சிறப்புக் கட்டுரைகள்

வழக்கறிஞர்கள் நீதிக்கான போராளிகளாக இருக்க வேண்டும்!- பிரஷாந்த் பூஷன் பேட்டி

ஜி.சம்பத்

புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரஷாந்த் பூஷன் (64). அவருடைய தாத்தாக்களில் ஒருவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்திருக்கிறார். இன்னொருவர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர், ஜவாஹர்லால் நேருவின் நண்பர். அவருடைய தந்தை சாந்தி பூஷன், தேர்தலில் இந்திரா காந்தி முறைகேடுகள் செய்தார் என்று அவர் மீது 1975-ல் தொடுக்கப்பட்ட பிரபல வழக்கில் ராஜ்நாராயண் சார்பாக நீதிமன்றத்தில் வாதிட்டார். பிற்பாடு மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பிரஷாந்த் பூஷன் அண்ணா ஹசாரே இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மக்கள் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவரான பிரஷாந்த் பூஷனுடனான உரையாடலிலிருந்து…

சட்டத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

1974-லிலிருந்து 1976 வரை நான் இளங்கலை படித்தேன். எனது முதலாம் ஆண்டை முடிக்கும்போது இந்திரா காந்தி தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. அந்த வழக்கு நடைபெறும் நாட்களில் நீதிமன்றத்துக்குச் சென்று வாதப் பிரதிவாதங்களை கவனித்தேன். அதன் பின்பு உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு மேல் முறையீட்டுக்குச் சென்றபோது அங்கும் நான் சென்றேன். அதன் பிறகு, ஆட்கொணர்வு வழக்கு, அதாவது ஏ.டி.எம். ஜபல்பூர் வழக்கு, வந்தது. என் தந்தைதான் மனுதாரரின் பிரதான வழக்கறிஞர். ஆகவே, அந்த வழக்கின் நீதிமன்ற விசாரணைகளையும் நேரில் பார்த்தேன். பிறகு, அந்தக் காலவாக்கில் கேசவானந்த பாரதி வழக்கின் மறு ஆய்வும் இடம்பெற்றது. அந்த வழக்கில் நானி பல்கிவாலா வாதிடுவதைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. ஆகவே, சட்டம் தொடர்பான உயர்தர அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன, எனக்கும் சட்டம் என்பது சுவாரசியமான விஷயமாகத் தோன்றியது. இந்திரா காந்தி வழக்கைப் பற்றி ‘இந்தியாவை உலுக்கிய வழக்கு’ (தி கேஸ் தட் ஷூக் இந்தியா) என்ற புத்தகத்தை எழுதினேன். எனினும், எனக்கு அதிகமாகத் தத்துவத்தின் மீதே ஆர்வம் இருந்தது.

ஆனால், நீங்கள் தத்துவ அறிஞராக ஆகவில்லை அல்லவா?

நான் தத்துவம் படிக்க விரும்பினாலும் இந்தியாவில் தத்துவத் துறைகள் மிக மோசமாக இருப்பதை உணர்ந்தேன். நான் தத்துவம் படிக்க வேண்டுமென்றால் வெளிநாட்டிலேயே படித்து அங்கேயே வேலை பார்க்க வேண்டியிருந்திருக்கும். எனக்கு சட்டத்தின் மீதும் விருப்பம் இருந்ததால் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படிப்பில் சேர்ந்தேன். ஆனால்,எனது விருப்பத்துக்குரிய தத்துவத்தையும் இயற்பியலையும் முறைசாராத வகையில் படித்தேன். எல்.எல்.பி.படித்துக்கொண்டிருந்தபோது தத்துவத்தின் மீது நான் கொண்டிருந்த ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் அமெரிக்காவின் எம்.ஐ.டி., பிரின்ஸ்டன் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தேன். இரண்டு பல்கலைகளும் என்னைச் சேர்த்துக்கொள்வதாகக் கூறின. கல்வி உதவித்தொகை வழங்கியதால் பிரின்ஸ்டன் பல்கலையை நான் தேர்வுசெய்தேன்.

முதுகலைப் பட்டம் இல்லாமல் எப்படி முனைவர் பட்டப் படிப்புக்கு உங்களுக்கு எப்படி அனுமதி கிடைத்தது?

அமெரிக்காவில் அவர்கள் நெகிழ்வுத் தன்மையோடு நடந்துகொள்வார்கள். அங்கே சென்ற பிறகு என்னைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்ன என்று அவர்களிடம் கேட்டேன். நான் ஏற்கெனவே தத்துவம் குறித்து எழுதியிருந்த இரண்டு கட்டுரைகளை விண்ணப்பத்துடன் அனுப்பியிருந்தேன். மேலும், ‘இந்தியாவை உலுக்கிய வழக்கு’ புத்தகம் அதற்குள் வந்திருந்தது. அதுவும்கூட ஒரு காரணம்.

ஆனால், நீங்கள் அறிவியலின் தத்துவத்தில் முனைவர் பட்டத்தை முடிக்கவில்லை அல்லவா?

அங்கே தத்துவம் மேற்கொள்ளப்படும் விதம் அர்த்தமற்றதாக இருந்தது. எதையும் புரிந்துகொள்வதில் உண்மையான முன்னேற்றம் காணாமல் நிறைய அறிவுஜீவித்தனமான விளையாட்டுகள் மட்டும்தான் நடைபெறுகின்றன. ஆகவே, நான் பாதியிலேயே திரும்பிவந்துவிட்டேன்.

ஆக, தாராளவியக் கல்வியில் முழு வீச்சிலான அனுபவம் உங்களுக்குக் கிடைத்ததல்லவா?

ஆமாம், அறிவியலிலும், வரலாறு, இலக்கியம், தத்துவம் போன்ற கலைப் படிப்புகளிலும் அனுபவம் கிடைத்தது. பிரின்ஸ்டன் பல்கலையில் இரண்டரை ஆண்டுகள் படித்தேன். இயற்பியலாளர்கள், வேதியியலாளர்கள், கணிதவியலாளர்கள், தத்துவ அறிஞர்கள், பொருளியர்கள், பொறியியலாளர்கள் என்று பலரையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அங்கே பல நண்பர்கள் கிடைத்தார்கள். இந்தியாவுக்கு 1982-ல் திரும்பி வந்தேன். எனது இறுதியாண்டு எல்.எல்.பி. தேர்வுகளை பிப்ரவரி 1983-ல் எழுதினேன். பார் கவுன்சிலில் சேர்ந்தேன். இதுதான் எனது சிக்கலான கல்வி அனுபவத்தின் கதை.

வெளிப்படையான சட்ட அமைப்பு இருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் உதவியில்லாமல் மக்களே தங்கள் வழக்குகளை முன்வைக்க வேண்டுமென்றும் நீங்கள் கூறிவருகிறீர்கள். நம் சட்டங்களின் சிக்கலான இயல்பை வைத்துப் பார்க்கும்போது இது கற்பனாவாதம் என்று தோன்றவில்லையா?

குறைந்தபட்சம் சாதாரண வழக்குகளில் மக்களுக்கு அப்படி செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். அமெரிக்காவில் மக்கள் நீதிமன்றம் என்றொரு வழிமுறை இருந்தது. அதில் ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் நீதிமன்றத்துக்கு வெளியே எடுத்துவரப்படும் வழக்குகளை விசாரிப்பார். இரண்டு தரப்புகளும் வழக்கறிஞர்கள் இல்லாமல் வர வேண்டும். வாதி தனது தரப்பை முன்வைப்பார். பிரதிவாதி அதற்கெதிராகத் தனது தரப்பை முன்வைப்பார். இரண்டு பேர் பேசுவதையும் நீதிபதி கேட்பார், சாட்சிகளை விசாரிப்பதற்கு இரண்டு தரப்புகளுக்கும் வாய்ப்பு கொடுப்பார். 20 நிமிடத்தில் அவர் தீர்ப்பளித்துவிடுவார். 1982-ல்என் தந்தை பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு உடல் நலம் தேறிக்கொண்டிருந்தபோது நாங்கள் இருவரும் இந்தநீதிவிசாரணை முறையை 20 நாட்களுக்குப் பார்த்துக்கொண்டிருந்தோம். குறைந்தபட்சம் 60 வழக்குகளுக்காவது தீர்ப்புவழங்கப்பட்டதைக் கண்டோம். கிட்டத்தட்ட எல்லா வழக்குகளிலும் நீதி நிலைநாட்டப்பட்டதை நாங்கள் உணர்ந்தோம்.

அறிவார்ந்த, பொதுப்புத்தியுடைய, நியாய உணர்வும் சமத்துவமும் நீதியுணர்வும் கொண்ட திறமையான நீதிபதியின் முன்பு எந்த வழக்கறிஞரும் இல்லாமலேயே சாதாரண வழக்குகளை நாம் நடத்தலாம் இல்லையா? சில பேர் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இயலாத நிலையில் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் சட்டத் துறை உதவியாளர்களின் உதவியுடனாவது அப்படிப்பட்ட மக்கள் தங்கள் குரலை எழுப்ப வழிவகை செய்தாக வேண்டும், அவ்வளவுதான்.

நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்ட சாட்சியச் சட்டத்தை ஒரே ஒரு பிரிவு கொண்டதாக ஆக்க வேண்டும் என்பார் என் தந்தை, அதாவது ஒரு நிகழ்வு நடந்திருப்பதன் சாத்தியத்தை அதிகப்படுத்திக் காட்டும் அல்லது குறைத்துக் காட்டும் எந்தவொரு சாட்சியத்தையும் அனுமதிக்கலாம் என்று. அதுதான் விஷயம். முதலில், சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு ஒரு தகவல் உதவுகிறதா என்று பார்க்க வேண்டும். அடுத்ததாக, அந்தச் சாட்சியம் அந்தத் தகவலின் உண்மைத் தன்மையை அதிகப்படுத்திக் காட்டுகிறதா அல்லது குறைத்துக் காட்டுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு மேல் எதுவும் தேவையில்லை.

சட்டத் துறையைத் தேர்ந்தெடுக்க விரும்பும் இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?

வெறுமனே பணம் ஈட்டுவதற்கான வழிமுறையாக நினைத்து சட்டத் துறைக்கு வராதீர்கள். வழக்கறிஞர்கள் நீதிக்கான போராளிகளாக இருக்க வேண்டும். ஆகவே, வழக்குகளை எடுத்துக்கொள்ளும்போது நீதியைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.பொதுநலன் சார்ந்த விஷயங்களில் கணிசமான நேரத்தைச் செலவிடுங்கள். நீதித் துறை சீர்திருத்தத்துக்கான இயக்கத்தை வழக்கறிஞர்கள் வழிநடத்தலாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது செய்ததைப் போல அவர்கள் அரசியல் சீர்திருத்தத்துக்கான இயக்கத்தையும் வழிநடத்தலாம். வழக்கறிஞர்கள் தங்கள் மனதையும் கண்களையும் திறந்துவைத்துக்கொள்ள வேண்டும்; சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும், சமூகத்தின் தற்போதைய நிலையை மாற்ற தங்களால் ஆனதைச் செய்ய வேண்டும்.

© ‘தி இந்து’

SCROLL FOR NEXT