை என்றும் கூறப்படுகிறது. திப்பு சுயமாகப் பின்பற்றிய சூரிய சந்திர நாட்காட்டியின் அடிப் படையில் தேதிகளைக் கொடுத்துள்ளார். மவுலுதி யுகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிஜ்ரா காலப்பகுப்புக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த காலண்டர் தொடங் குகிறது. நபிகளின் ஆன்மிகப் பிறப்பு நிகழ்ந்த ஆண்டு அது. எண்களையும், அரபு எழுத்துகளை எழுதுவதுபோலவே வலது புறத்திலிருந்து இடப்புறமாக எழுதியுள்ளார்.

அவருக்கு வந்த கனவுகள் பலதரப்பட்டவை. பெரும்பாலான கனவுகள் அவருக்கும் எதிரிகளுக்கும் இருந்த சண்டையைப் பிரதிபலிப்பவை. சில கனவுகள் அவர் அடையப்போகும் வெற்றியை உணர்த்துபவை. இறைத்தூதரும், அவரது மருமகன் அலியும் அவரது கனவில் வந்திருக்கின்றனர்.

திப்புவின் இறைநம்பிக்கை மற்றும் கனவுகள் மூலம் எதிர்காலத்தை அவர் முன்னுரைக்கும் ஆசையை வெளிப்படுத்துவதாக இந்தக் கனவுக் குறிப்புகள் உள்ளன.

மராட்டா-மைசூர் போர் நடந்த 1786-ம் ஆண்டு காலகட்டத்தில் வந்த கனவு பற்றி திப்பு எழுதியுள்ளார்.

அந்தக் கனவு:

ஹைதாரி மாதம் 21-ம் தேதி (பஸ்த் வருடம்) துங்கபத்ராவின் அக்கரையில் நான் தங்கியிருந்தபோது இக்கனவைக் கண்டேன். யாரும் யாரைப்பற்றியும் அக்கறைப்படாத இறுதித் தீர்ப்பு நாளைப் போல அது இருந்தது. மிக வலிமை மிக்கவனாகத் தோன்றிய ஒரு அந்நிய மனிதன் பிரகாசமான முகத்துடன் சிவந்த தாடி மற்றும் மீசையுடன் வந்து என் கையைப் பிடித்து தன் கையில் வைத்துக்கொண்டு, “நான் யார் தெரிகிறதா?” என்று கேட்டான். எனக்குத் தெரியாது என்றேன். “நான் முர்தசா அலி. இறைவனின் தூதர் செய்தி அனுப்பியுள்ளார். நீயின்றி அவர் தனது காலடிகளை சொர்க்கத்துக்குள் வைக்கமாட்டாராம். சொர்க்கத்துக்குள் செல்வதற்காக நீங்கள் வரும்வரை காத்திருப்பார்” என்றார். நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்தேன். இறைவன் மகத்தான சக்திவாய்ந்தவர். தூதரோ நமக்காக மன்றாடுபவர்.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

SCROLL FOR NEXT