கடந்த கால் நூற்றாண்டாக, மாற்றுக் கருத்துக்களைச் சகித்துக்கொள்ளும் மனப்பான்மை இந்தியர்களிடம் குறைந்துகொண்டே வருவதை நீங்கள் கவனித்தீர்களா? முறையான பயிற்சி பெற்ற வரலாற்றாசிரியர்களிடம் இன்னமும் அத்தகைய ஆரோக்கியமான விவாதக் களம் உள்ளது. ஆனால், பரந்த மனப்பான்மை படைத்த இந்தியர்கள் எங்கே போனார்கள்?
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கண்ட நாட்டில் பரந்த மனப்பான்மை இன்னமும் விரிவடையும் என நம்பினேன். ஆனால், அப்படிப்பட்டவர்கள் வெகு சிலரே இன்று உள்ளனர் என்பது வருத்தம் அளிக்கிறது. விமர்சனப் பார்வை அருகிவருகிறது. சுதந்திரமாகச் சிந்தித்து, உலகைக் கேள்வி கேட்க இளைஞர்களைக் கல்வி தூண்டவில்லை. அவர்களுக்குச் சொல்லப்படும் விஷயங்களை அவர்கள் குறுக்கு விசாரணை செய்வதே இல்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது.
அதிலும் சமீபகாலமாக, எதற்கெடுத்தாலும் இணையத்தைத் துழாவி அதில் கிடைக்கும் தகவல்களை அப்படியே வழிமொழியும் வழக்கம் உருவாகியிருக்கிறதல்லவா?
ஆமாம்! அதற்குக் காரணம், அறிஞர்களின் அற்புதமான கட்டுரைகள் முதல் அபத்தங்கள்வரை இணையத்தில் அனைத்தும் கொட்டிக்கிடக்கின்றன.
இணையத்தில் தர நிர்ணயம் இல்லையே!
இணையத்தில் எக்கச்சக்கமான தகவல்கள் குவிகின்றன. எதை நம்புவது எதை நிராகரிப்பது என்பதை யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. சிக்கல்தான். அத்தகைய விழிப்புணர்வை இளைஞர்களுக்கு ஊட்ட அறிவார்த்தமாகக் கற்பிக்கும் கல்விக்கூடங்கள் தேவை.
இணையத்தில் எதை வேண்டுமானாலும் பதிவேற்றலாமே. நீங்கள் செல்வாக்கு படைத்தவரானால் எதையும் மாற்றலாம், மறைக்காமல்! வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் இந்திய வரலாற்று ஆய்வுகளில் இப்படி நடப்பது சகஜமாகிவிட்டதல்லவா?
அரசியல் விவாதமோ அல்லது பொதுவான விஷயமோ எதுவாக இருந்தாலும் இன்று சமூக வலைதளங்கள்தான் கோடிட்டுக் காட்டுகின்றன. சமூக வலைதளங்களும், இணையமும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும்தான் இன்றைய பொதுப்புத்தியை உருவாக்குகின்றன. அதிலும் தரமான புத்தக வாசிப்பை மறந்துபோன இளைய சமூகம் இவற்றைக் கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கிவிட்டது.
ஆனால், வரலாறு என்பது முறைப்படுத்தப்பட்ட ஆய்வு என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். ஒரு இயற்பியல் அறிஞரின் கோட்பாட்டை விளக்குவதற்கு முன்னால் எத்தகைய எச்சரிக்கை உணர்வு இருக்குமோ அதே போன்றுதான் வரலாற்றைப் பற்றிப் பேசும்போதும் இருக்க வேண்டும். ஆனால், ஒரு வரலாற்றாசிரியர் முன்வைக்கும் கருத்து தங்களுக்கு ஏற்புடையதாக இல்லாவிடில், உடனடியாக அவரையும் அவருடைய கருத்தையும் அவதூறாகப் பேசும் போக்கு நிலவுகிறது. நான் விமர்சனப் பார்வையை எதிர்க்கவில்லை. ஆனால், கூடுதல் பொறுப்பு வேண்டும் என்கிறேன்.
இதனோடு தொடர்புடைய மற்றொரு சிக்கல் என்னவென்றால், சில வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வைப் புண்படுத்தலாம். ஆகவே, அத்தகைய ஆராய்ச்சிகளைத் தடை செய்ய வேண்டும் எனும் ஆபத்தான போக்கு இன்று அதிகரித்திருக்கிறதல்லவா?
இது ரொம்பவும் ஆபத்துதான். ஏனென்றால், ஒருவருடைய மனம் எப்படிவேண்டுமானாலும் புண்படலாம். இப்படித் தங்கள் இனத்தைப் பாதுகாப்பதாக உரக்கச் சொல்பவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே. மீதம் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்றே தெரியாது. சொல்லப்போனால், தங்களைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொள்ளும் கூட்டத்தைக் கண்டு அவர்கள் பயப்படவே செய்கிறார்கள்.
புத்தகங்களைத் தடை செய்வது இன்றைய சாபக்கேடு. முறையான ஆய்வின் அடிப்படையில் சம்பவங்களை விளக்கும் வரலாற்றுப் புத்தகமாக இருந்தால்கூட யாரேனும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டால் உடனடியாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, புத்தகப் பிரதிகளை எரிப்பது போன்ற சம்பவங்கள் சகஜமாகிவிட்டனவே?
நமக்கு சகிப்புத்தன்மை இருப்பது உண்மையானால், இப்படி ஒருபோதும் செய்ய மாட்டோம். பண்டைய காலத்தில் தங்கள் கருத்துக்களை எதிர்த்தவர்களை நாத்திகர்கள், போலிகள், ஏமாற்றுக்காரர்கள், மக்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்பவர்கள் என வசைபாடிய பதிவுகளைப் பிராமண நூல்களில் காணலாம். இன்று இந்துத்துவ ஆதரவாளர்கள் எங்களைப் போன்ற வரலாற்றாசிரியர்களைப் பார்த்து இதையேதான் சொல்கிறார்கள். போதாததற்கு, எங்களுடைய தனிப்பட்ட கொள்கை என்னவென்றே தெரியாமல் ‘மார்க்சியவாதிகள்’ எனவும் அழைக்கிறார்கள். இத்தகைய சுடுசொற்கள் அன்றைய பவுத்தர்களையும், சமணர்களையும் புண்படுத்தினாலும் அன்று விஷ்ணு புராணத்தை அவர்கள் யாரும் எரிக்கவில்லை என்பதை நாம் மனதில் பதிந்துகொள்ள வேண்டும்.
நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான வேறுபாட்டை நீங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறீர்கள். ஒரு வரலாற்றாசிரியருக்குச் சமயச் சார்புநிலை இருக்கலாம். ஆனால், வரலாற்று ஆய்வில் அதற்குக் கடுகளவும் இடமில்லை அல்லவா?
ஒரு வரலாற்றாசிரியரின் தனிப்பட்ட சமயச் சார்பும், எதிர்ப்பும் வரலாற்று விளக்கங்களில் ஓரளவேனும் தாக்கம் ஏற்படுத்தவே செய்யும். ஆனால், எப்போதுமே விழிப்புநிலையில் விமர்சனப் பார்வையோடு அதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
அதிகார நெடி வீசும் இக்காலகட்டத்தில் உங்களுடைய வரலாற்று அனுபவங்களும் ஞானமும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிகப் பெரிய உந்துசக்தி.
கண்மூடித்தனமான சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே மேலாதிக்கம் செலுத்துவார்கள். நான் வரலாற்றுப் பிரச்சினை களைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்ல… அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துத்தான். கேள்வி எழுப்புதலும் விவாதமும் காலந்தோறும் தொடர வேண்டும்.
- முற்றும்
தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா, © ஃப்ரண்ட்லைன்