சிறப்புக் கட்டுரைகள்

ஷைபால் குப்தா: இணை தேசியத்தின் பிஹாரி குரல்

செ.இளவேனில்

பிஹாரைச் சேர்ந்த புகழ்பெற்ற மேம்பாட்டுப் பொருளியலாளரான ஷைபால் குப்தாவின் மரணம், அம்மாநிலத்துக்குப் பேரிழப்பு. அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கை நடத்த உத்தரவிட்டிருக்கிறார் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார். கட்சி பேதமின்றி அம்மாநிலத்தின் அனைத்துத் தலைவர்களும் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பிராந்தியங்களுக்கிடையில் பொருளியல் சமநிலையற்ற இந்தியா போன்றதொரு நாட்டில், மேம்பாட்டுப் பொருளியல் ஆய்வுகளும் விவாதங்களும் பொத்தாம்பொதுவானதாக இல்லாமல் குறிப்பிட்ட பிராந்தியங்களை முன்னிறுத்தி நடக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஷைபால் குப்தா, தன்னுடைய ஆய்வுப் பரப்பின் குவிமையமாக பிஹாரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர். பாட்னாவில் 1991-ல் அவர் நிறுவிய ‘ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனம்’ உலக அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக விளங்கிவருகிறது. பிஹாரிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டபோது, மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தால் புதிய மாநிலத்துக்கான மற்றொரு ஆய்வு மையம் ராஞ்சி நகரில் தொடங்கப்பட்டது.

ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டுவரும் பொருளியல் கொள்கை மற்றும் பொது நிதிக்கான மையத்தின் இயக்குநராகவும் ஷைபால் குப்தா பொறுப்பு வகித்துவந்தார். பிஹார் அரசால் நிறுவப்பட்ட இம்மையத்தின் வருடாந்திரப் பொருளாதார ஆய்வறிக்கைகளே அம்மாநில அரசின் நிதிக் கொள்கைகளை வகுப்பதற்கு வழிகாட்டுகின்றன. சர்வதேசத் தொழிலாளர்கள் அமைப்பு, உலக வங்கி போன்ற பல்வேறு உலகளவிலான அமைப்புகளுடனும் லண்டன் பொருளாதாரப் பள்ளியுடனும் இணைந்து இம்மையம் ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறது.

ஷைபால் குப்தாவின் கருத்துகள் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுவந்தன. பொருளியல் துறைக்கு வெளியே சமூக, அரசியல் விவாதங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்றவர் அவர். பெருந்தொற்றுக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினைகளை மத்திய - மாநில அரசுகள் முறையாகக் கையாளவில்லை என்ற தனது வருத்தத்தை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார். தொழிலாளர்களின் புலப்பெயர்வுக்குக் காரணம் வேலைவாய்ப்பு மட்டுமல்ல, அது வர்க்க மோதலின் பிரதிபலிப்பும்கூட என்று பொருளாதாரப் பிரச்சினைக்குச் சமூகவியல் விளக்கத்தையும் அளித்தார் அவர்.

இந்தி மாநிலங்கள் தமக்கென்று ஒரு மாநில உணர்வையும், தனித்த தேசிய அடையாளத்தையும் பேணாததை ஒரு பெரும் குறையாகக் கண்டவர்களில் ஒருவர் ஷைபால் குப்தா. மாநில அடையாளவுணர்வை அவர் துணை தேசியம் என்று குறிப்பிட்டார்; தமிழ்நாட்டில் அதை இணை தேசியம் ஆகப் பார்க்கிறோம். ‘பிஹாருக்கென்று துணை தேசியம் இல்லாததுதான் அம்மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது, பிஹாரைச் சேர்ந்த பாரம்பரிய வணிகர்களோ கைவினைஞர்களோ விவசாயிகளோ தொழில் முனைவோர்களாக வளர்த்தெடுக்கப்படவில்லை’ என்று எண்பதுகளிலேயே பேசியவர் ஷைபால் குப்தா. தொழில் துறை வளர்ச்சியில் உரிய கவனம் செலுத்தாத பிஹார், அரை நிலப்பிரபுத்துவ மனோநிலையில் உறைந்துபோனதும் அம்மாநில வளர்ச்சிக்குத் தடையாகிவிட்டதைத் தமது ஆய்வுகளின் வழிநின்று உணர்த்தியவர். பொருளியல் வளர்ச்சியில் துணை அல்லது இணை தேசியம் ஆகக் குறிப்பிடப்படும் மாநிலவுணர்வின் பங்களிப்பு குறித்த ஷைபால் குப்தாவின் கருத்துகள் பிஹாருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஒரு பாடமாக அமையக் கூடியவை!

SCROLL FOR NEXT