சிறப்புக் கட்டுரைகள்

ஜே.பி. எனும் மக்கள் தலைவர்

செல்வ புவியரசன்

அரசியல் அறிஞராக ஜே.பி.க்கு என்றென்றைக்கும் தனிச்சிறப்புமிக்க ஓர் இடம் உண்டு.

வினோபா பாவே பூமிதான இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் அவர். நிலக்கொடை மட்டுமல்லாது உழைப்புக்கொடை, அறிவுக்கொடை, வருவாய்க் கொடை, வாழ்க்கைக்கொடை என்று நிறைவுபெறாது நீளும் நீண்டதொரு பட்டியலை உருவாக்கி அளித்தார். ஜீவன்தான் என்கிற வாழ்க்கைக் கொடையின்கீழ் முதலாவது நபராகத் தன்னைத்தானே கொடையளித்துக்கொண்டவர் ஜெயப்ரகாஷ் நாராயண்.

மாணவராக 1920-ல் ஜெயப்ரகாஷ் நாராயண் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தில் மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைத்தார். காந்தியின் அழைப்பை ஏற்றுக் கல்லூரியிலிருந்து விலகியவர் ஜே.பி. ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் படிப்பைத் தொடர்வதற்காக சுதேசிக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், அவற்றில் கலைத் துறை சார்ந்த பாடங்கள் மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்டன. ஜே.பி. விஞ்ஞானத்தை விருப்பப் பாடமாகப் படித்தவர். எனவே, அவரது படிப்பு பாதியிலேயே நின்றது.

கொள்கை முடிவு

பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்கக் கூடாது என்ற கொள்கை முடிவால் அமெரிக்காவுக்குச் சென்று தனது படிப்பைத் தொடர்ந்தார் ஜெயப்ரகாஷ். படிக்கும்போது பழத் தோட்டங்களில் கூலியாளாகவும் தொழிற்சாலைகளில் மெக்கானிகாகவும் பணியாற்றினார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் ஜெயப்ரகாஷின் படிப்பு ஆர்வம் முற்றிலும் மாறிவிட்டது. விஞ்ஞானத்துக்குப் பதிலாக சமூகவியல் துறையை அவர் மிகவும் விரும்ப ஆரம்பித்தார். தாயாரின் உடல்நலம் மோசமானதன் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு நாடு திரும்பினார்.

அறிஞராக அமெரிக்காவில் ஜே.பி. பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்திலேயே உலகின் முக்கிய அரசியல் சிந்தனையாளர்களின் புத்தகங்களையெல்லாம் படித்துமுடித்திருந்தார். மார்க்ஸியத்தின் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த ஜே.பி. இந்தியாவுக்குத் திரும்பிவந்தபோது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் காந்தியை முதலாளிகளின் அடிவருடி என வர்ணித்ததையும் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கின்கீழ் கட்டுப்பட்டுக் கிடந்ததையும் கண்டு அவர்களிடமிருந்து விலகினார்.

சமதர்மப் பிரச்சாரம்

உலகில் சமதர்மம் மலர்ந்த இடங்களில் எல்லாம் அந்த அரசியல் மாற்றங்களை தொழிற்சங்க இயக்கம் தலைமையேற்று நடத்தியதை அறிந்திருந்தார் ஜே.பி. எனவே, இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் பலப்படாமல் சமதர்மம் சாத்தியமில்லை என்று உணர்ந்தார். எனவே, தொழிலாளர்களிடத்தில் சமதர்மப் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிவு செய்தார். இந்தக் காலத்தில் அவர் எழுதிய ‘ஒய் சோஷலிசம்?’ என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது.

தலைவராக காந்தியின் ஒத்துழையாமை, சட்ட மறுப்பு ஆகிய போராட்ட முறைகளில் ஜே.பி.க்கு ஆர்வமோ, உடன்பாடோ இருக்கவில்லை. ஆனால், அரசியல் சுதந்திரத்துக்கான போராட்டம் பொருளாதாரச் சுதந்திரத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். ஏகாதிபத்தியத்துக்கு மாற்றாக முதலாளித்துவம் இருக்கக் கூடாது என்று அறிவித்தார். அதனால், தொழிலாளர்களைக் காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கீழ் ஒன்றுதிரட்டும் முயற்சியில் இறங்கினார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை 1934-ல் தொடங்கினார். காந்தியின் தலைமையில் இக்கட்சி விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டது. அதே நேரத்தில், காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தது. ஜே.பி.யின் தொடர்ந்த முயற்சியின் காரணமாகவே ஆங்கில அரசு தொழிலாளர் உரிமைச் சட்டங்களைக் கொண்டுவந்தது.

புரட்சியாளராக இரண்டாவது உலகப் போர் நடந்தபோது ஆங்கில அரசு இந்திய வீரர்களைப் போரில் ஈடுபடுத்தியது. அப்போது இந்திய விடுதலைப் போராட்டம்தான் முதல் கடமை, இந்தியா விடுதலை அடைந்த பிறகே, உலகப் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று பேசினார் ஜே.பி. எனவே, அவரைச் சிறையில் அடைத்துச் சித்தரவதைக்கு ஆளாக்கியது ஆங்கில அரசு. சிறையில் ஜே.பி. அனுபவித்த சித்தரவதைகள் இனி மேலும் அறவழியில்தான் போராட வேண்டுமா, தேவையே இல்லை என்ற முடிவுக்கு அவரைத் தள்ளியது.

மதவெறிக்குப் பலி

ஒத்துழையாமை இயக்கத்தின்போது மாணவராகப் போராட்டத்தில் பங்கேற்ற ஜே.பி., சட்ட மறுப்பு இயக்கத்தின்போது தலைவராக உயர்ந்திருந்தார். ஆனால், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது தலைமறைவுப் புரட்சியாளராகச் செயல்பட்டார். இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில், இந்தியாவில் மதப் பிரிவினைவாதம் தலைவிரித்து ஆடுவதைக் கண்டு வேதனை அடைந்தார். மதப் பிரிவினையை எதிர்த்து அவர் பணியாற்றத் தொடங்கினார். இந்தியா விடுதலை அடைந்த அடுத்த ஆண்டிலேயே காந்தி மதவெறிக்குப் பலியானார். இந்தச் சம்பவம் ஜே.பி.யை மிகவும் நிலைகுலையச் செய்துவிட்டது. தனது எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் காந்தியச் செயல்திட்டங்களை நிறைவேற்றுவதிலேயே செலவிட்டார் ஜே.பி. தன்னை முழுவதுமாக சமூகத்துக்கு அர்ப்பணித்தது அப்போது தான்.

காந்திய இயக்கத்தில் அவரது மறுபிரவேசமும் தோல்வியில்தான் முடிந்தது. இருந்தாலும், இந்தக் கட்டத்தில்தான் இந்தியாவில் மட்டுமின்றி உலகளாவிய வகையிலும் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை அவர் தீவிரமாக மேற்கொண்டார்.

1975-ல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது ஜே.பி. அதைக் கடுமையாக எதிர்த்தார். நெருக்கடி நிலையின்போது எழுத்துரிமை, பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை முதலான முக்கிய மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எனவே, ஒரு மக்களாட்சி நாட்டில் நெருக்கடி நிலையை அறிவிப்பது தவறானது எனக் கண்டித்தார்.

நான்கரை மாதங்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்ட ஜே.பி., சிறுநீரகங்கள் பழுதடைந்து மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டார். முழுமையான புரட்சி மார்க்ஸிய அறிவின் துணைகொண்டு காந்திய வழிமுறையை ஆராய்ந்தவர் ஜே.பி. அதைப் போலவே காந்தியக் கண்கொண்டு மார்க்ஸியத்தையும் அணுகியவர். ஆனால், காந்தியைப் பின்பற்றிய காங்கிரஸ், மார்க்ஸைப் பின்பற்றிய பொதுவுடைமை இயக்கம் இரண்டுமே அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தன. ஆனால், இரண்டும் அவரைச் சரியாகவே பயன்படுத்திக்கொண்டன. காங்கிரஸ் கட்சி, ஜே.பி.யின் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டது. பொதுவுடைமை இயக்கம் தடை செய்யப்பட்டபோது அது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டது.

நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் பாரதிய ஜன சங்கத்தினரும் ஜே.பி.யை நன்றாகத்தான் பயன்படுத்திக்கொண்டார்கள். தமது முந்தைய பெயரைத் துறந்துவிட்டு இன்று அவர்கள் சூடிக்கொண்டிருக்கிற ஜனதா என்ற நாமகரணம் ஜே.பி. பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாகத்தான் கிடைத்தது. நெருக்கடி நிலையை எதிர்த்த கட்சிகள் அடுத்துவந்த 1977 தேர்தலில் ஜே.பி.யின் வழிகாட்டுதலின்படி ஜனதா கட்சி என்ற பெயரில் ஒன்றுசேர்ந்து காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தன.

மொத்தத்தில், ஜே.பி. ஒரு அரசியல் தலைவராகத் தோல்வியைத்தான் அடைந்தார். ஆனால் அரசியல் அறிஞராக அவரது இடம் என்றென்றைக்கும் தனிச்சிறப்புடன் விளங்கும். நெருக்கடி நிலையின்போது ஜே.பி. ஒரு முழக்கத்தை அறிவித்தார். அந்த முழக்கம், முழுமையான புரட்சி. அதன் பொருள், போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தன்னளவில் முதலில் மாற வேண்டும் என்பதுதான். அப்போதுதான் புரட்சி முழுமையடையும் என்று அவர் கருதினார். அதன் முதல்படியாக ஊழல் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தினார். ஜே.பி.யின் அரசியல் கொள்கையும் அதுதான். அடிப்படை மாற்றமே அரசியல் மாற்றம். அந்த மாற்றம் தனிமனிதனில் இருந்தே தொடங்குகிறது.

- செல்வ புவியரசன் வழக்கறிஞர், எழுத்தாளர்,

தொடர்புக்கு: selvapuviyarasan@gmail.com

இன்று ஜே.பி. நினைவு நாள்

SCROLL FOR NEXT