வடகிழக்கின் பெரும்பான்மையினர் தங்கள் இன அடையாளங்களுக்காகவே போராடுகிறார்கள்
அமைதி ஒப்பந்தம் என்னும் வார்த்தைகளைச் சொன்னாலே பலர் சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 அன்று கையெழுத்தான ‘நாகா அமைதி ஒப்பந்த’மும் இதே சிக்கலைத்தான் சந்தித்தது. இந்த சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்களைக் காட்டிலும் குறை சொன்னவர்கள்தான் அதிகம். போதாக்குறைக்கு, இப்படிக் குற்றம் கண்டுபிடித்தே பெயர் பெற்றவர்கள் பத்திரிகைகளில் நெடுங்கட்டுரைகள் வேறு எழுதினர். போராளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதுதான் அமைதியை நிலைநாட்டும் வழி என நம்புவதுதான் இம்மாதிரியான அறிவுஜீவிகளிடம் உள்ள மிகப்பெரிய சிக்கல்.
இத்தனை காலமாக, கடுமையான ராணுவ நடவடிக்கை கள்தான் வடகிழக்குப் பகுதிகளில் எடுக்கப்பட்டன. அதனால் பலன் ஏதும் இல்லை. உண்மையாகவே நாகாலாந்தில் அமைதி திரும்ப வேண்டுமென்றால், ‘தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து’ அமைப்போடு மட்டும் மத்திய அரசு உடன்படிக்கை ஏற்படுத்திப் பயனில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை நேரடியாக நாகாலாந்தின் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளோடும், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநில அரசியல் தலைவர்களோடும், போராட்டக் குழுக்களோடும் நடத்தப்பட வேண்டும்.
இந்தியா பெருமைகொள்ள முடியுமா?
இதை விடுத்து, கலவரப் பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவ நடவடிக்கைதான் சரி என்னும் நம்பிக்கையின் விளைவைப் பார்த்தீர்களா? ஆயுதப் படை சட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலங்களின் பெரும்பகுதிகள் கலவர பூமியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நான்கு லட்சம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்களுக்கு இங்கு பஞ்சமே இல்லை. இவற்றை எண்ணி இந்தியா பெருமைகொள்ள முடியுமா என்ன? வடகிழக்குப் பகுதிகளில் உள்ள சிக்கல்களை ஒருபோதும் தீர்க்க முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என நம்புகிறவர்களால் உண்டான பிரச்சினைகள்தான் இவை.
‘தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து’ அமைப்புடனான பேச்சுவார்த்தைகூட வன்முறையைச் சமாளிக்கும் நோக்கத்தில் மட்டுமே தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது பேச்சுவார்த்தையில் வெவ்வேறு தரப்பினர் ஈடுபடத் தொடங்கியதால், வன்முறையைச் சமாளிப்பதிலிருந்து வன்முறைக்குத் தீர்வுகாணும் இடத்துக்கு நகர்ந்திருக்கிறது. அதிலும் தற்போது முதன்முறையாகப் பேச்சுவார்த்தைக்கு மனமொத்த ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.
வடகிழக்கு, காஷ்மீர் மக்கள் என்றாலே நம்பத் தகாதவர்கள் என்னும் பார்வைதான் இந்த பிரச்சினைக்கான முக்கியக் காரணம். மறுபுறம் நீங்கள் கவனித்தீர்களானால், இந்தியாவின் மத்திய, கிழக்கு மற்றும் தென்மாவட்டங்களிலும் எவ்வளவோ பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. மாவோயிஸ்ட் போராளிகளின் தாக்குதல் அப்பகுதிகளில் ஏராளமாக உள்ளன. ஆனாலும், அப்பகுதிகள் கலவர பூமிகளாக வரையறுக்கப்படவில்லை. ஆனால், எங்களுடைய ஊர்கள் கலவரப் பகுதிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. எங்கள் வாழ்விடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இப்படி சதாசர்வகாலமும் பதற்றமான சூழலில் வாழும் எங்களுடைய மாநிலத்தில், அரசு மட்டும் சீராகச் செயல்பட வேண்டும் என டெல்லி அரசு எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
நிம்மதியும் அமைதியும்
காஷ்மீருக்கும் வடகிழக்கு மக்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். காஷ்மீர் உட்பூசல்கள் நிறைந்த பூமி. ஆனால், வடகிழக்கின் பெரும்பான்மையினர் தங்கள் இன அடையாளங்களுக்காகப் போராடுகிறார்களே தவிர, தேசிய உணர்வில் எப்போதுமே ஒன்றுபட்டுத்தான் இருக்கின்றனர். அதிலும் நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களைத் தவிர, மற்ற ஐந்து மாநிலங்களில் அவ்வப்போது துப்பாக்கிச்சூடுகள் நடந்தாலும் சீராகத்தான் இயங்குகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த சாதாரண மக்கள் ஆசைப்படுவதெல்லாம் நிம்மதியான வாழ்விடமும், கல்வி பெறும் அமைதியான சூழலும்தான். அவர்கள் கஷ்டப்பட்டுச் சேமித்தவற்றைப் போராளிகளுக்கு அள்ளித்தரத் தயாராக இல்லை. இவற்றை, அரசு சார்பில் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளும் ஆர்.என்.ரவி மனதில்கொள்ள வேண்டும். போதாததற்கு தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து அமைப்பே தூய்ங்காலெங்க் முய்வாஹ் மையமாகக் கொண்டதுதான் எனவும் நம்பப்படுகிறது. ஆனால், மணிப்பூரைச் சேர்ந்த தங்குல் நாகா மக்களைத் தவிர, அவருக்கு ஆதரவாளர்களே கிடையாது என்பதுதான் யதார்த்தம். ஆனால், இந்த உண்மைகளெல்லாம் யாருக்குத் தெரிகிறது?
அடுத்து, இறையாண்மையின் பல்வேறு கோணங்களையும் இருதரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தின் சாரமே இறையாண்மையை மத்திய அரசும் மாநில அரசுகளும் சமமாகப் பகிர்ந்துகொள்வதுதானே. அதைவிடுத்து, மத்திய அரசிடம் தன் அத்தனை அதிகாரங்களையும் ஒப்புக்கொடுத்தது மாநிலங்கள் செய்த தவறு. பலம் வாய்ந்த மாநிலங்கள்தான் பலமான மத்திய அரசை நிறுவ வேண்டுமே ஒழிய, மத்திய அரசு மாநிலங்களைத் தீர்மானிக்கக் கூடாது என்பதுதான் கூட்டாட்சித் தத்துவம். இந்தத் தொலைநோக்குப் பார்வையோடுதான் இந்திய அரசியல் அமைப்பு வடிவமைக்கப்பட்டது.
துப்பாக்கி முனை வேண்டாம்
‘தற்போது வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, இம்மாநிலங்களின் அரசியல் எல்லைகளைத் தீர்மானிப்பதல்ல எங்கள் திட்டம்’ என ஆர்.என்.ரவி தெளிவுபடுத்தினார். குறிப்பாக, அம்மக்கள் ஜனநாயக ஆட்சியை அனுபவிக்க வேண்டுமே தவிர, இனியும் துப்பாகி முனையில் நிறுத்தப்படக் கூடாது எனவும் வலியுறுத்தினார். இவ்விவகாரத்தில் நாகா ஹோகோ குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அமைதி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனச் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் தவறு. நாகா ஹோகோ குழுவினர் தொடர்ந்து அமைதிக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அவ்வளவு ஏன், நாகா சட்டமன்றத்தில்கூட அமைதி ஒப்பந்தத்தை ஆதரித்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வெகுஜன ஊடகங்களில் வெகுகாலமாகப் பரப்பப்பட்ட கருத்துகளுக்குப் புறம்பாக இங்கு பேசப்பட்டவை இருக்கலாம். ஆனால், இவை சொல்லப்பட வேண்டியவை. இந்தக் கட்டுரையும் அத்தகைய முயற்சியே!
கட்டுரையாளர், ‘தி ஷில்லாங் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர்
தமிழில்: ம. சுசித்ரா, © ‘தி இந்து’(ஆங்கிலம்)