சிறப்புக் கட்டுரைகள்

மனிதனைப் பலியிடும் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம், பச்சைமலை அடிவாரத்தில் உள்ள தளுகை மங்கப்பட்டியில் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. முன்பு மரத்தடியில் அமைந்திருந்த இந்தக் கோயிலுக்குத் தற்போது சிறிய கூரை வேய்ந்து நிழல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மேற்கூரை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது; கல்தூண்களால் நிறுத்தப்பட்டுள்ள அடிப் பகுதியானது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. இதை அந்தத் தூண்களில் உள்ள ஓவியக் குறியீடுகள் மூலம் அறிய முடிகிறது. இந்தப் பழமையான தூண்கள் நிறுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆனாலும் ஒளி மங்காமல் பளபளப்பாகக் காட்சியளிக்கின்றன. ஜோதிடர் மயில் பொன்னுசாமியுடன் இணைந்து கள ஆய்வில் இறங்கினேன்.

பலியிடல் ஓவியங்கள்

இந்தக் கோயிலில், பாறைகளில் செதுக்கப்பட்ட எட்டுத் தூண்கள் உள்ளன; வலப்புறம் நான்கு, இடப்புறம் நான்கு. இடப்புறம் உள்ள முதல் தூணில் மேலும், கீழுமாக இரண்டு பாறை வரைவுகள் காணப்படுகின்றன. மேலே உள்ள ஓவியத்தில் ஒரு மனிதனின் கை, கால்கள் கட்டப்பட்டு, அந்த மனிதனை ஊசி போன்ற கூர்மையான தூணில் செறுகி (கழு மரத்தில் ஏற்றி) பலியிடுவது போன்று வரையப்பட்டுள்ளது. கீழே உள்ள ஓவியத்தில் ஆட்டின் தலையை ஒரு ஊசி போன்ற கூர்மையான தூணில் செறுகி பலிகொடுப்பது போன்ற ஓவியம் காணப்படுகிறது. இரண்டு ஓவியங்களும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளதால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

மெரியா பலித்தூண்

இந்த ஓவியங்களிலுள்ள மனிதன் மற்றும் ஆட்டைப் பலியிடும் முறைக்கு மெரியா பலியிடல் என்று பெயர். தற்போது தமிழகத்தில் இந்தப் பலியிடல் முறை வழக்கத்தில் இல்லை. ஒரிசாவில் உள்ள கோண்டு பழங்குடியினர் மெரியா தூணில் ஆட்களைப் பலியிடும் பழக்கம் 1852 வரை இருந்தது. மெரியா பலியிடலுக்குப் பயன்படுத்தப்பட்ட பலித்தூண் ஒன்று சென்னை அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வூரில் வசிக்கும் பழங்குடியினர், ஒரிசாவில் உள்ள கோண்டு பழங்குடியினரைப் போன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தம் வயல்களில் பயிர்கள் வளமுடன் விளைவதற்குத் தம் குலப் பெண் தெய்வத்துக்கு நரபலி கொடுத்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளதையும் இந்தப் பாறை ஓவியங்கள் தெரிவிக்கின்றன.

- கு.கவிமணி, உதவிப் பேராசிரியர், வண்ணக்கலைத் துறை, சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி.

தொடர்புக்கு: kavimaniku@gmail.com

SCROLL FOR NEXT