சிறப்புக் கட்டுரைகள்

மியான்மர்: பின்னோக்கிச் சுழலும் ஜனநாயகம்

மு.இராமனாதன்

எல்லா நாட்களையும்போல்தான் பிப்ரவரி 1-ம் தேதியும் விடிந்தது. உலகெங்கும் உள்ள நாட்காட்டிகளில் ஒரு நாள் முன்னால் நகர்ந்தது. ஆனால், அன்றைய காலைப்பொழுதில் மியான்மரில் மட்டும் ஒரே வீச்சில் பத்தாண்டுகள் பின்னால் நகர்ந்தது. நாட்டின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுவதற்குச் சில மணி நேரங்களே இருந்தன. அப்போதுதான் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது என்கிற அறிவிப்பு வெளியானது.

1962 முதல் ராணுவத்தால் ஆளப்பட்ட மியான்மரில் 2016 முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியும் ராணுவமும் இணைந்து ஆட்சி செலுத்தும் புதுமையான இரட்டை ஆட்சி முறை அமலுக்கு வந்தது. கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சியும் (என்.எல்.டி) ராணுவத்தின் ஆசியுடன் இயங்கும் யு.எஸ்.டி.பி. கட்சியும்தான் பிரதானப் போட்டியாளர்கள். என்.எல்.டி. இரண்டாவது முறையாகப் பெரும் வெற்றி பெற்றது. ஆனால், தேர்தலில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில்தான் பிப்ரவரி 1-ம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஓராண்டு காலம் நெருக்கடி நிலையை அறிவித்திருக்கிறது. சூச்சியும் என்.எல்.டி.யின் முக்கியத் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். துருப்புகள் வீதிகளில் வலம்வருகின்றன. ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலாய்ங் அதிபராக முடிசூட்டிக்கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் கடந்த ஐந்தாண்டுகளாக என்.எல்.டி.யும் அதன் தலைவர் சூச்சியும் ராணுவத்துக்கு அனுசரணையாகவே இருந்துவந்தனர். எனினும், ராணுவம் இப்போது நேரடியாகவே ஆட்சி செலுத்த முடிவுசெய்திருக்கிறது.

முன்கதை

இரண்டாம் உலகப் போரின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் பர்மிய விடுதலைப் படை என்கிற ராணுவ அமைப்பின் தளபதியாக இருந்தவர் சூச்சியின் தந்தை ஆங் சான். அவர்தான் 1948-ல் நாடு விடுதலை அடைந்ததும் அதிபராக ஆகியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்பே அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டார். 1962-ல் அப்போதைய அதிபர் ஊ நூ-வின் ஆட்சியைக் கலைத்துவிட்டு ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ராணுவத்துக்கு எதிராக 1988-ல் மாணவர்கள் போராடினார்கள். ஆங் சான் சூச்சி அந்தப் போராட்டத்தில் உயர்ந்து வந்த நட்சத்திரம். ராணுவம் போராட்டத்தை ஒடுக்கிவிட்டது. 1989-ல் சூச்சியையும் வீட்டுக் காவலில் வைத்தது. 1991-ல் சூச்சிக்குச் சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

2010-ல் முன்னாள் ராணுவத் தளபதி தெயின் செயின் அதிபரானார். அவர் பல அரசியல்-பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்தினார். மியான்மரின் ஜனநாயகக் கதவுகள் திறந்தன. 2015-ல் பொதுத் தேர்தல் நடந்தது. என்.எல்.டி. மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், சூச்சியால் அதிபராக முடியவில்லை. சூச்சியின் காலம்சென்ற கணவர் ஆங்கிலேயர். ராணுவம் திருத்தி எழுதிய அரசியல் சட்டத்தின்படி வெளிநாட்டவரை மணந்தவர்கள் அதிபராகப் பதவி வகிக்க முடியாது. சூச்சி தேர்ந்தெடுத்த வேட்பாளர் அதிபரானார். சூச்சி ‘அரசின் ஆலோசக’ரானார். சூச்சியின் தலைமையில் ஜனநாயகம் மெல்ல மெல்ல உயர்ந்துவரும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது அப்படி நடக்கவில்லை.

சிறுபான்மையினரின் துயரம்

சிறுபான்மை இனத்தவரின் கோரிக்கைகளுக்கு சூச்சி செவிசாய்க்கவில்லை. 2017-ல் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராகப் படுகொலைகளும் கலவரங்களும் பாலியல் வன்முறைகளும் நடந்தன. ஏழு லட்சம் ரோஹிங்கியாக்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். ஐநாவின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் மியான்மர் அரசின் மீதான இனப்படுகொலை வழக்கை விசாரித்தது. வழக்கில் ராணுவத்துக்கு ஆதரவாகச் சாட்சி அளித்தவர் சூச்சி. ஒரு நட்சத்திரம் தரையில் உதிர்ந்து விழுந்ததை உலகம் நம்ப முடியாமல் பார்த்தது. சூச்சி சர்வதேச நம்பிக்கையை இழந்திருக்கலாம். ஆனால், உள்நாட்டில் பெரும்பான்மை பாமா இனத்தவரின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. 2020 நவம்பரில் தேர்தல் வந்தது. என்.எல்.டி வென்றது. இந்த முறையும் சூச்சியும் அவரது கட்சியும் ராணுவத்துக்கு இசைவாகவே நடந்துகொண்டிருப்பார்கள். ஆனாலும் ராணுவம் ஏன் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்?

ராணுவத்தின் கரங்கள்

வருகிற ஜூலை மாதம் தளபதி ஹிலாய்ங்குக்கு 65 வயது நிறையும். அது தளபதிகள் ஓய்வு பெறும் வயது. ஆனால், ஹிலாய்ங் ஓய்வு பெற விரும்பவில்லை. அவர் அதிபராகும் ஆசையில் இருந்தார். நாடாளுமன்றத்தில் கால்வாசி இடங்களை, அதாவது 166 இடங்களை, ராணுவமே நியமித்துக்கொள்ளும். தேர்தல் நடந்த 498 இடங்களில், ராணுவத்தின் ஆதரவுடன் இயங்கும் யு.எஸ்.டி.பி. கட்சி 167 இடங்களைப் பெற்றிருந்தால் அவரது ஆசை நிறைவேறியிருக்கும். ஆனால், யு.எஸ்.டி.பி.யால் வெறும் 32 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. 396 இடங்களைப் பெற்றது என்.எல்.டி. சூச்சியால் கைகாட்டப்படும் என்.எல்.டி. தலைவர் அதிபராகியிருப்பார். சூச்சிக்கு ராணுவத்தின் மீது காழ்ப்பு இல்லை என்கின்றனர் சில நோக்கர்கள். பர்மிய ராணுவம் அவரது தந்தையால் துவக்கப்பட்டது. அதே வேளையில், மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி அவர் ராணுவத்துக்குச் சவாலாக வளர்ந்துவிடக்கூடும் என்று ராணுவத்தினர் அஞ்சியிருக்கலாம். ஓய்வு பெற்றுவிட்டால் அதிகாரம் தனது கைவிட்டுப் போகும் என்ற அச்சமும் ஹிலாய்ங்குக்கு இருந்திருக்கலாம். சர்வதேச நீதிமன்றத்தில் இப்போதும் அவர் ஒரு குற்றவாளி, ரோஹிங்கியா குருதியில் அவரது கைரேகை பதிந்திருக்கிறது. மேலும், புதிய அதிபரும் புதிய தளபதியும் அதிகாரத்துக்கு வரும்போது, ஹிலாய்ங்கும் அவர் குடும்பத்தினரும் சகாக்களும் சட்டத்துக்குப் புறம்பாகக் குவித்து வைத்திருக்கும் செல்வத்துக்கான பாதுகாப்பு குறையக்கூடும். அப்படியான பரீட்சைக்கு ஹிலாய்ங் தயாராக இல்லை. அதனால்தான் அவர் தளபதியின் சீருடையைக் களையும் முன்பே அதிபராகிவிட்டார் என்கின்றனர் பர்மியப் பார்வையாளர்கள்.

சர்வதேச எதிர்வினை

மியான்மரின் இந்தப் பின்னடைவால் உலக நாடுகள் கவலை அடைந்திருக்கின்றன. அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஐரோப்பாவும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப்போவதாகச் சொல்கின்றன. மியான்மர் இதனால் அச்சமடையும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என்று மென்மையான வார்த்தைகளில் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது சீனா. மியான்மரின் பல்வேறு உள்கட்டுமானத் திட்டங்களில் சீனா ஏராளமான முதலீடு செய்திருக்கிறது. இதில் மியான்மர் வழியாக இந்தியப் பெருங்கடலை அடையும் பட்டுப் பாதைத் திட்டமும் அடங்கும். மியான்மரில் கணிசமாக வாழும் சீனர்களில் பலர் வணிகத்தில் செழித்து விளங்குகின்றனர். இந்திய அரசு மியான்மர் நிலைமையைக் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கிறது. சீனா-மியான்மர் நெருக்கம் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக உருக்கொள்ளலாம். இந்தியா புதிய கொள்கைகளை வகுக்க வேண்டி வரலாம். இந்தக் கொள்கைகளில் அங்கு வாழும் தமிழர்களின் நலன்களையும் ஒன்றிய அரசு கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்த ராணுவ நடவடிக்கையால் அந்நிய முதலீட்டாளர்கள் பின்வாங்குவார்கள். நாடு தனிமைப்படும். சீன ஆதிக்கம் பெருகும். மிகுந்த பிராயாசைக்குப் பிறகு தோன்றிய ஜனநாயகக் கீற்றுகள் மறையும். 1988-ஐப் போல் மக்கள் போராட்டத்துக்கான சாத்தியங்கள் இப்போது தென்படவில்லை. நாடு பெரும்பான்மை - சிறுபான்மை இனங்களின் பெயரால் பிளவுண்டு கிடக்கிறது. சூச்சி தனது தார்மீக பலத்தையும் உலக நாடுகளிடையேயான செல்வாக்கையும் இழந்திருக்கிறார். இந்தப் பேரிடரிலிருந்து மியான்மர் மீண்டு வர வேண்டும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

SCROLL FOR NEXT