சிறப்புக் கட்டுரைகள்

தீர்மானிக்கும் கடந்த காலம்!

நிஸ்துலா ஹெப்பர்

நாடு முழுவதும் தேர்தல் ஏற்படுத்திய பரபரப்பு பிஹாரிலும் எதிரொலிக்கிறது. இந்த நாளுக்காகத்தான் மாதக் கணக்காகக் காத்திருந்தார்கள் பிஹாரிகள் என்று சொல்லலாம்.

அதிரடி மாற்றங்கள்

முதலாவதாக, அரசியல் கூட்டணியில் நிகழ்ந்திருக்கும் அதிரடி மாற்றங்கள் பலருடைய பார்வையை முற்றிலுமாக மாற்றின. பாஜகவுடன் நிதிஷ்குமார் வைத்திருந்த 17 ஆண்டுகள் கூட்டணி முறிவு. அடுத்து மகா கூட்டணி என்ற பெயரில் முன்னாள் எதிரியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுவுடன் நிதிஷ் ஏற்படுத்திக்கொண்ட புதிய கூட்டணி. மறுபக்கத்தில் பாஜகவும் சும்மா இல்லை. உயர் சாதியினர், பட்டியல் சாதியினர், யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட மக்களின் வாக்குகளை ஒன்றுகுவிக்க ராம் விலாஸ் பாஸ்வான், ஜித்தன் ராம் மாஞ்சி, உபேந்திர குஷ்வாஹாவோடு கை கோத்தது. இவர்களில் பலர் ஒருகாலத்தில் இன்றைக்கு எதிரணியாக இருந்தவர்களோடு கை கோத்திருந்தவர்கள்தாம். இப்படி நேர் எதிராக இருந்தவர்களும், கைகோத்துச் சென்றவர்களும் இடம்மாறியதுதான் இந்தத் தேர்தலின் முதல் அதிரடி.

பாஜகவின் வலுவான அஸ்திரம்

அடுத்தது பிரச்சாரம். இரு தரப்புமே கடந்த காலத்தைக் காட்டித்தான் எதிர்கால ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டுப் பேசின. ஒரே விதமான கடந்த கால நிகழ்வுக்கு அவரவர் வெவ்வேறான விளக்கங்கள் தந்தனர். 1990-களில் லாலு செய்த அட்டகாசங்களைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பியது பாஜக கூட்டணி. லாலு வீற்றிருக்கும் மகா கூட்டணி மட்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் மீண்டும் அத்தனை அசம்பாவிதங்களும் நடக்கும் என்பதுதான் நிதிஷுக்கு எதிரான அவர்களது பலமான அஸ்திரம். அப்படி 1990-களில் என்னதான் நடந்தது? ஆங்காங்கே சாதிக் கலவரம் வெடித்த காலம் அது. உயர்சாதி வகுப்பினர் மாவோயிஸ்ட்டுகளுடன் மூர்க்கமாகச் சண்டையிட்டனர். 1997 டிசம்பரில் லக்ஷ்மண்பூர் பாத்தேவில் சாதிக் கலவரம் வெடித்தது. அதில் ரன்வீர் சேனா எனும் உயர்சாதிக் குழுவைச் சேர்ந்த சிலர் 58 தலித்துகளைக் கொன்று குவித்தனர். இந்தச் சம்பவத்தைத் தற்போது நினைவுபடுத்தித்தான் தலித்துகளுடனும் யாதவர்கள் அல்லாத பிற்படுத்தப்பட்ட சாதியினருடனும் பாஜக கை கோத்தது. அந்தக் காலகட்டத்தில் லாலுவின் அடியாட்களும் சாது யாதவ் போன்ற அவருடைய உறவினர்களும் அராஜகத்தில் இறங்கினர். லாலுவின் மூத்த மகளான மிசா பாரதியின் திருமணத்தின்போது வாகன ஷோரூம்கள் சூறையாடப்பட்டன. இத்தகைய சூழலில் பிஹார் மேலும் சீரழியாமல் தடுத்தது நாங்கள் மட்டுமே என்று பாஜக சொல்லிக்கொண்டது.

இந்த அஸ்திரம் கடந்த காலங்களில் நன்றாகப் பலன் அளித்தது. 2010 சட்டமன்றத் தேர்தலில்கூட இந்தப் பிராந்தியத்தில் போட்டியிட்ட 38 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக வென்றது. அதனுடன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் 20 தொகுதிகளில் வென்றது. ஆனால், இந்தத் தேர்தலில் அது எப்படி பலன் தரும் என்பதைத் தேர்தல் முடிவுகள் நமக்குக் காட்டும்!

நிதிஷின் பூமராங்

நிதிஷ் பாஜகவின் வார்த்தைகளைப் பிடித்தே தனக்கான அஸ்திரங்களாக மாற்றிக்கொண்டார். இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார். இது பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாக ஆர்எஸ்எஸ் இருப்பதால், அதன் வழிகாட்டலில் பாஜக செயல்படுவது கூடிய விரைவில் அபாயகரமான சமூக மாற்றங்களுக்கு வித்திடும் என்பதை மோகன் பாகவத்தின் கூற்று உணர்த்தியுள்ளதாக நிதிஷ் கூட்டணியினர் மக்களிடம் கொண்டுசென்றனர். சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் நெடுங்காலம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கும் சூழல் ஏற்படுமோ என்னும் பயம் ஏற்கெனவே பரவலாக எழுந்திருக்கும் நிலையில், இந்த அஸ்திரமும் நன்றாக வேலை செய்தது. போராடி வென்றெடுத்த இடஒதுக்கீட்டு உரிமைகளையும் பிற்படுத்தப் பட்ட மக்களின் சுயமரியாதையையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்னும் வைராக்கியத்தோடு பிஹார் மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனும் அறைகூவல்கள் காற்றெங்கும் எதிரொலித்தன.

தேர்தலில் ஜெயிப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்; பிஹாரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் இந்தத் தேர்தலில் கடந்த காலம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது!

தமிழில்: ம.சுசித்ரா, © ‘தி இந்து’ ஆங்கிலம்

SCROLL FOR NEXT