இப்பல்லாம் ஊர்க்கிணற விட்டா வேற வழி இல்ல. கிணத்துத் தூர்ல கிடக்குத தண்ணிய அம்மா, வாளியை வெச்சி மூச்சிமூச்சின்னு இறைப்பாவ. பெரியக்காவும் சின்னக்காவும் ரெட்டக்கொடம் போட்டுத் தண்ணி எடுப்பாக. ‘எல்லாரும் சந்தைக்குப் போறாங்கன்னு நரியும் போச்சாம்’னு பழமொழி சொல்வாங்களே, அதமாரி நானும் குட்டியோண்டு பிளாஸ்டிக் கொடத்தத் தூக்கிட்டு ஓடுவேன்.
தண்ணி ஒண்ணுதான். ஆனா, அடுப்பங்கரையில ஊத்துனா குடிதண்ணி. சிமெண்ட் தொட்டில ஊத்துனா புழங்குற தண்ணி. புழங்குறதுன்னா குளிக்கிறது, துவைக்கிறதுன்னு நினைச்சிறாதீங்க. அதுக்கு இறவைக்குத் (பாசனக் கிணறு) தான் போயாகணும். டீசல் கேனோட யாராவது நடந்துபோனா, தகவல் தீயாப் பரவிரும். கங்காணி கிணத்துல மோட்டாரு போடப்போறாங்களாம். நீராவிக் கிணத்துல தண்ணி பாய்ச்சப் போறாங்களாம்னுட்டு.
முன்னக்கெட்டிப் போகணும்
துணி சோப்பும், வாசன சோப்பும் வாங்கிட்டு ஓடுவோம். எங்கள மாரி ஒரு டஜன் குடும்பம் வைக்கப் போர் மாரி துணிமணியை மூட்ட கட்டிக்கிட்டு ஓட்டமும் நடையுமா ஊர்வலம் போவும். முன்னக்கெட்டிப் போனாத்தான் தொவைக்கதுக்குக் கல்லு கிடைக்கும்?
சின்னப் பயலுக குளிச்சிக்கிட்டு இருக்கும்போது தலைக்கு மேல பெரியவங்க துணியை அலசிக்கிட்டு இருப்பாங்க. அதெல்லாம் கண்டுக்க மாட்டோம். பச்சப்புள்ளைக இருக்கிற வீட்டுக்காரங்க பாயையும் பீத்துணியையும் அலச வருவாங்க பாருங்க… அப்ப மட்டும்தான் தலைய தூர எடுப்போம். அடுத்து, என்னைக்கு மோட்டார் போடுறாங்களோன்னு பிள்ளைங்க போட்டுருக்கிற சின்ன ஜட்டியைக்கூட அம்மைமாரு உருவித் தொவைச்சிடுவாங்க. துவட்டக் கூடத் துணியிருக்காது. உடம்பெல்லாம் பொட்டுப் பொட்டாத் தண்ணி நிக்க, குளிருல பல்லெல்லாம் டகடகன்னு அடிக்க, வெயில்ல குத்த வெச்சிருப்போம்.
சப்பத்தண்ணிக் கிணறு
அதெல்லாம் பழங்காலம். தாமிரபரணி (கூட்டுக் குடிநீர்த் திட்ட) தண்ணி வந்தாலும் வந்துச்சி... ஊர் ஜனத்துக்கெல்லாம் பவுசு தாங்கல. ‘குத்தாலத்துத் தண்ணி மாரியே இனிக்குல்லா?’ ‘சோறு பிச்சிப்பூவா இருக்குப்பா’, ‘பருப்பு பஞ்சா வெந்திடுச்சிடே’ன்னு பெருமைப்பட்டாங்க. பாட்டன், பூட்டன் உண்டாக்குன ஊர்க் கிணத்துக்கு ‘சப்பத்தண்ணிக் கிணறு’ன்னு பேருவுட்டு, அசிங்கப்படுத்துனாங்க. இறைக்காத கிணறு என்னவா மாறும்னு சொல்லவா வேணும்?
ஒவ்வொரு நாளும் மிஞ்சின ஆத்துத் தண்ணியத் தலைக்கு ஊத்தி, அருவியிலயே குளிச்ச மாரி இன்பப்பட்டாங்க. அப்புறம் என்ன? வீட்டுக்கு அஞ்சு குடம்னு இருந்த விதியத் தளர்த்தி, தலைக்கட்டுக்கு அஞ்சு குடம்னு மாத்திட்டோம். குளிக்கிறதும் அதுலதான், துவைக்கிறதும் அதுலதான். வேகம் பத்தலைன்னு தண்ணிய நிப்பாட்டுற திருகையும் கழட்டி வீசிட்டோம்.
காட்டு வேலைக்குப் போற பொம்பளைகளே உப்புத்தண்ணி தலைமுடிக்கு ஆகாதுன்னு, வீட்டுக்கு வந்து குளிக்கிற அளவுக்கு நெலம தலகீழாயிடுச்சி. ‘ஏலா! நீ குளிக்கதுக்கும் தொவைக்கதுக்குமா முக்கூடல் ஆத்துக்குள்ளக் கிணறு தோண்டி, 30 மைலு தூரத்துக்கு சர்க்கார் தண்ணி கொண்டாருது?’ன்னு கேட்ட பெரிசுங்ககூட, இப்ப ஆத்துத் தண்ணியிலதான் குளிக்குதுக. பிறகெப்படித் தண்ணி பத்தும்? சப்பத்தண்ணிக்குன்னு தனியா ரெண்டு போர் போட்டு, அதே குழாய் வழியாவிட்டாங்க.
யாருக்கும் தெரியாதுலேய்
ஒரே குழாய்ல ஒரு தரம் நல்லதண்ணி விடுவாங்க… இன்னொரு தரம் சப்பத்தண்ணி விடுவாங்க. சில நேரம் என்ன தண்ணி வருதுன்னு குழாய்க்கும் தெரியாது, அத பிடிக்கவங்களுக்கும் புரியாது. நம்ம கவுண்டமணி அண்ணே, ஒரே பால்கேன்ல அடியில பிடிச்சா எருமப்பாலு. பிடிச்சி ஊத்திட்டு மறுபடி பிடிச்சா பசும்பாலுன்னு சொல்வாரு பாருங்க, அதே கததான்.
தாமிரபரணி ஆத்துல மண்ணப் பூராம் கொள்ளயடிச்சதால அந்தக் கிணத்துல ஊறுற தண்ணியும் சப்பயாப் போச்சு. ஒழுங்கா ஊர்க் கிணத்துத் தண்ணியக் குடிச்சிக்கிட்டு இருந்த மக்கள, ஆத்துத்தண்ணி ருசியக் காட்டிக் கெடுத்திட்டு, இப்ப அதுவுமில்லாம இதுவுமில்லாம கேன் தண்ணி வாங்கிக் குடிக்க வெச்சிட்டாங்க.
எருமப் பால் கத
இப்படில்லாமா முட்டாத்தனம் பண்ணுவாங்கன்னு நீங்க நினைக்கலாம். விருதுநகர்ல சொந்தக்காரன் யாராச்சும் இருந்தா, தாமிரபரணி தண்ணியோட எந்தெந்தத் தண்ணி கலந்து வருதுன்னு கேளுங்க. மதுரைக்குக் காவிரித் தண்ணி வரப்போதே, அதுக்குன்னு எந்த எடத்துல தனியா மேல்நிலைத் தொட்டி கட்டியிருக்காங்க சொல்லுங்க? உள்ளூர் உப்புத்தண்ணியோட சேந்துதான் வரப்போவுது. இவ்வளவு ஏன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் எருமப் பால் கதயாதான் ஆவப்போவுது.
மதுரை யானைமலை தெரியுமில்லா? அதோட வால்பக்கம் இருக்கிற ஊருக்குப் பேரு யா.கொடிக்குளம். இந்த ஊர்ல சமணர்கள் காலத்துல சுனையா இருந்த ஊத்து, இப்ப குறைஞ்ச ஆழமுள்ள குடிதண்ணிக் கிணறா இருக்கு. அந்த ஊர்க்காரங்க இன்னமும் கிணத்துல இருந்துதான் குடிதண்ணி எடுத்துட்டு இருக்காங்க. சும்மா தேங்காத்தண்ணி மாரி இனிக்கும்.
அந்தத் தண்ணிக் கிணத்த அவங்கள மாரி, யாரும் பாதுகாக்க முடியாது. தேவைக்கு அதிகமா எடுக்கக் கூடாது. பக்கத்துல இருக்கிற தாமரக் குளத்துல குளிக்கக் கூடாது. இவ்வளவு ஏன்? கிணத்துக்குப் போணும்னா 300 அடிக்கு முன்னாடியே செருப்பக் கழட்டிப் போட்டுறணும்னு ஏகப்பட்ட கெடுபிடி.
குதுரய விட்டு இறங்குப்பா
ஒரே ஒருநா மறந்து போய் செருப்போட போயிட்டேன். ‘என்ன தொர, குதுரய (செருப்பு) விட்டு இறங்க மாட்டீரோ?’ன்னு ஒரு பெருசு வஞ்சிவுட்டுருச்சி. இந்த ஊருக்கும் காவிரி திட்டக் குழாய் போட்டுட்டாங்க. இந்தக் குடிதண்ணிக் கிணத்தோட எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்கு.
“யப்பா நிப்பாட்டு. எதுக்குச் சுயபுராணம் பாடுத?”னு நீங்க கேட்பீங்கன்னு தெரியும். குழாய்ல தண்ணி கொண்டுவர்றத நாம கத்துக்கிட்டது வெள்ளக்காரன்கிட்ட இருந்து. அவன் தன்னோட தாய்நாட்டுல இப்பவும் மீட்டர் வெச்சுத்தான் தண்ணி குடுத்துக்கிட்டு இருக்காம் தெரியுமில்ல. “அண்டா கா கசம்... அபு கா ஹுகும்... திறந்திடு சீசே”ன்னு சொல்லத் தெரிஞ்ச நமக்கு, “மூடிடு சீசே”ன்னு சொல்லுற மந்திரம் மட்டும் மறந்துபோச்சே. குழாய வெச்ச அரசாங்கம் மீட்டர் வெக்கக் கூடாதுங்குறோம். சரி, திருகு வெச்சாக்கூடக் கழட்டி எறியுறோமே இது எந்த ஊரு நியாயம்?
கூட்டுக் குடிநீர்த் திட்டத்தக் கூட்டுக் குளிநீர்த் திட்டமா மாத்தப்புடாது. ‘நம்ம ஊர்க் கிணறு, குட்டைய எப்பிடியும் நாசமாக்குவோம்… அரசாங்கம் தான் எத்தன தூரத்துல இருந்தாவது தண்ணி கொண்டாந்துடுமே’ங்கிற எண்ணத்த முதல்ல விடுவோம். மழைக்காலம் தொடங்கப்போவுது. வீட்ல மழைநீரைச் சேமிப்போம். ஊர்க் குளத்துக்குத் தண்ணி போய்ச்சேருதான்னு கொஞ்சம் கவனிப்போம்.
விருதுநகர்காரனுக்குத் தாமிரபரணித் தண்ணியாம், மதுரைக்காரனுக்குப் பெரியாறு தண்ணியாம், மெட்ராஸ்காரனுக்கும் காவிரி (மேட்டூர் அணை) தண்ணியாம். இந்த அதிர்ஷ்டம் எல்லாம் யாருக்குக் கிடைக்கும்? நல்லா குடிங்க. எந்த ஆத்துல தண்ணி வரலன்னு விவசாயி கவலப்படுறானோ, அதே ஆத்த தோண்டித்தான் நமக்குத் தண்ணி கொண்டுவாராங்கங்கிறத மறந்துப்புடாதீங்க. எந்த ஆத்துல மணல் கொள்ளை போனா என்ன? நம்ம வீட்டுக் குழாய்ல தண்ணி வருதான்னு இருக்காதீங்க. ஏன்னா, இப்பிடியே போனா, செவ்வாக்கிரகத்துல இருந்து தாம் தண்ணி கொண்டார வேண்டியிருக்கும்.
- கே.கே.மகேஷ்,
தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in