சிறப்புக் கட்டுரைகள்

காற்று மாசால் குறிவைக்கப்படும் இளம் தலைமுறை

இந்து குணசேகர்

‘‘நமது குழந்தைகள் சுவாசிக்கத் தூய்மையான காற்றை அளிக்காமல், நவம்பர் 14ஆம் தேதியை குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவதில் என்ன அர்த்தம் உள்ளது. நமது தலைவர்கள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைக் காக்கத் தவறிவிட்டனர்”

- இந்தியாவின் இளம் வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான லிசிபிரியா கங்குஜம் (9) குழந்தைகள் தினத்தன்று எழுப்பிய குரல் இது. இக்குரலில் உள்ள ஆழத்தையும், தீவிரத்தையும் பெருந்தொற்றுக் காலத்தில் கவனிப்பது கூடுதல் அவசியமாகிறது.

ஆம், இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலியாகியுள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் (State of Global Air) கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், “2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாடு காரணமாக பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகளாக இருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காற்று மாசுபாடு காரணமாகப் பலியாகி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய கரோனா தொற்று உலக வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டுள்ளது. கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ள நேரத்தில் காற்று மாசு காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புச் செய்திகளுக்குக் கடந்த காலங்களில் இருந்த சிறு விவாதமும், கவன ஈர்ப்பும் கூட கிடைக்கப் பெறாமல் கடந்து கொண்டிருப்பது வருத்தத்துக்குரிய நிலைதான்.

உண்மையில், காற்று மாசு குறித்த கவனக்குறைவு, துரித நடவடிக்கையின்மை காரணமாக நமது தவறுகளுக்கு அடுத்த தலைமுறைகளைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு உதாரணங்களாகி உள்ளன இக்குழந்தைகளின் உயிரிழப்புகள்.

உலகெங்கிலும் வாழக்கூடிய மக்களில் 91% பேர் காற்று மாசுக்கு ஆளாகின்றனர். இதில் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இறக்கின்றனர். காற்று மாசே மிகப்பெரிய சுகாதார ஆபத்தாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கூறி வருகிறது.

இந்தியாவில் நிகழும் 10.5% மரணம் காற்று மாசு காரணமாக நிகழ்கிறது. காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் குழந்தைகள் கருவிலிருந்தே மாசுபட்ட காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதன் காரணமாகவே குழந்தைகள் உயிரிழப்பு, பிறக்கும்போது குழந்தைகள் எடை குறைவாக இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக உலகம் முழுவதும் இயங்கும் சுகாதார அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் PM 2.5 எனப்படும் காற்றை மாசுபடுத்தும் துகள்கள் அளவு அதிகரிப்பதால் நுரையீரல் நோய்கள் அதிக அளவு ஏற்படுகின்றன.

உலக நாடுகளில் கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்ட PM 2.5 அளவு

காற்றில் உள்ள PM 2.5 - அதன் இயல்பான அளவைவிட ஒரு மைக்ரோகிராம் கூடினால் அந்நகரத்தில் கரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் இறப்பு விகதம் 8% உயரக்கூடும். மேலும், நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓசோன் அதிகம் நிறைந்த மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் கரோனா தொற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு அதிகரிக்கும் என்று சீனப் பல்கலைகழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா, தெற்காசியா போன்ற நாடுகளிலும் காற்று மாசு காரணமாக குழந்தைகள் பலி எண்ணிக்கை அதிகமாகி வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசு குறித்த எச்சரிக்கைகள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த போதிய விழிப்புணர்வுகள் அரசு மற்றும் பொதுமக்களிடையே இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும் என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜியோ டாமின்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“வளர்ச்சியின் பின்னணியில் எடுத்துக்கொண்டால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகள், அவர்களின் உற்பத்தித் தேவைக்கு இந்தியா போன்ற நாடுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணத்துக்கு பனியன் தொழிற்சாலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் பின்னணியில் ஒரே ஒரு காரணம்தான் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த சட்டங்கள் கடுமையானதாக இல்லை. அப்படிக் கடுமையான விதிமுறைகள் இருந்தாலும் அவற்றைப் பின்பற்ற வேண்டியது இல்லை. எளிதாக அனுமதி பெறலாம்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் காற்று மாசு அதிகமாக உள்ளது. இதில் காற்று மாசை எடுத்துக்கொண்டால் வெறும் தொழிற்சாலைகளை மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. அனல்மின் நிலையம், வாகனப் புகை ஆகியவற்றை முதல் காரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். காற்று மாசை எடுத்துக் கொண்டால் குறிப்பாக குழந்தைகள் ஏன் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றால் குழந்தைகள் சுவாசிக்கும் விகிதம் சராசரியாகப் பெரியவர்கள் சுவாசிக்கும் விகிதத்தை விட அதிகம். இதன் காரணமாகவே அவர்கள் அதிகமாக மாசை உள்ளிழுக்கிறார்கள். இதனால் நுண் துகள்களை அவர்கள் அதிகம் உள்ளிழுக்கலாம். இதன் காரணமாகவே குழந்தைகள் அதிகமாக காற்று மாசால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் குழந்தைகளின் சுவாச மண்டலம் பெரியவர்களை ஒப்பிடும்போது வளர்ச்சியடைந்திருக்காது. அவ்வாறு இருக்கையில் சிறு மாசும் குழந்தைகளின் சுவாச மண்டலத்தைப் பாதிக்கலாம். இம்முறையிலயே உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் இறப்பும் ஏற்படுகிறது.

இதற்கு ஒட்டுமொத்தமாக காற்று மாசை மட்டும் கூற முடியாது. காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு சமீபத்தில் உலக நாடுகள் அனல்மின் நிலையங்களைக் கைவிட்டு மறுசுழற்சி ஆற்றலை நோக்கிச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை நாம் மின் தேவைகளுக்கு 60% அனல்மின் நிலையங்களை நம்பியுள்ளது. அவ்வாறு இருக்கையில் நாம் உடனடியாக தொலைநோக்குப் பார்வையை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்காக குறுகியகால திட்டமிடலைத் தொடங்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை வடசென்னையில் அனல்மின் நிலையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏராளம். வடசென்னையை அழிப்பதே இந்த அனல்மின் நிலையங்கள் என்று கூறலாம். இதே பின்னணிதான் பிற தொழிற்சாலைகளுக்கும்.

தொழிற்சாலைகள் வெளியிடும் பசுமையில்லா வாயுக்களின் வெளியீடு வீதிமீறல்கள் எப்போதும் விவாதத்துக்குரியதாகவே உள்ளன. அடுத்து வாகனப் போக்குவரத்தைக் கூறலாம். தனி நபர் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் காற்றில் மாசு அதிகரிக்கிறது. இதனைத்தான் டெல்லி கடந்த சில வருடங்களாக எதிர்கொண்டு வருகிறது. எனவே, தனி நபர் வாகனத்தை கட்டுப்படுத்தலும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துதலும் இதற்குத் தீர்வாக இருக்கும்.

ஜியோ டாமின்

இவை எல்லாம் தவிர்த்து பொதுவெளிகளிலும், மாசு கலந்த காற்று மட்டுமே மாசு என்று கருதுகிறார்கள். உங்கள் வீடுகளின் உள்ளேயும் மாசு உள்ளது. இம்மாதிரியான மாசு காரணமாகவே குழந்தைகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். உட்புற மாசு என்பது விறகு அடுப்புகள் மட்டும் அல்ல. டெஃப்லான் கோட்டினால் செய்யப்ப்பட்ட சமையல் உபகரணங்களாலும் மாசு ஏற்படுகின்றது. குறிப்பாக பெண்கள் இந்தவகை மாசால் பாதிக்கப்படுகின்றனர். வாசனைத் திரவியங்களாலும் மாசு ஏற்படுகிறது. நாம் எரிக்கும் பட்டாசுகள் மூலமும் மாசு ஏற்படுகிறது.

எனவே இவற்றை எல்லாம் முகக் கவசங்களை அணிந்து கட்டுப்படுத்த முடியாது. எனவே இதற்கான மாற்றம் அடிப்படையிலிருந்து தொடங்க வேண்டும். நச்சுக் கழிவுகளை நாம் உற்பத்தி செய்துவிட்டோம் என்றால், அது ஏதாவது ஒருவகையில் நம்மை நோக்கித்தான் வந்து சேரும். இவை நமது உணவுச் சங்கிலிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். வீடுகளில் உருவாகும் மாசைக் குறைப்பதில் நமக்கும் கடமை இருக்கிறது. இம்மாதிரியான அடிப்படைப் புரிதல் நமக்கு ஏற்பட வேண்டும்.

ஒரு சமூகத்தில் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி என்பதை மட்டுமே சார்ந்தது அல்ல. தனி நபரின் தன்னிறைவு, உடல் ஆரோக்கியம் என அனைத்தையும் உள்ளடக்கியதுதான் வளர்ச்சி. வளர்ச்சி குறித்த கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகளின் அரசுகள் இருக்கின்றன. நாமும் இருக்கிறோம்”.

இவ்வாறு ஜியோ டாமின் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் காற்று மாசு காரணமாக ஒரு குழந்தை இந்தியாவில் பலியாகிறது. 1990 - 2017 ஆம் ஆண்டுவரை குழந்தைகள் இறப்புகளில் காற்று மாசு முக்கியப் பங்கை வகித்து வந்திருக்கிறது. இதன் அளவு கடந்த வருடங்களிலும் அதிகரித்தே வந்துள்ளதாக சமீபத்திய சுற்றுச்சூழல் தரவுகள் தெரிவிக்கின்றன.

எனவே, வளர்ச்சி என்ற பெயரில் நமது வருங்காலத் தலைமுறையினரை மாசு சூழ்ந்த உலகத்தில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்காமல், காற்று மாசின் தீவிரத்தை உணர்ந்து அதனைக் குறைக்க மாற்று வழிகளில் சிந்திக்க வேண்டிய காலத்தில் உள்ளோம் என்பதை ஒவ்வொரு அரசும் உணர வேண்டும். அந்த உணர்தலே நமது இளம் தலைமுறையின் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் .

SCROLL FOR NEXT