சிறப்புக் கட்டுரைகள்

வானவில்லும் வாழ்க்கையும் இருமுறை வருவதில்லை

செய்திப்பிரிவு

சின்னத்திரை நட்சத்திரம் சித்ராவின் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபலமாக இருந்தாலும், உளவியல் படித்திருந்தாலும்கூட வாழ்க்கையின் அழுத்தங்களை அவரால் ஏன் எதிர்கொள்ள முடியாமல் போனது என்பது கேள்விக்குரிய விஷயம். வாழ்க்கையின் மதிப்பைப் பிரபலங்கள், சாமானியர்கள் வரை யாருமே முழுமையாக உணர்வதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. சமீபத்தில் தென்மாவட்டம் ஒன்றில், ரயிலில் பயணித்த இளம்பெண் தவறி விழுந்து மரணம் என்று இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவானது. ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அந்தப் பெண் டிஎன்பிஎஸ்சி ‘குரூப் 4’ தேர்வு எழுதித் தேர்வானவர். சென்னையில் நடந்த கலந்தாய்வில் சுகாதாரத் துறையில் அவருக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணி உத்தரவைப் பெற்றுக்கொண்டு தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாகத் தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தவர் அவர்.

பெற்றோர் எச்சரித்தும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் ரயிலில் கதவருகில் நின்றுகொண்டு செல்பேசியில் பேசிக்கொண்டே வந்திருக்கிறார் அந்தப் பெண். ஒருகட்டத்தில், காற்றின் வேகம் அதிகரிக்கையில் பெற்றோர் கண்ணெதிரிலேயே அந்தப் பெண் ரயிலிலிருந்து தடுமாறிக் கீழே விழுகிறாள். சில நொடிகளில் எல்லாம் முடிந்துபோகிறது. லட்சக்கணக்கானோர் எழுதிய போட்டித் தேர்வில் வெற்றிபெற்ற அந்தப் பெண்ணின் கனவு மட்டுமல்ல; அந்தப் பெண்ணைக் குறித்த பெற்றோர்களின் கனவும் அந்த ஒரே நிமிடத்தில் நொறுங்கிப்போய்விட்டன. மகிழ்ச்சியான ஒரு ரயில் பயணம், ஒரு ஏழைக் குடும்பத்தின் நம்பிக்கைப் பயணம், சிறு கவனக்குறைவால் முடிந்துபோனது. முழுக்க முழுக்க அந்தப் பெண்ணின் கவனக்குறைவு மட்டுமே அதற்குக் காரணம்.

உயிரைப் பறிக்கும் சாகசங்கள்

சில தினங்களுக்கு முன் நடந்த இன்னொரு சம்பவம். திருநெல்வேலி அருகில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன், செவிலியராகப் பணிபுரியும் தன் தாயாரைத் தொலைபேசியில் அழைத்து அவருக்கு ஒரு ‘சர்ப்ரைஸ் போட்டோ’ அனுப்பப்போகிறேன் என்கிறான். தாயாரும் பையன் ஏதோ சாதனை செய்யப்போகிறான் என்று மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொள்கிறார். சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்கிறது. அப்புறம்தான் தெரிந்தது, நின்றுகொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏறி, செல்ஃபி எடுக்க முயன்ற அந்த மாணவன் உயர்மின் அழுத்தக் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டான் என்பது. தாயுடன் பேசியபடியே மரணத்தைத் தழுவியிருக்கிறான். சாகசம் என்று அவன் நினைத்த செல்ஃபி போதையே அந்த மாணவனின் அகால மரணத்துக்குக் காரணமாகிவிட்டது. ரயில் பெட்டியின் மீது ஏறுவது தடைசெய்யப்பட்ட ஒன்று என்பதும், அதை மீறுபவர்கள் உயிரை இழக்க வேண்டியிருக்கும் என்பதும் எப்படி அவனுக்குத் தெரியாமல் போனது?

இதேபோல், காவிரிப் படுகை மாவட்டம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த இரு இளைஞர்கள், சரக்கு வண்டியில் அடிபட்டு மரணமடைந்தார்கள். விசாரணையில் அவர்கள் இருவரும் நள்ளிரவு நேரத்தில் மிதமிஞ்சிய நிலையில் மது அருந்தியது தெரியவந்தது. சரக்கு வண்டியின் லோகோ பைலட் தொடர்ந்து ஒலி எழுப்பியிருக்கிறார். அவரால் வேகத்தைக் கட்டுப்படுத்தி வண்டியை நிறுத்த முடியாத சூழல். இரண்டு இளைஞர்களும் எழுந்து நடக்க முயன்றும், முடியாமல் அங்கேயே விழுந்து கிடந்தனர். விபத்து நடந்த இடத்தில் பயன்படுத்திய கஞ்சாப் பொட்டலங்களும், பிரிக்காத ஓரிரு கஞ்சாப் பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன. பிரேத விசாரணையிலும் கஞ்சா போதையே அவர்களை எழ முடியாமல் செய்துள்ளது என்று தெரியவந்தது.

இந்த விபத்துகள் அனைத்திலும் இறந்தவர்கள் எல்லோருமே 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். சாதிக்க வேண்டிய இந்த வாழ்க்கையை, நம்பிக்கையோடு காத்திருக்கும் பெற்றோரின் கனவை, சாகசம் எனும் பெயரிலும் கவனக் குறைவாகவும் போதைக்கு அடிமையாகியும் அவர்கள் இழந்துவிட்டனர்.

விரக்தியின் வெளிப்பாடு

நாகர்கோவிலில் உச்சபட்சக் கொடுமையான நிகழ்வு ஒன்று நடந்தது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நேர்த்தியாக உடை அணிந்த கனவான் தோற்றம் கொண்ட ஓர் இளைஞர், ரயிலில் தண்டவாளத்தில் தலைவைத்துத் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் கிடைத்தது. விசாரணையில், அந்த இளைஞர் கணினித் துறையில் இளநிலைப் பொறியாளர் என்பதும், வேலை கிடைக்காத விரக்தியில் இருந்தவர் என்பதும் தெரியவந்தது. வேலை கிடைத்தால் உயிரையே காணிக்கையாக்குகிறேன் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார். மும்பையில் அவருக்கு நல்ல வேலை கிடைத்துவிடுகிறது. பெற்றோரிடம் அதை மகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில், இறைவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தண்டவாளத்தில் தலை வைத்துத் தன் வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டாராம்... இப்படியுமா வேண்டுதல் இருக்க முடியும்?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுடைய உடல்நலன் மட்டுமன்றி மனநலன், நட்பு வட்டம், ஆர்வம், விரக்தி போன்ற அனைத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், சிலவிதமான இழப்புகளை நம்மால் ஈடு செய்யவே இயலாமல் போய்விடும். எனவே, அதை எப்படிச் சொல்வது என யோசிக்காமல், தவறான பழக்கவழக்கங்களையும் முறையற்ற செயல்களையும் கண்டிப்பாக எடுத்துக்கூறி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு தேவை

தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 2,500 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துபோகும் துயரச் சம்பவம் நடந்துவருகிறது. பெரும்பாலான மரணம் தற்கொலை நிகழ்வாகவே உள்ளது. காவல் துறையினருடன் இணைந்து தன்னார்வ நிறுவனங்களும், சமூகநல அமைப்புகளும், ரயில் விபத்து குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும். தண்டவாளத்துக்கு முன்பு செல்ஃபி எடுப்பது, ரயில் மீது ஏறி செல்ஃபி எடுப்பது, ரயில் பெட்டிக் கதவருகில் செல்பேசியில் பேசிக்கொண்டே பயணிப்பது, தண்டவாளத்தை அத்துமீறிக் கடப்பது, தண்டவாளத்தில் மது அருந்துவது போன்ற செயல்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

ரயில் பயணம் என்பது மிக இனிமையானது, வசதியானது, செலவு குறைவானதும்கூட. ‘உயிரே’ படத்தில், மலைப்பாதை ரயில் பயணத்தை ஷாருக்கான் ஆடிப்பாடி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார். மிகவும் திட்டமிடப்பட்டுப் பாதுகாப்புடன் படம்பிடிக்கப்பட்ட காட்சி அது. அந்தப் பாடலில் ‘ஒரு வானவில் இருமுறை வருவதில்லை, அது வந்துபோன ஒரு சுவடும் இல்லை’ என்று எழுதியிருப்பார் வைரமுத்து. வானவில் மட்டுமல்ல; இந்த வாழ்க்கையும் இருமுறை வருவதில்லை. வாழ்க்கையை மகிழ்ச்சியாக மட்டுமின்றிப் பாதுகாப்பாகவும் கொண்டாடுங்கள்.

- த.செந்தில்குமார், காவல் கண்காணிப்பாளர், திருச்சி ரயில்வே. தொடர்புக்கு: tsenthilkumarsp@gmail.com

SCROLL FOR NEXT