நமது வேலையில் நாம் எந்த அளவுக்குத் திருப்தியாக இருக்கிறோம்? நிர்வாகரீதியான ஆலோசனைகளை வழங்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனமான கால்லப், உலகமெங்கும் உள்ள தொழிலாளர்களிடம் இதுதொடர்பான ஆய்வுகளை நடத்துகிறது. கடந்த ஆண்டு வெளியான இந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, 90% தொழிலாளர்கள் தங்கள் வேலையில் ஈடுபாடு இல்லாதவர்கள் அல்லது ஈடுபாடு காட்டாதவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. நினைத்துப்பாருங்கள்: 10-ல் ஒன்பது தொழிலாளர்கள், தங்கள் வாழ்வில் விழித்திருக்கும் நேரத்தில் பாதி நேரம், தாங்கள் இருக்க விரும்பாத இடங்களில், செய்ய விரும்பாத வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஏன்? வேலை செய்ய விரும்பாதது மனிதர்களின் இயல்பு என்பது ஒரு காரணமாக இருக்கலாம். தொழில்துறை முதலாளித்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆடம் ஸ்மித்தின் பார்வையும் இதுதான். மனிதர்கள் இயல்பிலேயே சோம்பேறிகள்; சம்பளத்துக்காக மட்டுமே வேலைபார்ப்பவர்கள் என்று கருதியவர் அவர். “எவ்வளவு முடியுமோ அவ்வளவு சவுகரியமாக வாழ்வதுதான் ஒவ்வொரு மனிதரின் விருப்பம்” என்று 1776-ல் தான் எழுதிய ‘தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’எனும் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கருத்து மிகப் பெரும் தாக்கம் செலுத்தக் கூடிய ஒன்று. ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், அறிவியல்பூர்வமான நிர்வாக இயக்கத்தை வடிவமைக்க இது உதவியது. இதுதான் திறன் மற்றும் தொடர்ந்த கவனம் ஆகியவற்றின் தேவையைக் குறைத்த தயாரிப்பு முறைகளை உருவாக்கியது.
இந்த விஷயங்கள், இன்றைக்குத் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் பிற பணியிடங்களில் வேறுபடலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நிலைமை இதுதான்: செய்தே ஆக வேண்டும் என்ற நிலையிலேயே நாம் வேலையைச் செய்கிறோம் எனும் அனுமானத்திலேயே வேலை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கால் சென்டரில் பணிபுரியும் ஊழியர் தனக்கு வந்த அழைப்பை எத்தனை விரைவாக முடிக்கிறார் என்று கண்காணிக்கப்படுகிறது. அலுவலக ஊழியரின் உற்பத்தித் திறனை உறுதிசெய்யும் வகையில் அவரது பணித்திறன் கண்காணிக்கப்படுகிறது.
மோசமான அணுகுமுறை
இது ஒருவகையில் மோசமான மற்றும் எதிர்மறையான அணுகுமுறை என்றே நான் நினைக்கிறேன். இது நம் வேலையில் நம்மை அதிருப்தியடைய வைப்பதுடன், இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளக்கூடியது. நமக்காகவும், நம்மைப் பணியமர்த்தியிருப்பவர்களுக்காகவும், இந்த விஷயங்கள் மாற வேண்டும்.
சம்பளத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட சோம்பேறிகள் என்று ஆடம் ஸ்மித் குறிப்பிட்டிருக்கும் தொழிலாளர்களுடன் தங்களை ஒப்பிடுவதற்குப் பெரும்பாலானவர்கள் விரும்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நாம் நமது சம்பளத்தில் கவனம் செலுத்துகிறோம் என்பதும் சம்பளம் இல்லாமல் நாம் வேலைபார்க்கப் போவதில்லை என்பதும் உண்மைதான். ஆனால், பணத்தை விடவும் பல விஷயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோம். சிறிதளவாவது நம்மை மேன்மைப்படுத்தக்கூடிய, அர்த்தமுள்ள வேலைகளை நாம் விரும்புகிறோம்.
குறைந்த சம்பளம் கிடைத்தால்கூட மேன்மையான வேலைகளைச் செய்ய விரும்புகிறவர்களும் இருக்கிறார்கள்! அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களை விட்டுவிட்டு அடிமட்ட மக்களுக்காகப் பணிசெய்யச் செல்லும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். ஏழை மக்களுக்குச் சேவை செய்வதற்காக வசதியான இடங்களை விட்டுச் செல்லும் மருத்துவர்கள் உண்டு. அரசின் பொருளாதார ஆலோசகராக வேலை பார்க்க வாஷிங்டனுக்குக் குடிபெயரும் வால் ஸ்ட்ரீட் பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், சலிப்பான ஒரே மாதிரியான பணிகளின் விஷயத்தில் முற்றிலும் எதிர்மாறான பக்கமும் உண்டு. வேலை திருப்தி எனும் விஷயத்தில் நாம் இழப்பதைத்தான், வேலைத் திறன் எனும் விஷயத்தில் பலனாகப் பெறுகிறோமா?
இதுவும்கூட ஆடம் ஸ்மித்தின் கருத்துதான். குண்டூசித் தொழிற்சாலையை மேற்கோள் காட்டி, தொழிலாளர்களுக்கு இடையிலான வேறுபாட்டின் தன்மையைப் புகழ்ந்து அவர் சொன்ன புகழ்பெற்ற உதாரணம் இது: “ஒருவர் கம்பியை இழுக்கிறார். மற்றவர் அதை நேராக்குகிறார். மூன்றாம் நபர் அதைத் துண்டாக்குகிறார். நான்காமவர் அதைக் கூராக்குகிறார். ஐந்தாவது நபர் குண்டூசியின் தலைப் பகுதியைப் பொருத்தும் பணியைச் செய்கிறார்.” நமது பணியனுபவம் மோசமானதாக இருக்கலாம். ஆனால், நாம் - அல்லது குறைந்தபட்சம் நமது முதலாளிகள் - பணக்காரர்களாக முடியும்.
பணியின் அர்த்தம்
ஆனால், 200 ஆண்டுகளுக்குப் பின்னரும், இந்த ‘பணித் திருப்தி - திறன்’ தொடர்பான பரிமாற்றம் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றே சொல்லலாம். சொல்லப்போனால் இதற்கு எதிர்மறையாக நிறைய சான்றுகள் இருக்கின்றன என்பதே உண்மை. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெஃப்ரி பெஃபெர், வெவ்வேறு துறைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 1998-ல் எழுதிய ‘தி ஹியூமன் ஈக்குவேஷன்’ எனும் நூலில், தொழிலாளர்களை ஒரு இயந்திரத்தின் பற்சக்கரங்களைப் போல நடத்தும் பணியிடங்களை விடவும், சவாலான, அர்த்தமுள்ள வேலையை வழங்கும் பணியிடங்கள் அதிக லாபம் ஈட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மனித வளத்தில் அதிக கவனம் செலுத்திய நிறுவனங்கள், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்காவது தாக்குப்பிடிக்கும் விஷயத்தில், மற்ற நிறுவனங்களைவிட 20% அதிகமாக வெற்றிகரமாக இயங்கின. இரும்பு உருக்காலைகளில், நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் இதேபோன்ற முடிவுகள் தெரியவந்தன.
தங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்யும்போது ஊழியர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அவர்களது வேலையும் கூடவே உற்பத்தியும் நிறுவனத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. ஆனால், இது ஒரு ஆழமான கேள்வியை எழுப்புகிறது. ஆனால், பணியிடங்களில் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சம்பள விஷயத்தில் கெடுபிடி போன்றவை பணியாளர்களின் மோசமான செயல்திறனுக்கு வித்திட்டிருக்கின்றன. சரி, இதைப் பொறுத்துக்கொள்வதையும், இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதையும் நாம் ஏன் தொடர்ந்தோம்?
இதற்கான பதில் என்று நான் நினைப்பது: ஆடம் ஸ்மித்தின் கருத்தாக்கங்கள் ஒருவகையில் தன்னிறைவு தரும் தீர்க்கதரிசனமாகிவிட்டன. மனிதர்களைப் பற்றிய அவரது தெளிவற்ற அனுமானங்கள் உண்மையாகிவிட்ட பணி உலகத்தை அக்கருத்துகள் எழுச்சியடைய வைத்தன. மனிதர்களின் இயல்பைப் பற்றிய உண்மை நிலையைக் கண்டறிவதற்குப் பதிலாக, மனிதர்களைப் பற்றிய கருத்துகளை உருவாக்கிவிட்டதை ஆடம் ஸ்மித்தும் அவரது வழித்தோன்றல்களும் உணரவில்லை.
பணம் பிரதானம் அல்ல
உண்மை என்னவென்றால், இயல்பிலேயே நாம் பணத்துக்காக அலைபவர்கள் அல்ல. வேன் ஒன்றில் சோஃபாவை ஏற்றுவதற்காகக் கொஞ்சம் பணம் தருவதாகச் சொன்னால், அதைச் செய்ய பலர் முன்வருவதில்லை என்றும், உதவி என்று கேட்கும்பட்சத்தில் அதைச் செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், பணம் வாங்கிக்கொண்டு அந்த உதவியைச் செய்வது என்பது சக மனிதருக்கு உதவுவது என்பதாக இல்லாமல், ஒரு வணிகப் பரிமாற்றமாக ஆகிவிடுகிறது. அதேபோல், பணம் தருவதாகக் கூறினாலும் யாரும் தங்கள் குடியிருப்புகளின் அருகில் உள்ள காலியிடத்தில் அணுக் கழிவுகளை வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏனெனில், பணம் கொடுப்பது அவர்களது சமூகக் கடமை உணர்வை மலினப்படுத்திவிடுகிறது. வேனில் சோஃபாவை ஏற்றுவதற்காகப் பணம் கொடுப்பது வழக்கமாகிவிட்டால், உதவி செய்யும் எண்ணம் என்பது இல்லாமலே போய்விடும்.
ஒவ்வொருவருக்கும் அவர்கள் பார்க்கும் வேலைக்காகப் போதுமான சன்மானம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் அமெரிக்கா முழுவதும் குறைந்தபட்ச ஊதியத்தில் உயர்வை ஏற்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் உண்மையான சமூகப் பணியைப் பிரதிபலித்தன. எனினும், உழைக்கும் மக்களுக்கான இதுபோன்ற வெற்றிகளைத் தக்கவைப்பதைப் பொறுத்தவரை, அவர்கள் தவிர்க்கும் விஷயங்களை விடவும், பின்பற்ற விரும்பும் விஷயங்களில் செலுத்தும் கவனத்தின் நோக்கத்தை இழந்துவிடக் கூடாது.
ஆனால், அதை எப்படிச் செய்வது? ஊழியர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது தொடர்பாக அவர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் செய்யலாம். அவர்கள் கற்றுக்கொள்வதற்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வாய்ப்புகளை வழங்குவதை உறுதிசெய்வதன் மூலம் அதைச் செய்யலாம். பணிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு அவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலமும், அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பதன் மூலமும் அதைச் செய்ய முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு ஊழியரின் பணி மற்றவர்களின் வாழ்வில் சிறிதேனும் நன்மைபயப்பதாக அமைவதை உறுதிசெய்யும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். தொலைபேசி மூலம் விற்பனை செய்பவர், தகுதியான ஒரு மாணவர் சிறந்த பள்ளியில் சேர்வதற்கு வழிவகுக்கிறார். வேலைக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படுவது ஒரு முக்கியமான சமூக நன்மை. ஆனால், அதற்கேற்ற வேலையைச் செய்வதும் அதே அளவுக்கு முக்கியமான விஷயம்!
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
© ‘தி நியூயார்க் டைம்ஸ்’